மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசேகரன் (வயது 48). இளங்கலை பட்டதாரி. இவருக்கு ஜெயசெல்வி என்ற மனைவியும் பகவத், வேதாத் என்ற இரு மகன்களும் உள்ளனர். நடுத்தர மீனவக் குடும்பத்தில் பிறந்த இவர் 1997-ல் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். அப்படியே எழுத்து, யோகா, மலையேறுதல் மற்றும் மராத்தான் ஓட்டம் போன்றவற்றிலும் பங்கெடுத்தார்.
இதோடு மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் நற்பணி மன்றம் அமைத்து அதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவி வருகிறார்.

கடந்த 2014 முதல் இன்றுவரை மராத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் இவர், பெரிய மராத்தான் போட்டியில் 100 கி.மீ தூரத்தை 19.15 மணி நேரத்தில் கடந்தார். மராத்தான் அளவீடான 42 கி.மீ போட்டிகளை 8 முறை நிறைவு செய்துள்ளார். மராத்தான் அளவீட்டின் பாதியான 21 கி.மீ போட்டிகளை 30 முறை நிறைவு செய்துள்ளார். அதேவேளை, 45 மாடிக் கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும் உச்சி மராத்தான் போட்டிகளை 4 முறை நிறைவு செய்துள்ளார். மேலும் கலைஞர் நினைவு மராத்தான் 21 கி.மீ போட்டிகளை 2 முறை நிறைவு செய்துள்ளார். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இப்போட்டிகளில் கலந்து கொண்டதோடு, இதுவரை 65 பதக்கங்களை வென்றுள்ளார்.
நேபாள நாட்டில் எவரெஸ்ட் சிகரத்தின் தொடர்ச்சியான பேஸ் கேம்ப் (கடல் மட்டத்திலிருந்து உயரம் 5380 மீ), அன்னபூர்னா பேஸ் கேம்ப் (கடல் மட்டத்திலிருந்து உயரம் 4130 மீ) மற்றும் மலேசியாவின் குனுஸ் லெம்பாங் (கடல் மட்டத்திலிருந்து உயரம் 510 மீ) மலையேற்றத்தையும் நிறைவு செய்துள்ளார். இவருடைய அடுத்த முயற்சி எவரெஸ்ட் உச்சியைத் தொடவேண்டும் என்பதாகும். மேலும் ஏழு கண்டங்களில் இருக்கும் உயர்ந்த மலைகளை ஏறுவதையும் லட்சியமாகக் கொண்டுள்ளார். அதேவேளை, தன்னை தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து சிவசேகரன் கூறுகையில், "நான் சிறுவயதில் கடலுக்கு மீன்பிடிக்கப் போவேன். அது கஷ்டமான தொழில். இயற்கையோடு போராடும் அந்தக் குணம் தற்போது யோகா, மலை ஏறுதல், மராத்தான் போட்டிகளில் எனக்கு ஆர்வத்தைக் கொடுத்து வருகிறது. எனது இந்தப் பயணத்திற்கு முடிவே கிடையாது. வாழ்க்கையில் பிறந்தோம், வாழ்ந்தோம் என இல்லாமல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் சாதிக்க முன் வர வேண்டும்" என்றார்.