Published:Updated:

`90-ஸ் கிட்ஸ்' கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா? #Tennis

டென்னிஸ்
டென்னிஸ்

``இது பிக் 3 Era. இந்த பிக் 3-ன் காலகட்டத்திலேயே நான் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல விரும்புகிறேன்."

உத்தி, கவனம், துல்லியம் மற்றும் வேகம். இவை நான்கும் ஒரே மீட்டரில் இருக்கும் வீரர்கள் மட்டுமே ஜொலிக்கக்கூடிய விளையாட்டு டென்னிஸ். அப்படியான டென்னிஸ் விளையாட்டிற்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி உலகெங்கும் பரவி இருக்கும் டென்னிஸ் ரசிகர்கள் மனதில் நீண்ட நாள்களாக ஒரு கேள்வி இருந்து வருகிறது.

`1990-களில் பிறந்து வளர்ந்த `90-ஸ் கிட்ஸ்' டென்னிஸ் வீரர்களுள், ஒருவர்கூட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடியாதது ஏன்?'
ஜோகோவிச்
ஜோகோவிச்
#AusOpen

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் 80-களில் பிறந்த சீனியர் ப்ளேயரான ஜோகோவிச்சை எதிர்கொண்டார் 90-ஸ் தலைமுறையைச் சேர்ந்த டொமினிக் தீம். கடுமையாகப் போட்டியிட்டும் ஜோகோவிச்சை, தீமால் வீழ்த்த முடியவில்லை. 90-களில் பிறந்த டென்னிஸ் வீரர்கள் கடந்த தசாப்தத்தில் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம்கூட வெல்லவில்லை என்ற ஏக்கத்தை இந்த தசாப்தத்தின் தொடக்கத்திலேயே தீர்த்து வைப்பார் தீம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

2000-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டில் முடிவுற்ற தசாப்தத்தில் 1980-களில் பிறந்த 8 வீரர்கள் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றிருந்தனர். ஆனால், கடந்த தசாப்தத்தில் (2010-2019) 1990-களில் பிறந்த வீரர்கள் ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும் கிராண்ட் ஸ்லாம் பட்டமென்பது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துள்ளது. 2000-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான தசாப்தத்தில், டென்னிஸ் வீரர் Marat Safin, 70-ஸ் தலைமுறையைச் சேர்ந்த சீனியர் ப்ளேயரான பீட் சாம்ப்ராஸை அமெரிக்க ஓப்பன் இறுதிப் போட்டியில் வீழ்த்தி, 80-ஸ் தலைமுறையினரின் கிராண்ட் ஸ்லாம் கணக்கை 2000-ம் ஆண்டிலேயே தொடங்கி வைத்தார்.

அதன்பின் லெய்டன் ஹெவிட், ஜுவான் கார்லோஸ் ஃபெரீரோ, ரோஜர் பெடரர், ஆண்டி ராடிக், ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச் மற்றும் ஹுவான் மார்டின் டெல் போட்ரோ ஆகியோரும் அந்த தசாப்தத்திலேயே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று தங்களது கணக்கைத் தொடங்கினர்.

`கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்' பட்டங்களுக்கு அடுத்த படியாக டென்னிஸில் பார்க்கப்படுவது 'ஏடிபி டூர் சாம்பியன்' பட்டம். கடைசி மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவிலான ஏடிபி இறுதிப் போட்டிகளிலும் 90-களில் பிறந்த வீரர்கள்தான் சாம்பியன் பட்டம் வென்றனர். அதுவும் 2018-ம் ஆண்டின் ஏடிபி இறுதிப் போட்டியில் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்சை முதல் இரண்டு செட்களிலேயே வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார் 90 கிட்ஸான அலெக்சாண்டர் வெர்வ்! ஆனால், கிராண்ட் ஸ்லாம் என்று வந்து விட்டால் சீனியர்களின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது.

கிராண்ட் ஸ்லாம் பட்டத்தின் மதிப்பு அதிகமென்பதால் சீனியர் வீரர்கள் இதில் அதிக கவனம் செலுத்துவதுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஏடிபியின் டாப் 10 டென்னிஸ் வீரர்கள் பட்டியலில், பிக் 3 என்றழைக்கப்படும் ஜோகோவிச், நடால் மற்றும் ஃபெடரர் ஆகிய மூவரும் முறையே முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். நான்காவது இடத்தில், இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிடம் போராடித் தோற்ற டொமினிக் தீம் உள்ளார். இவர் ஏற்கெனவே 2 பிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டிகளை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் இறுதிப் போட்டியில் நடாலிடம் தோல்வியுற்ற டேனி மெட்வெதவ் 5-வது இடத்தில் உள்ளார்.

Top 10 ATP Rankings
Top 10 ATP Rankings
Vikatan Infographics
ஏடிபி டாப் 10 டென்னிஸ் வீரர்கள் பட்டியலில், 4 பேர் மட்டுமே 80-களில் பிறந்தவர்கள். மீதமுள்ள 6 பேரும் 90-களில் பிறந்தவர்களே!
ATP RANKINGS (Top 10, Men's Single)

1990-களில் பிறந்த டென்னிஸ் வீரர்கள் கிராண்ட் ஸ்லாமில் ஆதிக்கம் செலுத்த முடியாததற்குக் காரணமாக டென்னிஸ் வல்லுநர்கள் சிலரால் சொல்லப்படும் காரணங்களைப் பார்ப்போம்.

தற்போதுள்ள தொழில்நுட்பம், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி ஆகியவற்றின் தரம் கடந்த காலங்களைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உயர்தர வசதிகள், ஒரு வீரரை 35 வயதுக்கு மேலும் டென்னிஸ் விளையாட வைக்கிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் 40 வயது வரைகூட விளையாடுகிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் ரோஜர் ஃபெடரர். அருக்கு இப்போது வயது 38. நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓப்பனில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறினார். அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் போராடித் தோல்வியடைந்தார் ரோஜர். சீனியர் வீரர்கள் களத்தில் நீடிப்பது நிச்சயம் ஜூனியர் வீரர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

TOP 3 Players With Most Grand Slams
TOP 3 Players With Most Grand Slams
Vikatan Infographics

1980-களில் பிறந்த வீரர்கள், 2000-களிலிருந்து விளையாடி வருவதால் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதோடு வலிமையாகவும் திகழ்வதுதான், 90-களில் பிறந்த வீரர்கள் கிராண்ட் ஸ்லாம் வெல்ல முடியாததற்குக் காரணம் என்கிறார்கள் டென்னிஸ் வல்லுநர்கள். 80-களில் பிறந்த வீரர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்ததில்லை. காரணம், தற்போதுள்ள உயர்தரம் வாய்ந்த பயிற்சிகள் அப்போதில்லை என்பதால், 1970–களில் பிறந்த வீரர்கள், சீக்கிரமே ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

டென்னிஸ் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களாகக் கருதப்படும் ஜோகோவிச், நடால், ஃபெடரர் ஆகிய மூவரும் இருக்கும் காலகட்டத்தில் வேறொருவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் டென்னிஸ் உலகில் முன் வைக்கப்படுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இதுவரை நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அவற்றுள் அதிக முறை பட்டம் வென்றவர்கள் முறையே ஃபெடரர், நடால், ஜோகோவிச்தான். வலிமையும் திறமையும் நிறைந்திருக்கும் இந்த மூன்று பேர்தான் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை என்பதை நிரூபிக்கிறது இந்தப் புள்ளி விவரம்.

டென்னிஸ் வரலாற்றில், தலை சிறந்த 3 வீரர்கள் ஒரே காலகட்டத்தில் விளையாடுவது இதுவே முதல் முறை. அதன் காரணமாகத்தான் மற்ற வீரர்கள் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வது கடினமாக இருக்கிறது. இது பிக் 3 Era. இந்த பிக் 3-ன் காலகட்டத்திலேயே நான் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல விரும்புகிறேன்.
டொமினிக் தீம்

கடந்த தசாப்தத்தில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓப்பன், அமெரிக்க ஓப்பன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓப்பன் என 40 கிராண்ட் ஸ்லாம் தொடர்கள் நடைபெற்றன. அதில் 33 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது 80-களில் பிறந்த பிக் 3தான்! மீதமுள்ள 7 முறையும் 80-களின் வீரர்களே பட்டம் வென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BIG 3
BIG 3
Vikatan Infographics

அடுத்த தசாப்தம் தொடங்கி விட்டது. இந்த தசாப்தத்தில் நிச்சயம் 90-களில் பிறந்த வீரர்கள் சாதிப்பார்கள். டொமினிக் தீம் 3 முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் விளையாடி சீனியர் ப்ளேயர்களுக்கே டஃப் கொடுத்திருக்கிறார். அலெக்ஸாண்டர் வெர்வ், 2018-ம் ஆண்டு ஏடிபி அரையிறுதிப் போட்டியில் ஃபெடரரையும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சையும் வீழ்த்தி அதிர்ச்சியைப் பரிசாக அளித்துள்ளார். ஹாப்மேன் கப் டென்னிஸ் போட்டியிலும் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரைத் தோற்கடித்துள்ளார் வெர்வ். இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில 90-ஸ் கிட்ஸ் வீரர்களும் சீனியர்களுக்கு டஃப் கொடுத்துள்ளனர். 90-களில் பிறந்தவர்களின் ஆதிக்கம் இப்போதுதான் அரும்பத் தொடங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பிக் 3 உட்பட 80-களில் பிறந்த டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த தசாப்தத்தில் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால், சீனியர்கள் ஓய்வு பெற்ற பின் ஜெயிப்பது 90-கிட்ஸ் வீரர்களுக்குக் கெத்தை ஏற்படுத்தாது. எனவே, சீனியர் ப்ளேயர்கள் ஓய்வு பெறுவதற்குள் அவர்களை கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் வீழ்த்துவதிலும், இந்த தசாப்தத்தில் 2000-களில் பிறந்த வீரர்களுக்கு டஃப் கொடுப்பதிலும் அடங்கி இருக்கிறது 90-ஸ் கிட்ஸ் டென்னிஸ் வீரர்களின் கெத்து!

இன்னும் இந்த ஆண்டில் மூன்று கிராண்ட் ஸ்லாம் தொடர்கள் மீதமிருக்கிறது. அதில் 90-களில் பிறந்த வீரர்கள் ஜெயித்து, கிராண்ட் ஸ்லாமில் தங்களது தலைமுறையின் கணக்கைத் தொடங்கி வைப்பார்கள் என்று நம்புவோம்!
ஒரே ஷாட்... ஒரே பாயின்ட்... ஆட்டம் மாறியது... மாற்றியது ஜோக்கோவிச் எனும் மாவீரன்! #Australianopen
அடுத்த கட்டுரைக்கு