Published:Updated:

`டெஸ்ட் 143... அதுதான் ரொமான்ஸ்!’ - சேவாக் சொல்லும் லாஜிக்

சேவாக்
சேவாக்

``ஒரு வீரனின் முழுமையான திறமை மற்றும் மனஉறுதியை சோதிக்கும் களமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளன" என்று சச்சின் கூறியிருந்தார்.

`ரசிகர்களைக் கவர வேண்டியது முக்கியம்தான். அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென நாம் எதையாவது விட்டுவைக்க வேண்டாமா?' எனக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான ஐசிசியின் புதிய யோசனை குறித்துதான் சச்சின் இப்படி பேசியிருந்தார். 143 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாள்களாகக் குறைக்கலாம் என்பதுதான் ஐசிசியின் அந்த யோசனை.

சச்சின்
சச்சின்

இனி வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐ.சி.சி பரிசீலனை செய்து வருகிறது. ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருநாள், டி-20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு டெஸ்ட் போட்டிகளுக்கு இல்லாததே ஐசிசியின் இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி!’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள்கூட டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தைக் கூட்டும்விதமாகத்தான் ஐசிசி அறிமுகப்படுத்தியது. பிங்க் பால் போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை ஈர்க்கும் ஒரு யுக்திதான். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாள்களாகக் குறைக்கும் புதிய திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாகக் கிளம்பியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகக் குறைக்கும் திட்டத்துக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

எல்லா வகையிலான ரசிகர்களையும் திருப்திப்படுத்த ஒருநாள் மற்றும் டி- 20 போட்டிகள் இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏதாவது விட்டுவைக்க வேண்டாமா என்பதே கிரிக்கெட் வீரர்கள் வைக்கும் வாதமாக இருக்கிறது. டி-20, ஒருநாள் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கலாம், டெஸ்ட் கிரிக்கெட்தான் ஒரு வீரனை உருவாக்கும். டெஸ்ட் போட்டிக்குத் தரமான ஆடுகளம் அமைந்தாலே விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் தானாக வந்துவிடும் என்கிறார்கள் முன்னாள் கிரிக்கெட்டர்கள்.

`ஒரு வீரனின் முழுமையான திறமை மற்றும் மனஉறுதியை சோதிக்கும் களமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளன’ என சச்சின் கூறியிருந்தார். இந்தப்பட்டியலில் தற்போது இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் இணைந்துள்ளார். `கிரிக்கெட்டில் புதுமைகளை நான் வரவேற்பவன்தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மீது எனக்கு ஒரு காதல் இருக்கிறது. அதைச் சீர்குலைக்க நான் விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

சேவாக்
சேவாக்

இதுகுறித்துப் பேசியுள்ள சேவாக், ``மாற்றங்களை நான் எப்போதும் வரவேற்பவன். இந்திய அணியின் முதல் டி-20 கேப்டனாக நான்தான் இருந்தேன். அதை நினைத்து பெருமை கொள்கிறேன். 2007-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் நான் இடம்பெற்றிருந்தேன். ஆனால் 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ரொமான்ஸ். ஜெர்ஸியில் பெயர் பதிப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் நிறப் பந்துகளைப் பயன்படுத்துவது சிறப்பானது. 143 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் திடமாகத்தான் இருக்கிறது. அதற்கு ஆன்மா இருக்கிறது. அதைக் கலைக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு