
நெஞ்சம் மறப்பதில்லை-5
விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் விடைபெறல் தருணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவரை மாபெரும் ஆளுமைகளாக ஒரு தனிப்பெரும் நாயகர்களாக பார்க்கப்பட்டவர்களின் இன்னொரு முகத்தை, அதாவது அவர்களின் மனவெளியின் மெல்லிய பக்கங்களை அந்த விடைபெறல் தருணங்களில் காண முடியும். இதுவரை தாங்கள் கட்டி ஆண்ட மைதானத்தில் தங்களின் கடைசி நொடி இருப்பை எப்படி வெளிக்காட்டுவதெனத் தெரியாமல் மனம் வெதும்பி கண்ணீர் சிந்துவார்கள். சக வீரர், வீராங்கனைகளுமேகூட அவர்களின் பிரிவுக்காக வருந்தித் துயருறுவார்கள். விடைபெறப்போகும் அந்த வீரரைத் தோளில் ஏற்றிக் கொண்டு மைதானம் முழுவதும் பவனி வருவார்கள்.
இதெல்லாம் நாம் பல சமயங்களில் பல விளையாட்டுகளில் பார்த்தவைதான். சச்சின் தொடங்கி சானியா மிர்சா வரை பலரின் விடைபெறல் தருணங்களில் இவைதான் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இந்த வழக்கத்தைக் கடந்து சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்திருந்தது. விடைபெறல் இலக்கணங்களையெல்லாம் மீறி நிகழ்ந்த அதிசயம் அது. இருபெரும் எதிராளிகளாக பாவிக்கப்பட்டவர்களில் ஒருவரின் விடைபெறலுக்கு இன்னொருவர் தேம்பித் தேம்பி அழுத கதையைக் கேட்டிருக்கிறீர்களா?

ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் கோர்ட்டைக் கட்டி ஆண்ட பெரும் ஜாம்பவான். அமெரிக்காவைச் சேர்ந்த பீட் சாம்ப்ராஸ், ஃபெடரரின் முந்தைய தலைமுறை ஜாம்பவான். முன்னாள் நம்பர் 1 வீரர் அவர். 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 2009 வரை டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் எனும் பெருமை சாம்ப்ராஸ் வசம்தான் இருந்தது. நிலையானதென்று எதுவுமே இல்லையே. சாம்ப்ராஸின் சாதனைகளையும் அவரின் வல்லாதிக்கத்தையும் முறியடித்துப் புதிய அத்தியாயத்தை உருவாக்க ஓர் இளைஞர் கிளம்பி வந்தார். அவர்தான் ரோஜர் ஃபெடரர். வெறும் 19 வயதிலேயே விம்பிள்டனில் பீட் சாம்ப்ராஸை வீழ்த்தி டென்னிஸ் உலகின் புதிய நாயகனாக அறியப்பட்டார் ஃபெடரர்.
அதிலிருந்து ஃபெடரர் தொட்டதெல்லாம் ஹிட்தான். ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு தலைமுறைக்கான வீரராக ஃபெடரர் மாறினார். 2009 வரைதான் பீட் சாம்ப்ராஸுக்கு அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் எனும் பெருமை இருந்ததாகக் குறிப்பிட்டேன் அல்லவா?
2009-ல் பீட் சாம்ப்ராஸிடமிருந்து அந்தப் பெருமையைப் பறித்துக்கொண்டவர் யார் தெரியுமா... ஃபெடரர்தான். டென்னிஸ் உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் எனும் பீட் சாம்ப்ராஸின் சாதனையை ஃபெடரர் முறியடித்தார். அதுவரை யாரும் எட்டியிராத உயரத்தை ஃபெடரர் எட்டினார். ஆங்கிலத்தில் ‘Greatest Of All Time - GOAT' எனக் கூறுவார்களே... அந்த நிலையை ஃபெடரர் எட்டிவிட்டார்.

காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது. நாள்கள் ஓடுகின்றன. இப்போது ஃபெடரரைத் தாண்டியும் டென்னிஸ் உலகில் இன்னொரு கதாநாயகன் அவதரிக்கத் தொடங்கினான். ஃபெடரரால் சாம்ப்ராஸின் சாதனைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போல ஃபெடரரின் சாதனைகளுக்கு அந்தப் புதிய நாயகன் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கினான். அது வேறு யாருமல்ல. இன்றைய தேதிக்கு அதிக கிராண்ட்ஸ்லாம்களை கையில் வைத்திருக்கும் ரஃபேல் நடால்தான் அது. ஃபெடரரின் ஒவ்வொரு சாதனையையும் நடால் குறிவைத்துத் துவம்சம் செய்தார். பீட் சாம்ப்ராஸை விம்பிள்டன் களத்தில் வீழ்த்தி ஆதிக்கத்தைத் தொடங்கிய ஃபெடரர், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக 5 முறை விம்பிள்டன் பட்டங்களை வென்றிருந்தார். ஃபெடரரின் அந்த ஆதிக்கத்திற்கு முடிவுரை எழுதி அவர் கையிலிருந்து விம்பிள்டன் பட்டத்தைப் பறித்தார் நடால்.
2010 வரை ஃபெடரர் 16 கிராண்ட்ஸ்லாம்களை வென்றிருந்தார். அதன்பிறகான இத்தனை ஆண்டுகளில் ஃபெடரர் வெறும் 4 கிராண்ட் ஸ்லாம்களை மட்டுமே வென்றிருக்கிறார். நடாலின் எழுச்சி தந்த விளைவு இது. ஃபெடரர் Vs நடால் என்கிற இந்தச் சண்டை டென்னிஸ் உலகையே ஆட்கொள்ளத் தொடங்கியது. கடந்த 10-15 ஆண்டுகளில் டென்னிஸை தீவிரமாகப் பார்த்தவர்களை நடால் அல்லது ஃபெடரர் ரசிகர்கள் என்கிற இரண்டே வகைமைக்குள் பெரும்பாலும் அடக்கிவிட முடியும். ஜோக்கோவிச் எங்கே எனும் கேள்வி எழுமாயின் அவருடைய சாதனைகள் பற்றியும் அவர் எட்டிப் பிடித்த அந்த மூன்றாம் இடம் பற்றியும் இன்னொரு நாள் விரிவாகப் பேசுவோம்.
இப்படி மைதானத்தில் மோதும் எதிரிகளாக, எதிரெதிர் போர்ப்படைகளாக ரசிகர்களைக் கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் ஓய்வு பெறும்போது இன்னொருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார் என்று சொன்னால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், அப்படித்தான் நடந்தது. தொடர் காயங்கள் மற்றும் வயது மூப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஃபெடரர் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். ஓய்வுக்கு முன்பாக லேவர் கோப்பை எனும் தொடரில் தனது கடைசிப் போட்டியில் ஆடப்போவதாக ஃபெடரர் அறிவித்தார். இந்தத் தொடரில் ஃபெடரருடன் நடால், ஜோக்கோவிச் உட்பட முக்கியமான வீரர்கள் பலருமே ஆடினர். இந்தப் போட்டியின் முடிவில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஃபெடரர் தனது பிரிவு உபசார உரையை நிகழ்த்தத் தொடங்கினார். அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. முழுமையாக வெடித்து அழுதுவிட்டார். வார்த்தைகளைக்கூட முழுமையாக உச்சரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல இது எல்லா விடைபெறல் நிகழ்வுகளிலும் நடக்கக்கூடியது. அதிசயம் என்னவெனில் இங்கே ஃபெடரர் அழுவதைப் பார்த்து எப்போதுமே கோர்ட்டில் அவருக்கு எதிர்ப்பக்கம் நின்றே பழகிப்போன நடாலும் கண்ணீர் சிந்தினார். அவராலும் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.
இப்படி ஒரு தருணத்தை விளையாட்டுலகில் பெரிதாக யாரும் கண்டதே இல்லை. அந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமுமே பூரித்துப்போனது. ‘களத்தில் நாங்கள் இருவருமே தீவிரமான எதிரிகள். ஆனால், வெளியே இருவருக்குமிடையே பரஸ்பரம் நல்ல மரியாதை இருக்கிறது. ரோஜரின் விலகலோடு என்னுடைய வாழ்வின் முக்கியமான பகுதி ஒன்றும் என்னிடமிருந்து விலகிச் செல்வதாக உணர்கிறேன். அவர் எனதருகில் இருந்த நாள்களெல்லாம் அதிமுக்கியமானவை' எனக் கூறி ஃபெடரரின் அழுகையில் தானும் பங்கெடுத்துக்கொண்டார் நடால். எதிரிகள் சிந்திய இந்தக் கண்ணீர் என்றென்றைக்கும் நினைத்துப் பார்த்தாலும் புல்லரிப்பையே கொடுக்கும்.