Published:Updated:

`தோனி இல்லாமல் சி.எஸ்.கேவா?..' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அணி நிர்வாகம்

தோனி
தோனி ( Twitter )

2021ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் தோனியை நிச்சயம் தக்கவைத்துக் கொள்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

பிசிசிஐ வெளியிட்ட வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பெயர் சேர்க்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஏ கிரேடு பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தோனி, குறைந்தபட்சம் 3 டி20 போட்டிகளிலாவது விளையாடியிருந்தால் மட்டுமே வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் பெயரைச் சேர்க்க பரிசீலிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக தோனிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

தோனி
தோனி
Twitter

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிகள் எதிலும் தோனி விளையாடவில்லை. ஏறக்குறைய 6 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாத தோனி, இனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது சிரமமே என்ற விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கேவில் தோனியுடன் களம்காண்பவருமான ஹர்பஜன் சிங், `தோனி இந்திய அணிக்காக இனிமேல் விளையாட மாட்டார்' என்று கூறியிருந்தார்.

கான்ட்ராக்டை இழந்த தோனி... பின்னணியில் பா.ஜ.க? - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் வெளியாகி சர்ச்சையான நிலையில், ஜார்க்கண்ட் அணியினருடன் இணைந்து தோனி பயிற்சியில் ஈடுபட்டார். அவர் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாகவும் சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் ஜார்க்கண்ட் பயிற்சியாளர் கூறினார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து சி.எஸ்.கே உரிமையாளர் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

தோனி
தோனி
Twitter

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ``எப்போது அவர் ஓய்வு பெறுவார்...எவ்வளவு காலம் அவர் விளையாடுவார்.. என பல விஷயங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நிச்சயம் அவர் விளையாடுவார். அந்த உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இந்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் அவர் கலந்துகொள்வார். அடுத்த ஆண்டு வீரர்கள் ஏலத்தில் அவரை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம். இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றார். மேலும், இந்திய அணிக்காக அவர் விளையாடினாலும் இல்லாவிட்டாலும் நிச்சயம் சி.எஸ்.கேவில் இடம்பிடிப்பார் என்றும் சீனிவாசன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு