Published:Updated:

இவன் கடைசி துளி ரத்தமும் வியர்வையாய் விழும்... நடால் எனும் அற்புதன்! #Rafa #USopen

மு.பிரதீப் கிருஷ்ணா

நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு. அந்தப் பரபரப்பின் மேற்பரப்பில் படிந்திருக்கும் சிறு பயம். அந்த பயத்தைப் போக்குவதற்கு எழுந்த வெற்றிக்கான ஏக்கம். அந்த ஏக்கத்தின் தயவால் எழுந்த பேராசை. அந்த ஆசைகள் அடங்கத் தேவைப்பட்ட ஆச்சர்யம்... எல்லாம் கொடுத்தார் நடால்..!

Rafael Nadal
Rafael Nadal ( AP )

"உச்சகட்ட ஃபார்மில் இருந்த ஃபெடரரின் துல்லியமும் மகத்துவமும் தடுக்கப்படவேண்டிய தேவை இருந்தது. அவரது ஆதிக்கம் டென்னிஸுக்கு நல்லதல்ல. ஃபெடரருக்கே நல்லதல்ல. ஏதாவது செய்தே ஆகவேண்டும். டென்னிஸ் கடவுள்கள் கண் திறந்தார்கள். சில காலம் குழம்பிப் போயிருந்த அந்தக் கடவுள்கள், ஃபெடரரைத் தடுக்க முடிந்த அந்த ஒரு விஷயத்தை உலகுக்கு அனுப்பிவைத்தனர். கடந்த 40 ஆண்டுகளின் அத்தனை தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் உள்ளடக்கிய, திசைமாறிய எதிர்காலத்தின் தூதன். ஃபெடரரின் நுட்பமான நுணுக்கங்களையும் அழகியலையும், ஒரு பந்தை நிமிடத்திற்கு 4000 முறை சுழலுச் செய்யும் தன் ஷாட்டால் சுக்குநூறாக உடைக்கக்கூடியவன். நடால் - ஃபெடரரின் ஆதிக்கத்தைத் தடுக்க, டென்னிஸ் கொடுத்த விலை!"

'Federer and me' புத்தகத்தில் வில்லியம் ஸ்கிடில்ஸ்கி எழுதிய வரிகள் இவை. படிக்கும்போது சிலிர்த்தது. மாடர்ன் டென்னிஸின் கடவுளைத் தடுக்க, டென்னிஸின் கடவுள்களால் அனுப்பப்பட்ட இந்தப் போராளியை நினைத்து நெகிழ்வாக இருந்தது. நமக்குப் பிடித்த ஒரு வீரனை, அந்த வீரனின் போட்டியாளரைப் பற்றிய புத்தகத்தில் இப்படிப் புகழ்ந்தால் நெகிழ்வாகத்தானே இருக்கும். ஆனால், திடீரென ஒரு சந்தேகம். நான் நடாலின் ரசிகன் என்றாலும், ஃபெடரர்தான் டென்னிஸின் கடவுள் என்பதை மறுத்ததில்லை. ஃபெடரரின் நளினம், பர்ஃபெக்ஷன் பேக் ஹேண்ட் ஷாட் ஆடும்போது இரு கால்களும் காற்றில் மிதந்து, கைகள் பறக்கும் அந்த அழகு... அதில் மெய் மறந்திருக்கிறேன். அவரின் ஒரு சில ஷாட்களை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்திருக்கிறேன். அந்த ஆட்டத்தின் அழகில் வீழ்ந்திருக்கிறேன். ஆனாலும்... ஏன் நடால்?

Rafael Nadal
Rafael Nadal
AP
ஆச்சர்யன்!
பாகம் 1

12 அல்லது 13 வயது இருக்கும். 15, 30, 40, கேம்... டியூஸ், அட்வான்டேஜ், டை பிரேக், டபுள் ஃபால்ட் போன்ற விதிகள் எல்லாம் ஓரளவு புரிந்தபின் டென்னிஸ் பார்க்கத் தொடங்கிய காலம். டென்னிஸின் மகுடம் தரிக்க களிமண்ணிலும் புல்தரையிலும், ஃபெடரரும் நடாலும் முட்டி மோதிய காலம். அது வெற்றிகளைப் பிரதானப்படுத்தும் வயது. அதுதான் விளையாட்டு எனப் புரிந்த வயது. அதனால், டென்னிஸ் பார்த்தால் இவர்களில் ஒருவர்மீது காதல் வயப்பட்டே தீரவேண்டும். அது ஆச்சர்யங்களை அசைபோடும் வயதாயிற்றே... அதிசயங்களை அதிகமாகச் சிலாகிக்கும். ஆனால், அது அழகியலைப் புரிந்துகொள்ளாத வயதும் கூட. சுருக்கமாகச் சொன்னால், Federer takes easy points... Or he takes points easily! அதனால், அந்த அரியாத வயதில் எதிர்பார்த்த ஆச்சர்யம் ஃபெடரரிடம் கிடைக்கவில்லை.

திண்ணையில் அமர்ந்து கதை சொல்லும் பெரியவர்களையும், அதைக் கேட்கும் சிறுவர்களையும் கவனித்திருக்கிறீர்களா? போகிற போக்கில் அதைக் காதால் மட்டும் கேட்டவர்களுக்கு அதன் அருமை புரியாது. ஏனெனில், கதை சொல்வதின் உயிர், அதைச் சொல்பவர்களின், கேட்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது. கதைகள் வெறும் வார்த்தைகளாய் மட்டும் சொல்லப்படுவதில்லை. அவை, கண்களாலும் பேசப்படும். சொல்பவரின் விழிகள் கதையின் பரபரப்பை, விறுவிறுப்பை, ஆச்சர்யத்தை கேட்பவர்களுக்குக் கடத்தவேண்டும். அதுதான் அதன் அழகே! டாப் வீரர்கள் தவிர்த்து, மற்ற வீரர்களிடம் உட்சபட்ச ஆதிக்கத்தைக் கட்டவிழ்த்து, எளிதாக வென்றுகொண்டிருந்த ஃபெடரரிடம் அந்தப் பரபரப்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

Rafael Nadal
Rafael Nadal
AP

இந்தப் பக்கம் நடால்... அந்த வயதில் எது தேவைப்பட்டதோ அதைக் கொடுத்தார். நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு. அந்தப் பரபரப்பின் மேற்பரப்பில் படிந்திருக்கும் சிறு பயம். அந்த பயத்தைப் போக்குவதற்கு எழுந்த வெற்றிக்கான ஏக்கம். அந்த ஏக்கத்தின் தயவால் எழுந்த பேராசை. அந்த ஆசைகள் அடங்கத் தேவைப்பட்ட ஆச்சர்யம்... எல்லாம் கிடைத்தது! ஃபெடரரைப் போல் எளிதாகவெல்லாம் ஜெயிக்க மாட்டார். முக்கியமான போட்டிகளெல்லாம் 4 அல்லது 5 செட்கள் வரை போகும். பல செட்கள் டை பிரேக் செல்லும். பெரும்பாலான கேம்கள் சிலபல டியூஸ்கள் காணாமல் முடிவுக்கு வராது. அதே புத்தகத்தில் ஸ்கிடில்ஸ்கி சொன்னதைப்போலத்தான் அவரது போட்டிகள் இருக்கும் - நடால் ஆடுவதை மட்டும் பார்த்தால், அவர் தோற்றுக்கொண்டிருப்பதைப் போலத்தான் தெரியும். ஸ்கோர் போர்டைப் பார்த்தால்தான், வெற்றியை நோக்கிப் பயணிக்கிறார் என்பது புரியும்.

Vikatan

நடந்துமுடிந்திருக்கும் அமெரிக்க ஓப்பன் ஃபைனலை எடுத்துக்கொள்ளலாம். வெற்றி பெற்று, நடால் களத்தில் விழுந்து கிடந்தபோது பலரும் கண்ணீர் சிந்திருக்கொண்டிருந்தார்கள். 'கடுமையான போராட்டத்துக்குப் பிறகு என் ஆதர்ச நாயகன் வென்றுவிட்டான்' என்ற ஆசுவாசத்தின் வெளிப்பாடுதானே அந்தக் கண்ணீர். ஒருவேளை, மூன்றாவது செட்டிலேயே நடால் வென்றிருந்தால்? அந்த ஒன்றரை மணிநேர கூடுதல் பரபரப்பு கிடைத்திருக்காதே! இன்றைய போட்டி மட்டுமல்ல, டென்னிஸ் உலகின் மகத்தான போட்டி என்று வர்ணிக்கப்படும் 2008 விம்பிள்டன் ஃபைனல் - முதல் இரண்டு செட்களையும் வென்று, அடுத்த இரண்டையும் தோற்று, கடைசி செட்டில் 9-7 என வென்ற போட்டி. நேற்றைப் போலவே. நடாலால் எளிதாக வெல்ல முடிந்திருந்தால், டென்னிஸுக்கு ஒரு மிகப்பெரிய கிளாசிக் இல்லை.

Rafael Nadal
Rafael Nadal
AP

நடால் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம் இதுதான் - "To be successful you have to be prepared. You have to suffer". You have to suffer - கஷ்டப்படத்தான்வேண்டும். கஷ்டப்பட்டால் மட்டுமே அந்த வெற்றியை ருசிக்க முடியும். குறிப்பு : இங்கு கஷ்டப்படவேண்டியது நடால் மட்டுமல்ல. நடாலின் ரசிகர்களும்தான். இரண்டு செட்கள் வென்றுவிட்டு, மூன்றாவது செட்டிலும் முன்னிலை பெற்றுவிட்டு, அதன்பிறகு இரண்டு செட்கள் தோற்றால்..! ஐந்தாவது செட்டில் 5-2 என முன்னிலையில் இருந்து, அதன்பின் இரண்டு முறை சாம்பியன்ஷிப் பாயின்ட் கிடைத்தும் வீணடித்து, சர்வீஸையும் வசப்படுத்த முடியாமல், 5-4 வரை வந்து, அவரது சர்வீஸை பிரேக் செய்யவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால்..!

எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே தன் வெற்றியைத் தள்ளிப்போடுவது கிடையாது. ஆனால், நடாலுக்கு அப்படித்தான் நடக்கிறது. ஒருவேளை இவரை இங்கு அனுப்பிய டென்னிஸ் கடவுள்கள், 'இவன் உடலில் இருக்கும் கடைசிச் சொட்டு ரத்தமும் வியர்வையாய் விழுந்தே தீரவேண்டும்' என்று எழுதிவைத்துவிட்டார்களோ தெரியவில்லை! நடாலின் ஒவ்வொரு வெற்றியும் அப்படித்தான் இருக்கும். போராடாமல் வெற்றிகள் கிடைத்ததில்லை. நேர் செட்களில் எதிராளிகளை எளிதில் வீழ்த்தியிருப்பார். ஆனால், அங்கெல்லாம் கேம்களை வசப்படுத்த பெரும் போராட்டம் நிகழ்த்தியிருப்பார்.

அவரது சர்வீஸாகவே இருக்கும்... ரேலியின் தொடக்கத்தில் இவரது கையே ஓங்கியிருக்கவும் செய்யும். ஆனால், திடீரென்று சிறு தவறு செய்வார். எதிராளியின் கை சற்று ஓங்கும். எதிராளி முழு அட்டாக்கில் இறங்கி பாயின்டை வெல்லும் நிலைக்குச் செல்வார். நடாலால் இந்தப் புள்ளியை நிச்சயம் வெல்ல முடியாது என்ற மனநிலைக்கு எல்லோரும் செல்வார்கள். அப்போதுதான், இந்த அசகாய சூரன் அசாத்திய வித்தைகள் செய்து (மேலே இருக்கும் வீடியோவைப்போல்!), ரசிகர்களின் எண்ணத்தை தகர்த்து பாயின்டை மீட்பார். சாதாரணமாக முடியவேண்டிய பாயின்ட்டாகத்தான் அது இருந்திருக்கும். ஆனால், அப்படி முடிந்தால் அது நடால் ஸ்டைல் இல்லையே!

உங்கள் இதயத்தில் ஒரு இனம்புரியா வலியை ஏற்படுத்துவார். அதன், இயக்கத்தை நிறுத்தி வைப்பார். எல்லாம் முடிந்துவிடும் என்று நம்பிக்கை இழக்கும் நேரத்தில், அவரே உயிர்கொடுத்து மீட்பார். அப்படி உயிர்பெறுபவர்கள் அதிர்ச்சியுடன்தானே எழுவார்கள்! அதுதான் அந்தக் களத்தில் நடக்கும். அது வழக்கமான ஆர்ப்பரிப்பாக இருக்காது. பேரதிர்ச்சியும் பெருங்களிப்பும் நிறைந்ததாக இருக்கும். பலநூறு கண்கள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துகிடக்கும். அதுதான் அந்த உணர்வுகளையெல்லாம் நமக்கு அப்படியே கடத்தும். கதை சொல்லிகளைப்போல்! நடால் என் ஆதர்சம் ஆனதற்குக் காரணம் இதுதான்!

Rafael Nadal
Rafael Nadal
AP
இயற்கையை வென்றவன்!
பாகம் இரண்டு

இவையெல்லாம்தான் நடால் மீதான காதலுக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. முதல் முத்தம் மட்டுமா காதல்?! கல்லூரியின் தொடக்க காலம். ஃபெடரரும், நடாலும் ஜோகோவிச்சிடம் பணியத் தொடங்கிய காலம். விளையாட்டு பற்றிய புரிதல் கொஞ்சம் அதிகரித்திருந்தது. விளையாட்டு பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டது என்று புரிந்திருந்தது. அது போராளிகளை உருவாக்கும் களம் எனப் புரிந்தது. அது போராடக் கற்றுக்கொடுக்கும். புறந்தள்ளும் சமூகத்திற்கு எதிராகப் போராடக் கற்றுக்கொடுக்கும். அதையெல்லாம் கடந்து, தன்னைத்தானே எதிர்த்துப் போராடக் கற்றுக்கொடுக்கும்... இதெல்லாம் புரிந்த காலத்தில், விளையாட்டு உலகின் மிகப்பெரிய போராளியாய் நின்றுகொண்டிருந்தவர் - ரஃபேல் நடால்.

ஒவ்வொரு முறை காயத்திலிருந்து மீண்டுவரும்போதும், அது பலருக்கும் உத்வேகமாய் இருந்தது. ஒவ்வொரு முறை அவர் பட்டம் வெல்லும்போதும், ஆச்சர்யமாய் இருந்தது. தன் ஆட்டத்தின் வாயிலாக ஆச்சர்யப்படவைத்தவர், தன் போராட்டத்தின் வழியாக ஆச்சர்யப்படவைத்தார். காலில் காயம், ஓய்வு, கம்பேக், கிராண்ட் ஸ்லாம்... இடுப்பில் காயம், ஓய்வு, கம்பேக், கிராண்ட்லாம்... கையில் காயம், ஓய்வு, கம்பேக், கிராண்ட் ஸ்லாம்... 'காயம், ஓய்வு, கம்பேக், கிராண்ட் ஸ்லாம், ரிப்பீட்!' ஆனால், இவை மட்டுமே நடால் இல்லை. அவர், காயங்களை வென்றவர் மட்டும் இல்லை. இயற்கையையும் வென்றவர்!

Rafael Nadal
Rafael Nadal
AP

நடாலின் மிகப்பெரிய பலமாய் பலரும் கருதுவது, அவரது இடது கை ஆட்டம். அதைப் பார்த்த பலரும் நினைப்பது - நடால் இடது கைப் பழக்கம் கொண்டவர் என்று. ஆனால், உண்மை அதுவல்ல. போட்டிக்குப் பின் அவர் ஆட்டோகிராஃப் போடுவதைப் பார்த்தால் தெரியும் - நடால் வலது கைப் பழக்கம் கொண்டவர். தன் கோச்சாக இருந்த சித்தப்பா டோனி நடால், ரஃபேலை இடது கையில் டென்னிஸ் விளையாடச் செய்தார். பெரும்பாலான வீரர்கள் வலது கையில் ஆடுவதால், அந்த முடிவு நடாலுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்பினார். சாதகமாகவும் இருந்தது. ஆனால், அதற்குப் பழக்கப்படுத்திக்கொள்வது எவ்வளவு கடினம்?! இயற்கையின் இயல்புகளை மீறிச் செயல்பட்டவர் நடால். அந்த வயதிலேயே போராடத் தொடங்கியவர். அந்தப் போராளியை எந்த டீனேஜருக்குத்தான் பிடிக்காது?

Vikatan
ஆதிக்கம் செலுத்தும் அரக்கன்
பாகம் மூன்று

விளையாட்டு வேலையாகிவிட்டது. ஒவ்வொரு அசைவையும் ரிவ்யூ செய்யத் தோன்றுகிறது. போட்டியின் முடிவு, டெக்னிக், நுணுக்கங்கள், களத்தில் எடுக்கும் முடிவுகள், விளையாடும் நேர்த்தி, அழகு எனப் பல விஷயங்களையும் கவனிக்கவேண்டியதாய் இருக்கிறது. ஃபெடரர், நடால் 30-களில். அவர்கள் இருவரும் ஒவ்வொரு துருவம் என்றால், தனக்கென ஒரு ஸ்டைலில் ஜாம்பவான் ஆகி நிற்கிறார் ஜோக்கோவிச். ஃபெடரர், இன்னும் போட்டியளிக்கவேண்டுமென்றால், முன்பு இருந்ததை விட அதிகமாக ஃபிட்னஸில் கவனம் செலுத்தவேண்டும். நடால், ஃபிட்னஸையும் தாண்டி, டெக்னிக்கலாகவும் மாறவேண்டும். ஏனெனில், அவர் ஃபெடரர் இல்லை. மாற்றங்கள் நிறையவே தேவை.

Rafael Nadal
Rafael Nadal
AP

இப்படியான சூழ்நிலையில் நடாலின் டென்னிஸ் அவ்வளவுதான் என எல்லோருமே நினைக்கத்தான் செய்வார்கள். ஏனெனில், தன் இருபதுகளிலேயே தொடர் காயங்களால் அவதிப்பட்டவர் அவர். இப்போதிருக்கும் இளம் வீரர்களை எப்படி எதிர்கொள்ள முடியும்? ஃபெடரர், ஜோகோவிச் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? இப்படியான கேள்விகள் எழுந்தன. நம்பிக்கை குறைந்தது. எனக்கும்தான். இப்படி எல்லோரும் நம்பிக்கையைக் கைவிடும் நேரம், பேரெழுச்சி காண்பதுதானே நடால் ஸ்டைல்! எழுச்சி கண்டார். தன் ஆட்டத்தில் பல மாற்றங்கள் செய்தார். ஒவ்வொரு டெக்னிக்கையும் 100 சதவிகித பர்ஃபெக்ஷனுக்கு மாற்றினார். சர்வீஸ்கள் வேகம் எடுத்தன. அந்த வேகத்தோடு சேர்ந்து அதீத டாப் ஸ்பின் கொடுத்தார். உலகின் அதிபயங்கர ஆயுதங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நடாலின் ஃபோர்ஹேண்டோடு, இந்த டாப் ஸ்பின்னும் சேர்ந்தது. நடால், முன்பு ஃபெடரர் செய்ததைப்போல், தன் எதிராளிகள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

இது ஒரு விஷயம் மட்டுமல்ல. நிறைய மாற்றங்களைச் செய்தார். மெத்மதேவுக்கு எதிராகக் கொஞ்சம் தடுமாறியத் தொடங்கியதும், 'side spin' என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தார். அதுவரை unforced errors அதிகம் செய்யாமல், ஜோகோவிச் போல் ஆடிக்கொண்டிருந்த மெத்மதேவ், தொடர்ந்து நெட்டில் அடிக்கத் தொடங்குகிறார். புள்ளிகளை இழக்கிறார். இரண்டு செட்கள் பின்தங்கியிருந்த நடால், மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறார்... சாம்பியன் ஆகிறார்!

Rafael Nadal
Rafael Nadal
AP
ரஃபேல் நடால் - தி வாரியர்!
பாகம் நான்கு

இவையெல்லாம்தான் நடால். அறியாத வதையில் பரபரப்பு தரும் பொழுதுபோக்கைத் தேடுபவர்களுக்கும் சரி, விளையாட்டை போராட்டமாகக் கருதுபவர்களுக்கும் சரி, அத்தனை நுணுக்கங்களையும் எதிர்பார்ப்பவர்களுக்கும் சரி... நடாலால் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்க முடியும். 'எல்லாம் சரி, கேம்ல ஒரு அழகு இல்லையே' என்றால், holf valley-ல் அவர் ஆடும் ஃபோர்ஹேண்ட் ஷாட்டைப் பாருங்கள். ஃபெடரரின் அளவுக்கு இல்லையேன்றாலும், உங்களை அந்த ஷாட் சிலாகிக்கவைக்கும். முதலில் சொன்னதுதான். நடால் ஆச்சர்யங்கள் நிரம்பிய பேக்கேஜ்! எப்படி 5 மணி நேரம் களத்தில் அதே உத்வேகத்துடன் இருக்கிறார், எப்படி ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்குச் சென்று வின்னர் அடிக்கிறார், எப்படி ஒவ்வொரு காயத்திலிருந்தும் மீண்டு வருகிறார், எப்படி 33 வயதிலும் அசாத்தியமாய் வெல்கிறார் என ஆச்சர்யத்துக்குள்ளேயே நம்மை அலைபாய வைக்கும் அதிசயம் அவர்.

மேலே கதை சொல்வதைப் பற்றிப் பேசினோம். சரி, எதற்காக ஒருவர் கதை சொல்கிறார்? நேரத்தைக் கழிக்கவா? நிச்சயம் இல்லை. தான் சொல்லும் கதையைக் கேட்டு, தங்களுள் எழுந்த ஆச்சர்யத்தை தங்கள் விரிந்த கண்களின் மூலம் அந்தச் சிறுவர்கள் வெளிப்படுத்துவதுதான், அதைச் சொல்பவருக்கான போதை. அந்த வயதில், தன்னால் நேரடியாகப் பார்க்க முடியாத, அனுபவிக்க முடியாத ஆச்சர்யங்களை, அந்தச் சிறுவர்களின் வழியே அனுபவிக்கத்தான். தான் தன் பால்யத்தில் அனுபவித்த பேரின்பத்தை அந்த ஆச்சர்யத்தின் மூலம் சிலாகிக்கத்தான்!

நடால், மிஞ்சிப் போனால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆடலாம். அதன்பிறகு இப்படி ஒரு ஆச்சர்யனை டென்னிஸ் உலகம் பார்க்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சாம்ப்ரஸ் இருக்கும்போதுதான் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் இருக்கும்போதுதான் நடாலும், ஜோகோவிச்சும் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், இவர்கள் மூவருமே ஓய்வை நோக்கிப் போனாலும், இவர்களைப் போன்ற ஒரு ஆளுமையை டென்னிஸ் இனி காணுமா எனத் தெரியவில்லை. அடுத்த தலைமுறையெல்லாம் 4,5 கிராண்ட் ஸ்லாம் வெல்பவர்களையே ஜாம்பவான் என்று கொண்டாடிக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் நடாலைப் போன்ற ஒருவரைப் பார்ப்பது, அந்த ஆச்சர்யங்களை எதிர்பார்ப்பது... வாய்ப்பே இல்லை.

அப்போது நான் என்ன செய்யப்போகிறேன்? டென்னிஸ் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களை அருகே அமரவைத்துக் கதை சொல்லவேண்டும்.

"ஒரு வீரன் இருந்தான். எதிர்த்து ஆடும் வீரனின் வியர்வையை தனக்கான குளுகோஸாக ஏற்றிக்கொண்டு ஆடுபவன் அவன். 5 மணி நேரம் ஆனாலும், அவன் கால்கள் சிறுத்தையைப் போல் பாயும். அதோ பார்... இதே இடத்தில் அவன் இருந்திருந்தால், இன்னும் 4 அடி பாய்ந்து பந்தை போஸ்டைச் சுற்றி அடித்திருப்பான். இங்கே பார்... இந்நேரம் அவனாக இருந்திருந்தால், பேக் ஹேண்டில் வின்னர் ஆகியிருப்பான். அவன் ஃபோர்ஹேண்ட் ஷாட்டெல்லாம் யாராலும் ஆடிட முடியாது. எங்கள் காலத்திலெல்லாம், சுவரை இடிக்கவேண்டுமென்றால், அவனை ஃபோர்ஹேண்ட் ஷாட் அடிக்கச் சொல்லுங்கள் என்பார்கள். அவன் பெயர் ரஃபேல் நடால்..."

Rafael Nadal
Rafael Nadal
AP

ஃபெடரரைப் பார்த்து வளர்ந்த எனக்கே அவன் ஆச்சர்யனாய் இருக்கும்போது, அடுத்த தலைமுறைக்கெல்லாம் சொல்லவே தேவையில்லை. அந்தக் கதைகள் கேட்டு, ஆச்சர்யத்தில் விரியும், அந்தச் சிறுவர்களின் விழிகள் வழியே நடால் எனும் சகாப்தம் வாழும்!