Published:Updated:

ரோஜர் ஃபெடரரின் தொடர் தோல்விகள்… 20 வயது இளைஞனாக மாறத் துடிக்கும் 40 வயது மாவீரனின் போராட்டம்!

ரோஜர் ஃபெடரர்
News
ரோஜர் ஃபெடரர் ( Kirsty Wigglesworth )

சரியாக இன்னும் ஒரு மாதத்தில் அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதியோடு 40 வயதை நிறைவு செய்கிறார் ஃபெடரர். இந்த வயதுக்கே உரிய பிரச்னைகளோடு இப்போது தடுமாறுகிறார். இளம் வீரர்களோடு போட்டி போடக்கூடிய வகையில் அவருடைய கால்கள் வேகமாக இல்லை. அவருடைய சர்வில் இருந்த அந்த துல்லியமும் இல்லை.

‘’விம்பிள்டன் டென்னிஸில் ரோஜர் ஃபெடரர் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி!’’

2018-ம் ஆண்டு ஜூன் மாதம் எழுதப்பட்ட இந்தச் செய்தியை நேற்றைய செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆம், நேற்றும் விம்பிள்டன் காலிறுதிப்போட்டியில் ஹூபர்ட் ஹர்காஸ் எனும் இளம் வீரரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர். 2018 ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றபிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு கோப்பைக்காகப் போராடி வருகிறார் ஃபெடரர். ஆனால், அதிர்ச்சித் தோல்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர். விம்பிள்டன் இவரது களம். நடால், ஜோகோவிச்சுடன் ஒப்பிடும்போது அதிக விம்பிள்டன் கோப்பைகளை வென்றவர் ஃபெடரர். 8 முறை விம்பிள்டன் கோப்பையை வென்றிருக்கிறார். பீட் சாம்ப்ராஸின் சாதனையான 7 விம்பிள்டன் கோப்பைகளை முறியடித்து சாதனைப் படைத்தவர் ஃபெடரர். கடந்த மூன்று ஆண்டுகளாக விம்பிள்டனுக்குள் நம்பிக்கையோடு நுழைகிறார். ஒவ்வொரு ஆண்டும் அதிர்ச்சி தோல்விகளே பரிசாக கிடைக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
2018-ல் காலிறுதியில் தோல்வியடைந்தவர், 2019-ல் இறுதிப்போட்டிவரை முன்னேறி ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார். 2020-ல் கொரோனா காரணமாக விம்பிள்டன் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டும் காலிறுதியில் தோல்வி அடைந்திருக்கிறார் ஃபெடரர்.
ரோஜர் ஃபெடரர்
ரோஜர் ஃபெடரர்
Kirsty Wigglesworth

தொடரும் தோல்விகள் என்பதைவிட டென்னிஸின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என கொண்டாடப்படும் ஃபெடரரின் தோல்விகள் மிகவும் பரிதாபகரமாக இருப்பதுதான் கவலையளிக்கிறது. டென்னிஸ் ரேங்கிங்கில் 18வது இடத்தில் இருக்கும் 24 வயது வீரரான ஹூபர்ட் ஹர்காஸிடம் மூன்றாவது செட்டை 6-0 என ஒரு புள்ளிகூட பெறாமல் ரோஜர் ஃபெடரர் தோற்றது ரசிகர்களை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2002-க்குப்பிறகு முதல்முறையாக நேர் செட்களில் ஃபெடரர் தோற்கிறார் என்பதோடு ஒரு புள்ளிகூட பெறாமல் ஒரு செட்டை தோற்பது என்பது அவரது கரியரில் இது மூன்றாவது முறை மட்டுமே.

சரியாக இன்னும் ஒரு மாதத்தில் அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதியோடு 40 வயதை நிறைவு செய்கிறார் ஃபெடரர். இப்போது இந்த வயதுக்கே உரிய பிரச்னைகளோடு தடுமாறுகிறார். இளம் வீரர்களோடு போட்டி போடக்கூடிய வகையில் அவருடைய கால்கள் வேகமாக இல்லை. அவருடைய சர்வில் இருந்த அந்தத் துல்லியம் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோல்விகளை இப்போது சந்திக்க ஆரம்பித்தவர் இல்லை ரோஜர் ஃபெடரர். 2013-ம் ஆண்டில் இருந்தே சரிவு தொடங்கிவிட்டது. 2017 ஆஸ்திரேலிய ஓப்பன் வரை எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் ரோஜர் ஃபெடரர் வெல்லவில்லை. ஆனாலும், அவர் ஆட்டத்தை கைவிடவில்லை. 2014, 2015 விம்பிள்டன், 2015 அமெரிக்க ஓப்பன் போட்டிகளில் தொடர்ந்து ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார் ஃபெடரர். அப்போதே ஓய்வுகுறித்த கேள்விகள் துரத்த ஆரம்பித்துவிட்டன. ஆனாலும், அதே கேள்விகளுடன் 8 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் ஃபெடரர். இது ஃபெடரரின் கரியரில் இரண்டாவது பெரிய பிரேக். 2018 ஆஸ்திரேலிய ஓப்பனுக்குப்பிறகு இன்னும் எந்த கிராண்ட்ஸ்லாமையும் அவர் வெல்லவில்லை.

ஃபெடரர்
ஃபெடரர்
Kirsty Wigglesworth

2021 டென்னிஸின் மாவீரனுக்கு விடை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். ஆனால், ஓய்வு முடிவை அவ்வளவு எளிதாக எடுத்துவிடும் எண்ணத்தில் ஃபெடரர் இல்லை. தனது கரியரின் கடைசிப்படியில் நிற்கிறோம் என்பது ஃபெடரருக்கும் தெரியும். ஆனால், வெற்றியோடு விடைபெற வேண்டும் என விரும்புகிறார். ஆனால், அவர் எதிர்பார்க்கும் அந்த ஒரு வெற்றிக்கு அவர் உடலும், கண்களும் ஒத்துழைப்புத் தர மறுக்கின்றன. 40 வயதில் 20 வயது இளைஞனாக ஆடவேண்டும் என்று துடிக்கிறார் ஃபெடரர். ஆனால், அது நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கிறது.

‘’அடுத்து என்ன என நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. உண்மையில் நான் என்னசெய்யப்போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. நான் மீண்டும் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டும் என விரும்புகிறேன். விம்பிள்டனுக்குப் பிறகு அடுத்து என்ன என்று எப்போதும் என் அணியினரோடு உட்கார்ந்து பேசுவேன். இப்போது விம்பிள்டன் முடிந்துவிட்டது. சில நாள் ஓய்வுக்கு பிறகு நாங்கள் மீண்டும் பேச வேண்டும். 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு என் விளையாட்டில் இருந்த பல விஷயங்கள் இப்போது என்னிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பல விஷயங்களை நான் இழந்திருக்கிறேன். ஆனால், நிச்சயமாக நான் அவற்றையெல்லாம் சரிசெய்ய விரும்புகிறேன். என் வயது, என் விளையாட்டு குறித்து என் மூளையில் சில விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் அந்த முடிவை நான் போகிற போக்கில் எடுத்துவிட முடியாது. எனக்கு நேரம் வேண்டும். நான் நன்றாக இருப்பேன்’’ என்று விம்பிள்டன் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார் ரோஜர் ஃபெடரர்.

தோல்வியோட அல்ல, வெற்றியோடு ஓய்வை அறிவிக்கவேண்டும் என விரும்புகிறார் இந்த மாவீரன். மாவீரனின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?!