Published:Updated:

`டெல்லியை விட மோசம்!' சிட்னியில் புகை சூழ நடந்த கிரிக்கெட் மேட்ச்

புகை சூழ நடந்த கிரிக்கெட் மேட்ச்
புகை சூழ நடந்த கிரிக்கெட் மேட்ச் ( cricket.com.au )

புகைசூழ்ந்த இறுதிநாள் ஆட்டம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் முதல்தர Sheffield Shield கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதை ஆஸ்திரேலியாவின் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் எனச் சொல்லலாம். இதில், நியூசவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. இந்த போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணி வென்றது. ஆனால், இதற்காக அந்த அணி கடுமையாகப் போராட வேண்டியதாக இருந்தது. எதிரணியுடன் அல்ல, இயற்கையுடன். புகைசூழ்ந்த இறுதிநாள் ஆட்டம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

Sheffield Shield ஆட்டம்
Sheffield Shield ஆட்டம்
twitter

இந்த புகை வேகமாகப் பரவி வரும் புதர் தீயினால் உருவானது. இது அங்கு உள்ள பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்களைத் தீக்கு இரையாக்கியிருக்கிறது. இந்த புகையின் காரணமாக சிட்னி மக்கள் யாரும் வெளியில் வந்து ஓடவோ, விளையாடவோ வேண்டாம் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலிலும் இந்த ஆட்டம் இன்று சிட்னி மைதானத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆட்டத்தை நிறுத்தும் அளவுக்கு Air Quality Index (AQI) மோசமாகாததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாள் முழுவதும் தொடர்ந்து AQI கண்காணிக்கப்பட்டு வந்தது. இருந்தும் இது மிகவும் மோசமான சூழல்தான், ஆட்டம் நடத்தப்பட்டிருக்கக்கூடாது எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

களத்தில் விளையாடிய ஓ'கீஃப், "நாளொன்றுக்கு 80 சிகரெட் பிடிக்கும் அளவுக்கு இன்று நிலை மோசமாக இருந்தது. இப்படியான சூழலில் நான் கிரிக்கெட் ஆடியதே இல்லை. எனக்குக் குழந்தைகள் இல்லை, இருந்திருந்தால் வீட்டின் ஜன்னல்களை அடைத்து நானும் பயிற்சி எதுவும் எடுக்காமல் வீட்டிற்குள் இருந்திருப்பேன். இது மிகவும் ஆபத்தான சூழல்" எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

வீட்டுக்குள்ளிருக்கும் காற்று மாசு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? #ExpertOpinion

இந்த ஆட்டத்தில் ஆடிய இன்னொரு பிரபல ஆஸ்திரேலியா வீரரான உஸ்மான் கவாஜா,"மூச்சு விடச் சிரமமாக இருந்தது உண்மைதான். ஆனால் விளையாட முடியாத அளவு மோசமில்லை. அப்படி இருந்திருந்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் காலையில் வந்ததும் டெல்லியில் ஆடுவதைப் போன்றுதான் இருந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.

சிட்னி புகை
சிட்னி புகை
twitter

சமீபத்தில் இந்தியா, வங்கதேசம் இடையே டெல்லியில் நடந்த டி20 போட்டியும் இதே மாதிரியான சூழலில்தான் நடந்தது. ஆனால், இது பார்க்க அதைவிடவும் மோசமாகத் தெரிகிறது. இப்படி சமீபத்தில் மழை தவிர மற்ற சுற்றுச்சூழல் காரணங்களும் விளையாட்டுப் போட்டிகளுக்கு பெரும் தடங்கலாக அமையத் தொடங்கியுள்ளன.

பின் செல்ல