
30 வயதை தாண்டிய ஃபெடரர், நடால், ஜோகோவிச்,செரினா சொல்வது ஒன்றுதான். ``நாங்கள் இன்னும் டொக்கு ஆகல ”
“என் டென்னிஸ் வாழ்க்கையில் மிக அதிகமாக மனவலிமையை சோதித்த ஆட்டம் இது தான்”ஜோகோவிச்
ஜோகோவிச் விம்பிள்டன் ஃபைனலில் ஃபெடரரை வென்றப் பிறகு சொன்ன வார்த்தைகள் இவை. நான்கு மணி நேரம் 57 நிமிடம் அந்த புல் தரையில் இங்கும் அங்கும் ஓடி ஓடி சோர்வடைந்தப் பிறகு உடலுழைப்பை தாண்டி மனவலிமையை சோதித்தது என ஜோக்கோவிச் சொல்கிறார். ஆம்! ஜோகோவிச்சிற்கு உடல் வலிமையை விட மனவலிமையைத் தான் அந்த விம்பிள்டன் ஃபைனல் சோதித்தது.
விம்பிள்டன் ஃபெடரரின் கோட்டை. ஒவ்வொரு முறை அந்த புல் தரையில் அவர் காலெடுத்து வைக்கும் போதும் இவருக்காக ஆதரிக்க ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் ஆஜராகிவிடும். ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் “கம்ம்ம்மான்…. ரோஜர்” என்கிற குரல் ஒலிக்கும். ஃபெடரர் ஆட்டத்தில் பின்தங்கியே இருந்தாலும் அவருக்காக ஒலிக்கும் அந்த குரல்களின் டெசிபல் குறையாது. அது ஃபெடரருக்கே உண்டான ரசிகர் கூட்டம். அந்த சூழ்நிலையில், 10 பேர் ‘ரோஜர்’ என கூச்சலிடுவதை தாண்டி, ஒருவர் ‘நோவக்’ என கத்தும் குரலைக் கேட்டு மோட்டிவேட் ஆகி வெல்ல வேண்டும் என்றால் அது சாதரண விஷயம் இல்லை தானே.
அதுமட்டுமா? இரண்டு சாம்பியன்ஷிப் பாயின்ட்டுகள் பின்தங்கியுள்ளார் ஜோக்கோ. ஒரு சிறிய தவறு எல்லாவற்றையும் இழக்கச் செய்துவிடும். அதிலும் சர்வ் ஃபெடரரிடம் உள்ளது. ஃபெடரரின் சர்வை அந்த செட்டிலும் சரி, அதற்கு முந்தைய செட்டிலும் சரி இவர் ப்ரேக் செய்யவில்லை. அப்படி ஒரு நிலைமையில் 15,000 மக்கள் “ரோ…ஜர்” என கூச்சலிட்டு அவரின் வெற்றியை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அந்த சூழ்நிலையில் இரண்டு சாம்பியன்ஷிப் பாயின்டை தடுத்து சமன் செய்ததுமட்டுமில்லாமல் ஃபெடரரின் சர்வையும் ப்ரேக் செய்கிறார் ஜோக்கோவிச். சென்டர் கோர்ட்டில் கூடியிருந்த 15,000 மக்களும் சாம்பியனுக்காக இன்னும் சில மணி நேரம் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் அவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்த்த ஃபெடரர் சாம்பியனாகவில்லை. அந்த மனவலிமையை சோதிக்கும் சூழ்நிலையை வென்று ஜோக்கோவிச் 5-வது முறையாக விம்பிள்டன் சாம்பியனானார்.

இப்படி ஜெயிப்பது ஜோக்கோவிச்சுக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் ஜோக்கோவிச் என்கிற அரக்கனுக்கு அதுதான் பிடிக்கும். சில வீரர்க மக்களின் உற்சாக குரலைக்கேட்டு மோட்டிவேட் ஆவார்கள். சிலர் ‘`உன்னால் இது முடியாது’’ எனச் சொன்னால் அவர்களின் கனக்கை பொய்யாக்கி “என்னால் முடியாதது எதுவும் இல்லை” என இந்த உலகுக்கு நிரூபிக்க போராடுவார்கள். ஜோக்கோவிச் இதில் இரண்டாவது ரகம். அவருக்கு தன் பெயர் மைதானம் சுற்றி ஒலிப்பதை கேட்பதை விட எதிரில் விளையாடுபவரின் பெயரைக் கேட்கும் போது, உலகமே தனக்கு எதிராக இருப்பதாக எண்ணி, அதை உடைத்து வெற்றிப்பெறுவதுதான் ஜோகோவிச்சுக்கு பிடித்த வேலை. அன்றும் அது தான் நிகழ்ந்தது.
தன் மனவலிமையை ஜோக்கோவிச் நிரூபித்தது எப்படி?
ஃபைனலில் 85 சதவீதம் முதல் செட்டை வென்றவர்கள்தான் சாம்பியனாகியிருக்கிறார்கள். ஆம்! ஃபைனலில் முதல் செட்டை கைப்பற்றுவது மிக முக்கியம். அதனால் முதல் செட்டை எப்படியாவது போராடி வென்று விட வேண்டும் என இருவீரர்களும் களத்தில் மல்லுக்கட்டினர். முதல் செட் டை பிரேக்கர் வரைச் சென்றது. டை பிரேக்கரில் 5-3 என ஃபெடரர் முன்னிலையில் இருந்தார். கூடியிருந்த ரசிகர்கள்(ரோஜரின் ரசிகர்கள்) உற்சாகமானார்கள். அந்த சமயத்தில் தொடர்ந்து நான்கு பாயின்ட்டுகள் எடுத்து முதல் செட்டை கைப்பற்றினார் ஜோக்கோவிச். இருந்தும் அந்த செட்டில் ஜோக்கோவிச்சின் செயல்பாடு சிறப்பாக இல்லை. சர்வை துள்ளியமாக ரிட்ட செய்வதில் ஜோக்கோவிச் சிறந்து விளங்குவார். ஆனால் ஃபெடரருடனான ஃபைனலில் அதில் திணறினார். அதுமட்டுமில்லாமல் அவர் எப்போதும் கையிலெடுக்கும் டிஃபென்ஸ் என்னும் ஆயுதத்தையும் பலமுறை ஃபெடரர் உடைத்தார். முதல் செட்டில் அந்த டை பிரேக்கர் வரை சிறப்பாக விளையாடியவர் ஃபெடரரே.

மூன்றாவது செட்டும் டைப்ரேக்கர் வரை சென்றது. இந்த செட்டிலும் ஜோகோவிச் ஆயுதமான சர்வ் ரிட்ட சரியாக வரவில்லை. இருந்தும் ஃபெடரர் ஃபோர்ஹாண்ட் ஷாட்களில் சொதப்பியதால் அந்த செட்டையும் வென்றார் ஜோக்கர். மூன்றாவது செட் முழுக்க 65 முறை நெட் அருகே சென்று அதில் 51 முறை வெற்றிக் கண்ட ஃபெடரர் அந்த டை பிரேக்கரில் நெட்ப்ளே செய்யத் தயங்கினார். பேஸ்லைன் ஆட்டம் அவருக்கு கைக்கூடவில்லை. ஜோ அந்த டை பிரேக்கரையும் வென்றார். ஐந்தாவது செட் தொடங்கியது. சாம்பியன் யார் என நிர்ணயிக்க போகும் செட். இருவரும் அப்போதுதான் முழுவீச்சில் ஆடத் தொடங்கினர். ஜோ பேட்டியில் சொன்ன வார்த்தைகளின் காரணி இந்த செட்தான்.
ரசிகர்கள் ஒரு பக்கம் ‘ரோ...ஜர்’ என ஆரவாரம் செய்ய, தன்னுடைய கேமும் தான் எதிர்ப்பார்த்தபடி அவருக்கு வரவில்லை. அப்படி இருக்கும் போது உடல் வலிமையை விட மனவலிமை தான் மிகவும் முக்கியம். மனதளவில் தன்னை தயார்ப் படுத்திக்கொண்டு போராடினார். இறுதியில் வெற்றியும் கண்டார். ஃபெடரரின் ஏஸ் சர்வ்கள் ஜோக்கோவிச்சைவிட 15 அதிகம். ஃபெடரரின் வின்னர்கள் ஜோக்கோவிச்சைவிட 40 அதிகம். ஃபெடரர் எடுத்த பா கூட ஜோவிச்சைவிட 14 அதிகம். இவ்வளவு ஏன் ஒவ்வொரு செட் முடியும் போதும் “FEDERER WAS THE BETTER PLAYER” என்று கமென்டரியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆம்! ஞாயிறு நடந்த அந்த ஃபைனலில் எல்லா விதத்திலும் ஜோக்கோவிச்சைவிட ஃபெடரரே சிறந்து விளங்கினார்.

ஆனால் மிக முக்கியமான சமயங்களில் ஜோகோவிச்சின் மனபலத்துடன் கூடிய உடல்பலம் அவருக்கு கைக்கூடி வந்தது. ஆட்டத்தில் மூன்று முறை டை பிரேக்கர் வந்தது. மூன்று முறையும் ஜோ அதில் வெற்றிக்கண்டார். விளையாட்டில் இதுபோலும் நடக்கலாம். தோல்வியுற்றவர் வெற்றியடந்தவரைவிட சிறப்பாக விளையாடிய நா குறைவுதான். ஆனால் ஃபைனலில் அப்படிதான் நடந்தது.
இத்தனை போட்டிகளில் தன்னுடைய அசாத்திய டிஃபென்சாலும், டெக்னிக்காலும் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த ஜோ அன்று தன்னுடைய மனவலிமையால் அனைவரையும் கவர்ந்தார். சாம்பியன்ஷிப் பாயிண்டை எடுத்ததும் 15,000 பேர் சூழ்ந்திருந்த அந்த ரசிகர்களை பார்த்து சிரித்தார். அந்த சிரிப்பில் “உங்கள் கனிப்பு தவறாகிவிட்டது” என்று சொல்லாமல் சொன்னார் ஜோக்கர். அதைச் செய்துவிட்டு எப்போதும்போல் அந்த கோர்டில் இருக்கும் புல்லை பிடிங்கிச் சாப்பிட்டார். இதற்கு முன் நான்கு முறை வென்று, இதுபோன்று செய்திருக்கிறார்.ஜோவிச் சாப்பிட்ட புற்களில் மிகவும் ஸ்வீட்டாக இருந்தது இந்த முறை அவர் சாப்பிட்டதாகத்தான் இருக்கும். ஆம் போராடி பெறும் வெற்றியில் தானே இனிப்பு அதிகமாக இருக்கும்.

மீண்டும் ஒரு கிராண்ட் ஸ்லாம், மீண்டும் பிக் 3 என சொல்லப்படும் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் இவர்கள் மூவரில் ஒருவர்தான் இந்த முறையும் ஒரு சாம்பியனாகியிருக்கிறார். சொல்லப்போனால் இந்த விம்பிள்டனின் காலிறுதியில் ஒருவர் கூட 25 வயதிற்கு மேலானவர்கள் இல்லை. பெண்கள் பிரிவில் குழந்தை பெற்ற பிறகும் இன்னும் அசால்டாக ஃபைனல் வரை செல்கிறார் செரினா. 30 வயதை தாண்டிய ஃபெடரர், நடால், ஜோகோவிச்,செரினா சொல்வது ஒன்றுதான். ``நாங்கள் இன்னும் டொக்கு ஆகல பாய்ஸ் ”