பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பூம்... பூம்... பும்ரா!

Jasprit Bumrah
பிரீமியம் ஸ்டோரி
News
Jasprit Bumrah

பாதகங்களைச் சாதகமாக்குவதுதான் ஒரு உலகத்தர வீரருக்கான அடையாளம். பும்ரா அதைத்தான் செய்திருக்கிறார்.

ஸ்ப்ரீத் பும்ரா... விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், மைக்கேல் கிளார்க், ஜோ ரூட் என ஒவ்வொரு தலைமுறை பேட்ஸ் மேனையும் வியக்கவைத்துக் கொண்டிருக்கும் பந்துவீச்சுப் புலி. எவ்விதப் போட்டியுமின்றி விராட் கோலி அணிந்திருக்கும் கிரிக்கெட் மகுடத்திற்கு உரிமை கொண்டாடப்போகும் பாகுபலி!

பேட்களையே பிடித்துப் பழகிய சிறுவர்களின் கைகள் இன்று இவரது பௌலிங் ஆக்சனைப் பயிற்சி செய்துகொண்டிருக்கின்றன. கோலியும், தோனியும் ஆட்கொண்டிருந்த ஃபேஸ்புக் புரொஃபைல் போட்டோக்களை பும்ரா ஆட்கொண்டிருக்கிறார்.

பூம்... பூம்... பும்ரா!

இந்தியாவில் ஒரு பௌலர் இப்படிக் கொண்டாடப்படுவது இதுவரை வழக்கத்தில் இல்லாதது. இஷாந்த், உனத்கட் போன்ற பௌலர்கள் தமிழ் சினிமாக்களில்கூட கலாய் பொருளாக இருந்த நிலையில், இப்படியான ஒரு மாற்றத்தை பும்ரா ஏற்படுத்தியிருக்கிறார் என்பது சாதாரண விஷயம் இல்லை.

இந்த எழுச்சி சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. வெறும் எண்களால் சொல்லக்கூடியதும் அல்ல. தீர்க்கமான முயற்சியால் ஏற்பட்ட முன்னேற்றம் இது. ‘இந்த பௌலிங் ஆக்சனை வைத்துக்கொண்டு அதிக காலம் ஈடுகொடுக்க முடியாது’ என்றார்கள். ‘அடிக்கடி காயம் ஏற்படலாம்’ என்று அச்சுறுத்தினார்கள். ‘கைகளை இப்படிப் பயன்படுத்தினால் ஸ்விங் செய்ய முடியாது’ என்றார்கள். ‘டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கிட்டாது’ என்று ஆருடம் சொன்னார்கள்.

பூம்... பூம்... பும்ரா!

‘அவுட்ஸ்விங் செய்யவே முடியாது’ என்றும் சொன்னார்கள். அவரது வித்தியாசமான பௌலிங் ஆக்ஷனால் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்மீது கேள்வியும் சந்தேகங்களும் எழுந்துகொண்டேதான் இருந்தன. ஆனால், அனைத்திற்கும் பதில் சொல்லியிருக்கிறார் பும்ரா, அதே வித்தியாசமான பௌலிங் ஆக்சனால் !

கிரிக்கெட் வீழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். மாற்றங்கள் செய்யவேண்டும் என்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டின் அடிப்படையிலும் அந்த மாற்றத்தைப் புகுத்திவிடுகிறார்கள். அதனால்தான் சரிவில் விழுந்த இந்த விளையாட்டால் மீள முடியவில்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், ஒரு விஷயத்தின் உண்மைத்தன்மையில் ஏற்படும் மாற்றம்... அஸ்திவாரத்தில் ஏற்படும் மாற்றம், அதைச் சுற்றி எழுப்பப்படும் எப்பேர்ப்பட்ட கோட்டையையும் ஆட்டம் காணச் செய்துவிடும். பும்ரா, இதில் புத்திசாலி. பும்ரா என்ற அந்த விசித்திர பௌலரை உருவாக்கிய எந்த விஷயத்தையும் மாற்றவில்லை. தன் அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யாமல், தன்னை மெருகேற்றிக்கொண்டே இருந்தார்.

மிகச் சிறிய இடத்தில், டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்ததால், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் வெகுதூரம் ஓடிவந்து பந்துவீசப் பழகவில்லை.

பூம்... பூம்... பும்ரா!

அந்தச் சிறிய இடத்திலேயே ஓடிவந்து தன் மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துக்கு வேகம் கொடுத்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஆடியபோதும் சரி, சர்வதேச அரங்கில் ஆடியபோதும் சரி, அவர் ஓடிவருவதற்கு நிறையவே இடம் இருந்தது. ஆனால், பும்ரா அதைச் செய்யத் தயாராக இல்லை. தான் யாரோ, தன்னை உருவாக்கியது எதுவோ அதை அப்படியே தொடர்ந்தார்.

அந்த ரன்-அப்பிற்குப் பிறகான தன் ஒவ்வொரு அசைவிலும் ஆச்சர்யத்தைப் புதைத்துவைத்திருந்தார். அதுதான் அவருக்கு ஒவ்வொரு நாளும் விக்கெட்டுகளையும் முன்னேற் றத்தையும் பரிசளித்தது. லைன் & லென்த்தில் துல்லியமாகப் பந்து வீசினார். தன் முழங்கையை மடக்காமல் அற்புத யார்க்கர்கள் வீசினார். தன் கைகளைப் பார்த்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவுக்கு வேரியேஷன்கள் காட்டினார். இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இருபக்கமும் பந்தை மூவ் செய்து மிரட்டினார். பௌன்ஸுக்கு ஒத்துழைக்காத ஆடுகளங்களிலும் பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்களைப் பதம் பார்த்தார். ஷார்ட் லென்த்தில் பிட்சாகும் பந்துகளை, பௌன்ஸ் ஆகாதவகையிலும் வீசினார். எல்லாம் 140 கிலோமீட்டர் வேகத்தில்!

இயான் பிஷப் போன்ற ஜாம்பவான்களே ‘பும்ராவின் பந்துவீச்சைப் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று வியந்தார்கள். அதைப் புரிந்துகொள்ள முற்படவேண்டாம் என்றார்கள் வல்லுநர்கள். ராக்கெட் அறிவியல், மேக்னஸ் எஃபெக்ட், லேமினார் ஃப்ளோ, டர்ப்யூலன்ட் ஃப்ளோ என இயற்பியல் உதவிகொண்டு பும்ரா எனும் அதிசயத்தைப் புரிந்துகொள்ள முற்பட்டனர் பலர்.

ஆம், பும்ரா எனும் இந்த அதிசயத்தைப் புரிந்துகொள்ள கிரிக்கெட் தெரிந்தால் மட்டும் போதாது. அதன் ஒவ்வொரு அசைவையும் அனுபவிக்க வேண்டுமெனில், ஆச்சர்யப்பட வேண்டுமெனில், சிலாகிக்கவேண்டு மெனில் அந்த அறிவியலும் புரியவேண்டும்.

பாதகங்களைச் சாதகமாக்குவது தான் ஒரு உலகத்தர வீரருக்கான அடையாளம். பும்ரா அதைத்தான் செய்திருக்கிறார். எந்தெந்த விஷய மெல்லாம் அவருக்கு நெகட்டிவ் என்றார்களோ, இன்று அதைத்தான் பாசிட்டிவ் என்று கொண்டாடு கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியாது என்றவர்களுக்கு, ஹாட்ரிக் விக்கெட்டோடு சாதித்துக் காட்டியி ருக்கிறார். மொத்த உலகமும் வியந்த, வியக்கும் வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் ஜாம்பவான்களே வியந்து பேசும் அந்த வார்த்தைகள் போதும்... அதற்கு மேல் அவரைப் புகழ்வதற்கு வார்த்தைகள் கிடையாது.

சச்சின், தோனி, கோலி என்று பேட்ஸ்மேன் களையே மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட்டுக்கு மாற்றுப்பாதை காட்டியிருக்கிறது இந்த வேகப் புயல்!

“அந்த வேகம், அந்த அக்ரஸன், அந்தத் திறமை, தரமான பேட்ஸ்மேன்களைத் தடுமாற வைக்கும் அந்த வியூகம், அவர்களின் திட்டங்களைத் தகர்த் தெறியும் ஆற்றல்... இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அவர் நிச்சயமாக எங்களுள் ஒருவராக இருந்திருப்பார். அவர் ஒரு முழுமையான பௌலர். எந்தக் காலகட்டத்திலுமே அவரால் விளையாடி யிருக்க முடியும்!”

- கர்ட்லி ஆம்ப்ரோஸ், வெஸ்ட் இண்டீஸ்

“பும்ரா மட்டும் எங்கள் காலகட்டத்தில் பிறந்திருந்தால், அவரை நிச்சயமாக எங்கள் பந்துவீச்சுக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டிருப்போம். கணிக்க முடியாத ஒரு வித்தியாசமான பௌலர்தான் எங்கள் பந்துவீச்சில் இல்லாமலிருந்தார். சொல்லப்போனால், பும்ரா போன்ற ஒரு பௌலரைத்தான் எங்களால் உருவாக்கவே முடியவில்லை.”

பூம்... பூம்... பும்ரா!

- ஆண்டி ராபர்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ்

வரிடம் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலான பௌலர்களின், பௌலிங் ஆக்ஷனில் இருக்கும் நேர்த்தியும் அழகும் அவரிடம் இல்லை. எக்ஸ்ட்ரா பௌன்ஸ் ஏற்படுத்துகிறார். மிகப்பெரிய ரன் - அப் இல்லை; மெதுவாகவே ஓடிவருகிறார். தன் ஆற்றலைச் சரியாகச் சேமித்துவைக்கிறார். பலமாகப் பந்தை பிட்ச் செய்கிறார். கொஞ்சம்கூட அவரிடம் பயமில்லை. பேட்டிங் செய்வது யார் என்பது பற்றிய கவலையில்லை. அதுதான் அவரை வெற்றிபெற வைத்திருக்கிறது.

பூம்... பூம்... பும்ரா!

- சர் விவியன் ரிச்சர்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ்