டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்றைய நாள் வெறுமையால் நிரம்பியிருக்கக்கூடும். காரணம், ஃபெடரரின் ஓய்வு அறிவிப்பு. போராடுவார், காயங்களிலிருந்து மீண்டு வருவார், மீண்டும் கம்பேக் கொடுப்பார். ஜோக்கோவிச்சுக்கும் நடாலுக்கும் இன்னும் போட்டியளிப்பார் எனும் ரசிகர்களின் ஆசையெல்லாம் பொய்த்திருக்கிறது. ஆயினும், அவரின் நீண்ட நெடிய கரியர் கொடுத்திருக்கும் நினைவுகளும் பூரிப்புகளும் ஏராளம்.
கடந்த கால் நூற்றாண்டுக்குள் டென்னிஸ் எனும் விளையாட்டை பின்பற்ற தொடங்கியவர்களுக்கு ஃபெடரராலேயே அந்த விளையாட்டின்மீது தீவிரப் பற்று உண்டாகியிருக்கும். வர்ணிப்பதற்கு வார்த்தைகள் தீர்ந்துபோய் வெறும் மலைப்பை மட்டுமே ஏற்படுத்தக்ககூடியது ஃபெடரரின் கரியர். அதிலிருந்து சில சாதனைகளும் சில முக்கியமான தருணங்களும் இங்கே...
1998 முதல் சீனியர் லெவல் போட்டிகளில் ஆடி வந்த ஃபெடரர் டென்னிஸ் கரியரில் 24 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
தான் ஆதர்சமாக பார்த்து வளர்ந்த பீட் சாம்ப்ரஸை 2001 விம்பிள்டன் தொடரின் போட்டி ஒன்றில் 5 வது செட் வரை சென்று மிரட்டலாக வீழ்த்தியிருந்தார் ஃபெடரர். அதுவரை ஜாம்பவனான பீட் சாம்ப்ரஸ் விம்பிள்டன்னை மட்டுமே 7 முறை வென்றிருந்தார். அப்பேற்பட்ட வீரரை 19 வயதே ஆன ஃபெடரர் வீழ்த்தியது டென்னிஸ் உலகில் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாக அமைந்தது.
க்ராண்ட்ஸ்லாம்களில் மட்டும் மொத்தம் 31 இறுதிப்போட்டிகளில் ஆடியிருக்கும் ஃபெடரர் 20 முறை வெற்றிவாகை சூடியிருக்கிறார். முதல் முதலில் 20 க்ராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரரும் ஃபெடரரே.

விம்பிள்டனின் புல்தரைதான் ஃபெடரருக்கு ஃபேவ்ரட். விம்பிள்டனை மட்டுமே 8 முறை வென்றிருக்கிறார். 2003 முதல் 2007 வரையில் தொடர்ச்சியாக 5 முறை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் விம்பிள்டன் தொடரை வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டனின் காலிறுதி போட்டிதான் ஃபெடரர் ஆடிய கடைசி க்ராண்ட்ஸ்லாம் போட்டியாகவும் இருந்தது.
விம்பிள்டனை போன்றே அமெரிக்க ஓபனையும் 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை வென்றிருக்கிறார். இதுபோக ஆஸ்திரேலிய ஓபனை 6 முறையும் ஃப்ரெஞ்ச் ஓபனை ஒரே ஒரு முறையும் வென்றிருக்கிறார்.
2006, 2007, 2009 இந்த மூன்று ஆண்டுகளிலும் நடைபெற்ற அத்தனை க்ராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
மொத்தமாக க்ராண்ட்ஸ்லாம்களில் மட்டும் 369 ஒற்றையர் ஆட்டங்களை வென்றிருக்கிறார். வேறு எந்த வீரரும் இத்தனை அதிக போட்டிகளை வென்றதில்லை.
24 வருட கரியரில் எல்லாவிதமான போட்டிகளையும் சேர்த்து 1526 போட்டிகளில் ஆடியிருக்கும் ஃபெடரர் 1251 போட்டிகளில் வென்றிருக்கிறார். 2006-07 காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 41 போட்டிகளில் தோல்வியையே தழுவாமல் ஆடியிருந்தார். டென்னிஸ் கோர்ட்டில் ஃபெடரரின் ஆதிக்கத்தை நிரூபிக்கக்கூடிய புள்ளிவிவரம் இது. அதேமாதிரி, 2004 முதல் 2008 வரைக்கும் தொடர்ச்சியாக 237 வாரங்களுக்கு தரவரிசையில் நம்பர் 1 வீரராகவே இருந்தார். இந்த சாதனையையும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. 36 வயதில் மீண்டும் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். நம்பர் 1 இடத்தை பிடித்த வயதான வீரர் எனும் பெருமையும் ஃபெடரருடையதே.
வலது கையில் ரேக்கட்டை பிடித்து ஒரு காலை ஊன்றி ஒரு கையையும் ஒரு காலையையும் காற்றில் பறக்கவிட்டு ஃபெடரர் அடிக்கும் சிங்கிள் பேக்ஹேண்ட் ஷாட்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது. இந்த ஷாட்டை அவர் ஆடும்போது வெளிப்படும் நளினமும் அழகுமே பலரையும் ஃபெடரரின் ரசிகர் ஆக்கியது.
டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியேயுமே கூட ஃபெடரரின் நற் சுபாவங்களுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. பந்தை பொறுக்கிக் கொடுக்கும் சிறுவர்கள் முதல் எதிர்த்து ஆடும் வீரர்கள் வரைக்கும் எல்லோரிடமும் நட்பு பாராட்டும் அவரின் சுபாவத்திற்கு சான்றுதான் நடால் வெளியிட்டிருக்கும் அறிக்கை.
ஓய்வு அறிவிப்பைப் பற்றி ஃபெடரர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 'Finally, to the game of tennis: I love you and will never leave you என கூறியிருக்கிறார். அதையேத்தான் ஃபெடரர் ரசிகர்களும் கூறுகிறார்கள். 'Love you Federer and will never leave from you!'