கட்டுரைகள்
Published:Updated:

சீன டிராகனும் தமிழகப் போராளியும்!

சீன டிராகனும் தமிழகப் போராளியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சீன டிராகனும் தமிழகப் போராளியும்!

நெஞ்சம் மறப்பதில்லை-11

`MS Dhoni - The Untold Story' திரைப்படத்தை கிரிக்கெட் விரும்பிகள் பெரும்பாலும் பார்த்திருப்போம். அதில், சிறுவயது தோனி, பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருப்பது போல ஒரு காட்சி. தோனி, அடித்து வெளுத்துக்கொண்டிருக்க, அவரின் ஜூனியர் சிறுவன் ஒருவன் மைதானத்திலிருந்து பள்ளிக்குள் ஓடிவந்து `தோனி கலக்குறான்... தோனி கலக்குறான்...' எனப் பள்ளி முழுவதும் செய்தியைச் சொல்லி, கூட்டத்தைத் திரட்டிக்கொண்டு ஆட்டத்தைப் பார்க்கச் செல்வான். படத்தில் பார்க்கையில் இந்தக் காட்சி புல்லரிப்பைக் கொடுக்கும். இதுபோன்றதொரு சம்பவத்தை நிஜத்திலும்!

2021இல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்துகொண்டிருந்த நேரம். ஒலிம்பிக்ஸ் போட்டிகள் என்பவை கிரிக்கெட் போட்டிகள் போன்று அல்ல. ஒரே சமயத்தில் பல போட்டிகளும் நடக்கும். ஒன்றை ஃபாலோ செய்தால், இன்னொன்றை ஃபாலோ செய்வது கடினமாக இருக்கும். வேறேதோ போட்டியை ஃபாலோ செய்துகொண்டிருந்தபோது, திடீரென சீனியர் ஒருவரிடமிருந்து வாட்ஸ் அப் மெசேஜ். `டேய் தம்பி... மா லாங் கூட நம்ம ஆளு மிரட்டுறான். டக்குனு பாரு..' என்பதுதான் செய்தி. நான் ஃபாலோ செய்து கொண்டிருந்த ஆட்டத்தை விட்டுவிட்டு, டேபிள் டென்னிஸ் பக்கமாக வந்தேன். அவர், `நம்ம ஆளு' எனக் குறிப்பிட்டிருந்தது, இந்திய அணிக்காக ஆடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமலைத்தான். `நம்ம ஆளு மிரட்டுறான்...' அந்த வார்த்தையே பெரும் சுவாரஸ்யத்தையும் புல்லரிப்பையும் கொடுத்திருந்தது. ஏனெனில், சரத் கமல் எதிர்த்து ஆடிய மா லாங் அப்படிப்பட்ட ஒரு வீரர்.

சீன டிராகனும் தமிழகப் போராளியும்!
சீன டிராகனும் தமிழகப் போராளியும்!

மா லாங், சீனாவைச் சேர்ந்தவர். `The Dragon', `The Dictator' போன்றவைதான் இவருக்கான அடைமொழிகள். `டிராகன்' சீனாவில் கடவுளாக வணங்கப்படும் சமாச்சாரம். `Dictator' என்றால் `சர்வாதிகாரி.' ஆக, இந்த இரண்டு அடைமொழிகளிலிருந்தே மா லாங் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். டேபிள் டென்னிஸ் உலகின் `GOAT' அவர். யாராலும் வீழ்த்தவே முடியாத, தான் நினைத்ததை மட்டுமே செய்யக்கூடிய அடம்கொண்ட சர்வாதிகாரி அவர். டேபிள் டென்னிஸ் களத்தில் அவர் வைத்ததுதான் சட்டம்.

சரி, இந்த அளவுக்கு பில்டப் கொடுக்க... மா லாங் அப்படி என்னதான் சாதித்திருக்கிறார்? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், `அவர் எதை சாதிக்கவில்லை?' என ரசிகர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

18 வயதிலேயே டேபிள் டென்னிஸில் உலக சாம்பியன்; 2010 லிருந்து 2015 வரை தொடர்ந்து 64 மாதங்கள் உலகின் நம்பர் 1 வீரர்; அதன்பிறகு, மீண்டும் ஒரு 34 மாதங்கள் யாராலும் அசைக்க முடியாதபடி நம்பர் 1 இடம் என கம்பீரம் காட்டியவர், காயம் காரணமாக இடையில் கொஞ்ச காலம் ஓய்வெடுத்தார். காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் உலக சாம்பியன் ஆனார். இப்போது உலகளவிலான தரவரிசையில் 4-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

ஒலிம்பிக்ஸ் சாதனைகள் என எடுத்துக்கொண்டால், அது நீண்டுகொண்டே செல்லும். 2012-ல் அணிகள் பிரிவில் தங்கம், 2016-ல் அணிகள் பிரிவு + தனிநபர் பிரிவு என இரண்டு தங்கம். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தனிநபர் பிரிவில் தங்கம். அதைத் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்ஸ்களில் டேபிள் டென்னிஸின் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். மேலும், இதே டோக்கியோவில் மா லாங் ஆடிய அணியும் தங்கம் வென்றது. அதன்மூலம் ஒலிம்பிக்ஸில் அதிக பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் எனும் வரலாற்றுச் சாதனையையும் செய்தார்.

மா லாங்கின் வேகத்தை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. உவமைக்காகவெல்லாம் இல்லை. நிஜமாகவே, வானத்திலிருந்து ஒரே ஒரு மின்னல் கீற்று மட்டும் இறங்கி வந்து தாங்கமுடியாத அதிர்ச்சியைக் கொடுப்பதைப் போன்றுதான் அவரின் ஆட்டம் இருக்கும். ஒரு ரோபோவைப் போலத்தான் ஒரு நொடிக்குள்ளிருக்கும் சிறுதுளி நேரத்திற்குள் எதிராளியைக் காலி செய்யும் மாபெரும் மூவ் செய்துவிடுவார். மா லாங்கின் ஆட்டத்தை ரசிக்க டேபிள் டென்னிஸைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியம் இல்லை. லாஜிக்கையெல்லாம் தாண்டிய வசீகரம் ஒன்று அவரின் ஆட்டத்தில் இருக்கும். அதுவே உங்களை டேபிள் டென்னிஸின் ரசிகராக மாற்றிவிடும்.

சீன டிராகனும் தமிழகப் போராளியும்!
சீன டிராகனும் தமிழகப் போராளியும்!

இப்படிப்பட்ட மா லாங்கிற்கு எதிராகத்தான் அந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் களத்தில் தமிழக வீரரான சரத் கமல் ஒரு மாபெரும் யுத்தத்தையே நிகழ்த்தினார். வெற்றியிலும் சாதனையிலும் வேண்டுமானால் சரத் கமல், மா லாங்கை எட்ட முடியாத இடத்தில் இருக்கலாம். ஆனால், அனுபவத்தில் சரத் கமல், அவரைவிட பெரியவர். மா லாங்கை விட அதிக ஒலிம்பிக்ஸ் தொடர்களில் ஆடியவர். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றதில்லை என்றாலும், ஒரு பேரனுபவத்தைத் தனக்குள் பொதிந்து வைத்திருப்பவர். மா லாங்கிற்கு எதிராக அந்த அனுபவத்தின் வழியேதான் ஒரு போரையே நிகழ்த்தினார்!

5 கேம் வரை நீண்ட அந்தப் போட்டியில் முதல் மூன்று செட்களும் பயங்கர நெருக்கமாகச் சென்றிருக்கும். மா லாங்கின் மின்னல் வேகத்திற்கு எதிராக தன்னுடைய நிதானத்தை ஆயுதமாக்கியிருப்பார் சரத் கமல். முதல் கேமில் 11-7 என மா லாங் வென்றுவிடுவார். இரண்டாவது கேமை 8-11 என சரத்கமல் வென்று பதிலடி கொடுத்திருப்பார். உச்சபட்ச சர்வாதிகாரியின் கோட்டையைத் தகர்க்காவிடிலும் அந்தக் கோட்டைச்சுவரின் ஒற்றைச்செங்கல்லையாவது உருவி எடுத்ததைப்போலதான் இந்த கேமின் வெற்றி சரத் கமலுக்கு அமைந்தது. ஏனெனில், இதைக்கூட மா லாங்கிற்கு எதிராக பலராலும் செய்ய முடியவில்லை என்பதுதான்.

இப்போது மூன்றாவது கேம்... இதுதான் சரத் கமலுடைய போராட்டத்தின் உச்சமாக இருந்தது. எளிதில் வெல்லலாம் என நினைத்த மா லாங்கை, கடைசி கேம் பாயின்ட்டை எடுப்பதற்குள் நடுநடுங்க வைத்தார். ஒரு கேமை வெல்ல மா லாங் இவ்வளவு பெரிதாக உழைக்க வேண்டும் என்பதே பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அதற்குக் காரணமானவர் சரத் கமல். நெருக்கமாகச் சென்ற அந்த கேமை, மா லாங் 13-11 என வென்றார். சரத் கமலுக்குத் தோல்விதான். ஆனாலும் சரத் கமல் வெளிக்காட்டிய `Fighting Spirit' பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

சீன டிராகனும் தமிழகப் போராளியும்!

38 வயதான சரத் கமல் அந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸோடு ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், மா லாங்குடனான அந்தப் போட்டியை முடித்த சிலமணி நேரத்தில் சரத் கமல் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தார். அதில், `நான் இப்போது ஓய்வுபெறுவதாக இல்லை. பாரீஸ் ஒலிம்பிக்ஸிலும் ஆட முயல்வேன். போராடுவேன்!' என்றார். அதைக் கேட்கையிலேயே பெரும் உத்வேகம் எழுந்தது. சொன்னதோடு மட்டுமல்லாமல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் துடிப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார். பதக்கங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார். அவரின் போராட்டக் குணத்துக்கேற்ப பாரீஸிலும் வெற்றிக்கொடியை நாட்ட வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்!