Published:Updated:

செரீனா vs ஷரபோவா - முதல் சுற்றிலேயே அமர்க்களமாகத் தொடங்கும் அமெரிக்க ஓப்பன்! #USOpen

அமெரிக்க ஓப்பன் draw-ன் ஒரே பாதியில் இருக்கும் ஃபெடரர், ஜோகோவிச் இருவரும் தொடர்ந்து முன்னேறும் நிலையில், அவர்கள் அரையிறுதியில் மோதுவார்கள்.

Serena Williams and Mario Sharapova
Serena Williams and Mario Sharapova

செரீனா வில்லியம்ஸ் vs மரியா ஷரபோவா என்ற அசத்தல் யுத்தத்தை முதல் சுற்றிலேயே பார்க்கப்போகிறது இந்த ஆண்டின் அமெரிக்க ஓப்பன் தொடர். 20-ம் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாமான இந்தத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் 26-ம் தேதி தொடங்குகின்றன. ஜோகோவிச், நடால் இருவர் மட்டுமே இதுவரை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருக்கும் நிலையில், ஃபெடரர் பட்டம் வெல்வாரா, ஜோகோவிச்சின் ஆதிக்கம் முற்றுப்பெறுமா என்பதைத் தெரிந்துகொள்ள டென்னிஸ் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

கடந்த 19-ம் தேதியிலிருந்து இந்தத் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்று இரவு வரை தகுதிச் சுற்று நடக்கவிருக்கும் நிலையில், எந்தெந்த வீரர்கள் யாருடம் மோதப்போகிறார்கள் என்ற பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது.

Federer
Federer

நம்பர் 1 வீரரான, நடப்பு அமெரிக்க ஓப்பன் சாம்பியன் நோவக் ஜோகோவிச், ஸ்பெய்ன் வீரர் ராபர்டோ கார்பெலாஸ் பேனாவைச் சந்திக்கிறார். தரவரிசையில் 77-வது இடத்தில் இருக்கும் பேனா, இந்த ஆண்டுதான் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓப்பனின் முதல் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். அதனால் ஜோகோவிச்சுக்குப் பெரிய சவால் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. நான்காவது சுற்றில் ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா அல்லது தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோரில் ஒருவரை சந்திக்க வேண்டியிருக்கும்.

2018 ஆஸ்திரேலிய ஓப்பனுக்குப் பிறகு, கிராண்ட் ஸ்லாம் ஏதும் வெல்லாத ரோஜர் ஃபெடரர், தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் வீரர் ஒருவருடன் முதல் சுற்றில் மோதவிருக்கிறார். அமெரிக்க ஓப்பன் draw-ன் ஒரே பாதியில் இருக்கும் ஃபெடரர், ஜோகோவிச் இருவரும் தொடர்ந்து முன்னேறும் நிலையில், அவர்கள் அரையிறுதியில் மோதுவார்கள். அதேசமயம், ரஃபேல் நடால் இரண்டாவது பாதியில் இருப்பதால், ஃபெடரர் அல்லது ஜோகோவிச் இருவரில் ஒருவரை ஃபைனலில்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நடால், தன் முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனைச் சந்திக்கிறார்.

Nadal & Djokovic
Nadal & Djokovic

29 வயது தமிழக வீரர் பிரஜ்னேஷ் கன்னேஷ்வரன், முதல் சுற்றில் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் டெனில் மெத்வதேவுடன் மோதுகிறார். தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் முன்னணி அர்ஜென்டின வீரர் ஹுவான் மார்டின் டெல் போட்ரோ, காயத்தால் இந்தத் தொடரிலிருந்து வெளியேறினார்.

மகளிர் பிரிவில், நடப்பு அமெரிக்க ஓப்பன் சாம்பியன் நவோமி ஒசாகா, ரஷ்ய வீராங்கனை ஆனா பிலின்கோவாவைச் சந்திக்கிறார். தொடர்ந்து இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று அட்டகாச ஃபார்மில் இருந்தவர், பிரெஞ்சு ஓப்பனுக்குப் பிறகு ஒரு சரிவைச் சந்தித்துவிட்டார். இப்போது மீண்டும் அமெரிக்க மண்ணில், தன் ஃபார்மை நிரூபிக்கக் காத்திருக்கிறார் இந்த 21 வயது ஜப்பான் புயல்! இறுதிப் போட்டிக்குப் போகும் முன், அவர் சிமோனா ஹாலப் அல்லது பெட்ரோ க்விட்டோவா ஆகியோரைச் சந்திக்க நேரிடலாம்.

Serena Williams
Serena Williams

நடப்பு பிரெஞ்சு ஓப்பன் சாம்பியனும், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான ஆஷ்லி பார்டி, ஜரினா டியாஸுடன் முதல் சுற்றில் மோதுகிறார். இந்த முதல் சுற்றின் மிகமுக்கியப் போட்டி, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா மோதுவது. ஷரபோவா சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டதால், அவருக்கு அமெரிக்க ஓப்பனுக்கான seeding கொடுக்கப்படவில்லை. அதனால், இப்போது அவர் செரீனா வில்லியம்ஸைச் சந்திக்க வேண்டியுள்ளது.