உலக டென்னிஸ் அரங்கில் கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடர்கள் மிக முக்கியமானவை. உலகின் டாப் வீரர்கள் மல்லுக்கட்டும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்குபெறுவதே பெரும் கெளரவமாகக் கருதுவார்கள் வீரர்கள். தற்போது, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது.

கடந்த 19-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், முதலில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் புயல் ஒன்று. இதில் தகுதிபெற்ற அவர், முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்காக, இந்தியாவைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவந்தனர். ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்த்தும் அவருக்குத் தேவைப்பட்டது. காரணம், அவர் தனது முதலாவது சுற்றில், டென்னிஸ் உலகின் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
``யு.எஸ் ஓப்பனுக்குத் தகுதிபெற்றதற்கு வாழ்த்துகள் சுமித் நாகல். உங்களுக்கு பெரும் போட்டி ஒன்று இருக்கிறது. கிரேட் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளப்போகிறீர்கள். ஆனால், நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம். குட்லக்!” - இது, இந்திய அணியின் கேப்டன் கோலியின் வாழ்த்து.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``ஃபெடரருக்கு எதிரான ஆட்டத்தின்போது, வர்ணனையாளர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள் என்பதுகுறித்து எனக்கு கவலை இல்லை. நான், இந்தியாவிலிருந்து வந்துள்ள சாதாரண வீரர். நான், எனது பெயரைப் பதிவுசெய்யும் வரை இதுவே எனக்கு போதும்.”- முதலாம் சுற்றுகுறித்து சுமித் நாகல்.

இன்று, தனது முதலாவது சுற்றில் ஃபெடரரை எதிர்த்துக் களம் கண்டார். உலகின் முன்னணி வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற பயமில்லாமல், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, இந்தியாவில் இருக்கும் அநேக ஊடகங்களிலும் சுமித் பெயர் இடம்பெறத் தொடங்கியது.
சமூக ஊடகங்களிலும் சுமித் நாகல் என்னும் பெயர் டிரெண்டாக ஆரம்பித்தது. அடுத்த இரு செட்டுகளை 6-1, 6-2 என்று ஃபெடரர் கைப்பற்றினார். ஃபெடரர் முதல் செட்டில் பின்தங்கி, பின்னர் முன்னேறிவருவது புதிதல்ல. 4 -வது செட்டில் ஃபெடரருக்கு மீண்டும் டஃப் கொடுத்தார், சுமித். இறுதியில், இந்த செட்டை 6-4 எனக் கைப்பற்றினார், ஃபெடரர். இறுதியில், 6-4, 1-6, 2-6, 4-6 என தோல்வியைத் தழுவினார், சுமித்.

ஃபெடரருக்கு கிராண்ட் ஸ்லாம் தொடரில் கிடைத்த மற்றொரு வெற்றி. அவ்ளோதான். ஆனால், சுமித்துக்கு இது காலம் கடந்து மனதிலே நிற்கும் ஒரு போட்டியாக இருக்கும். இன்று, இந்தியர்கள் பலரது கேள்வியும் ஒன்றுதான்... யார் இந்த சுமித் நாகல்?
சுமித், ஹரியானா மாநிலம் ஜயித்பூர் கிராமத்தில், சுரேஷ் நாகல் - கிருஷ்ண தேவி நாகல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை சுரேஷ் நாகல் ஓர் ஆசிரியர். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் `மிஷன் 2018’ தேர்வில் முதலாவது பேட்சில் இடம்பெற்ற சுமித், பின்னர் கனடா பயிற்சியாளர் பாபி மஹாலிடம் பயிற்சிபெற்றார்.

2014 -ம் ஆண்டில், ஜெர்மனியில் இருக்கும் டென்னிஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து பயிற்சிபெற்றுவந்தார். இவர், உலக அளவில் கவனம்பெற்றது 2015 -ம் ஆண்டில். அப்போது நடைபெற்ற ஜூனியர் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடரில், வியட்நாமைச் சேர்ந்த லி ஹோயங் நாம் என்ற வீரருடன் இணைந்து, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதைத் தொடர்ந்து, 2017 -ம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூரு ஓப்பன் தொடரில் தன்னைவிட ரேங்கில் முன்னணியில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி பட்டம் வென்றார். இந்தத் தொடரில், அரை இறுதியில் யூகி பாம்பரியை வென்று, இந்திய டென்னிஸில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார்.

தற்போது, சிங்கிள்ஸ் போட்டியில் கவனம் செலுத்திவரும் சுமித், இன்று யு.எஸ் ஓப்பனில் ஃபெடரரை எதிர்த்து விளையாடி, தன்னை நம்பிக்கையான வீரர் பட்டியலில் இடம்பெறச் செய்துவிட்டார். தற்போது 22 வயதாகும் சுமித், அடுத்து வரும் தொடர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
இந்திய டென்னிஸில் இளம் வயதிலே பெரும் கவனம் பெற்றிருந்தாலும், சர்ச்சைகளுடனேயே வளர்ந்துவந்துள்ளார். தனது 19 வயதில், ஸ்பெயின் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று, பின்னர் ஒழுக்கக்கேடு காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.