லேவர் கோப்பையில் ஃபெடரர் தன்னுடைய கடைசி டென்னிஸ் போட்டியில் ஆடி முடித்திருக்கிறார். நடாலுடன் இணைந்து சாக் மற்றும் டைஃபோ இணைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டியில் ஃபெடரர் - நடால் இணை தோல்வியையே தழுவியது. ஆனால், நேற்றைய தினத்தில் அந்த வெற்றி தோல்விக்கு எந்தவித மதிப்புமே இல்லை. ஏனெனில், யாரும் இந்தப் போட்டியின் முடிவு என்னவென்பதை அறிய ஆவலாகக் காத்திருக்கவில்லை.
எல்லாரும் ஃபெடரரைக் கொண்டாடடுவதற்காக மட்டுமே இந்தப் போட்டியை எதிர்நோக்கியிருந்தனர். அந்தக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. ஆர்ப்பரிப்புகளுக்கும் ஆனந்த கண்ணீர்களுக்கும் இடையில் தனது பிரிவு உபச்சாரத்தை முடித்து ஓய்வை நோக்கி நகர்ந்திருக்கிறார் ஃபெடரர்.
ஒரு நீண்ட நெடிய அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அரங்கேறிக் கொண்டிருந்த நாள்களில் மகிழ்வையும் பூரிப்பையும் மட்டுமே தருவித்த அந்த அத்தியாயம், விடைபெறும் நாளில் எல்லாரையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.
ஃபெடரரின் இறுதி ஆட்டத்தையும் அதன்பிறகான உணர்வுபூர்வமான சம்பவங்களையும் முழுமையாக பார்த்தவர்களால் இதை ஒரு சாதாரண விஷயமாகக் கடந்துவிட முடியாது. ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொருவிதமான எழுச்சி நிலையை எட்டியிருக்கும். ஆனால், பொதுவாக எல்லாருடைய கண்ணிலும் இமையோர சிறுதுளி கண்ணீரையாவது பார்க்க முடிந்தது.

அது இந்த கோர்ட்டில் இனி ஃபெடரரின் இல்லாமையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதன் நிமித்தமாக வந்த கண்ணீராக இருக்கலாம், இல்லை இத்தனை காலமாக ஃபெடரரின் நிமித்தம் நம் நினைவடுக்குகளில் சேமிக்கப்பட்டிருந்த நினைவுகளின் எழுச்சி தந்த விளைவாக கூட இருக்கலாம். எதுவோ, ஆனால் எல்லாரும் ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தினார்கள்.
அரங்கில் கூடியிருந்த தொலைக்காட்சியில் இணையத்தில் நேரலையில் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார்கள். ஃபெடரரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என அத்தனை பேரின் கண்களுமே கண்ணீர் வழியவே காட்சியளித்தன. எல்லாரையும் தாண்டி ஃபெடரர், அவரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
ஃபெடரருக்கு அழுகை ஒரு விடுதலை. வெற்றியென்றாலும் அழுவார். தோல்வியென்றாலும் அழுவார். மனவெளியை உசுப்பிப் பார்க்கும் அத்தனை தருணங்களிலும் ஃபெடரர் கண்ணீர் சிந்திவிடுவார்.
நரம்பு புடைக்க 19 வயது இளைஞனாக பீட் சாம்ப்ரஸை வீழ்த்திய போது கண்ணீர் சிந்தத் தொடங்கினார். இதோ இங்கே லண்டனிலும் தனது கடைசிப் போட்டியை முடித்துவிட்டு அத்தனை வெளிச்சமும் ஒரே இடத்தில் குவியும் அந்த இடத்தில் நின்று மைக்கைப் பிடிக்கையில் வார்த்தைகள் புரள கேவி கேவி அழுதுவிட்டார். "நீங்கள் ஆயிரக்கணக்கான போட்டிகளில் ஆடியிருக்கிறீர்கள். ஆனால், அவற்றிலிருந்து இன்றைய நாள் வித்தியாசமானது. இதை எப்படி உணர்கிறீர்கள்?" என ஜிம் கரியர் கேள்வியை வீச இயல்பாகத் தொடங்கிய ஃபெடரர் அடுத்த சில நொடிகளிலேயே கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். கடைசி வரைக்குமே இப்படித்தான். ஜிம் கரியரின் கேள்விக்கு வார்த்தையை விட கண்ணீரில்தான் அதிகமான பதிலைச் சொன்னார் ஃபெடரர்.
ஃபெடரரின் கண்ணீர் எப்போதையும் போல இங்கேயும் நெகிழ்ச்சியுற வைத்தது.
ஆயினும், ஃபெடரரின் கண்ணீரை இன்னும் அர்த்தப்பூர்வமானதாக மாற்றியது நடால் சிந்திய கண்ணீரே.

ஜோக்கோவிச், முர்ரே போன்ற தனது அணியினருடன் அமர்ந்திருந்த நடாலும் பெடரரின் இறுதி வார்த்தைகளை கேட்டு கலங்கிப்போய் கண்ணீர் சிந்தினார். நடால் சிந்திய கண்ணீர் ஃபெடரர் மீதான மதிப்பை இன்னும் இன்னும் அதிகமாக்கிவிட்டது.
நடால் vs ஃபெடரர் ஒரு மிகப்பெரிய ரைவல்ரி. டென்னிஸ் சமூகமே இருவரின் பெயரால் இரு கூறாக பிளந்து எதிரெதிர் திசையில் நின்றிருக்கிறது. சாம்ப்ரஸூக்குப் பிறகு டென்னிஸில் தனி ராஜ்ஜியத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தார் ஃபெடரர். 2003 - 2008 இந்த ஐந்தாறு ஆண்டுகளில் ஃபெடரரை கோர்ட்டுக்குள் எதிர்த்து நிற்க சரியான ஆள் இல்லவே இல்லை. இந்தக் காலகட்டத்தில் ஃபெடரர் ஒரு தனிக்காட்டு ராஜா. அவர் வைத்ததுதான் சட்டம். வெற்றிக்கு மேல் வெற்றியாக ஃபெடரரின் பெயருக்குப் பின்னால் கிராண்ட்ஸ்லாம்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது.
அந்தச் சமயத்தில்தான் நடாலின் எழுச்சி ஆரம்பமானது. ஃபெடரரை எதிர்க்க முழு திராணியோடும் திறனோடும் கூடிய மாவீரனாக நடால் வந்து நின்றார். அதுவரை ஃப்ரெஞ்ச் ஓபனை மட்டுமே வென்றிருந்த நடால் தன்னுடைய ஆளுகையைப் புல் தரைக்கும் விஸ்தரித்தார்.
2003 தொடங்கி 2007 வரை தொடர்ச்சியாக 5 முறை விம்பிள்டனை வென்றிருந்தது ஃபெடரர்தான். ஃபெடரரின் அந்தத் தொடர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியவர் நடால்தான்.
2008-ல் விம்பிள்டனையும் வென்று ஃபெடரருக்கான சரியான எதிரி நான்தான் என்பதை உரக்கக் கூறிவிட்டார். ஆண்டாண்டு காலமாக நம்பர் ஒன், தொடர் கிராண்ட்ஸ்லாம் வெற்றிகள் போன்ற ஃபெடரரின் தனி ஆவர்த்தனம் இதன்பிறகு செல்லுபடியாகவில்லை. 2010க்குள்ளாகவே ஃபெடரர் 16 க்ராண்ட்ஸ்லாம்களை வென்றுவிட்டார். அதன்பிறகான இந்த 12 ஆண்டுகளில் வெறும் 4 க்ராண்ட்ஸ்லாம்களை மட்டுமே வென்றிருக்கிறார். தொடர் காயங்கள் மற்றும் நடால், ஜோக்கோவிச்சின் எழுச்சியே இதற்குப் பிரதான காரணங்களாக அமைந்தன.

இப்படி ஒரு முன்கதையை ஒருபக்கம் வைத்துக் கொண்டு ஃபெடரருக்காக நடால் சிந்தும் கண்ணீரையும் ஜோக்கோவிச்சின் நெகிழ்ச்சியையும் பார்க்கையில்தான் ஆச்சர்யமாக இருக்கிறது.
களத்தில் நாங்கள் தீவிரமான எதிரிகள். ஆனால், வெளியே நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பெரும் மரியாதை வைத்துள்ளோம். டென்னிஸில் என்னுடைய பாணி வேறு. அவருடைய பாணி வேறு. ஆனால், தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருவருமே ஏறக்குறைய ஒரே எண்ணவோட்டத்தை உடையவர்கள். என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் எதை வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் எனும் நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு. ரோஜரின் விலகலோடு என்னுடைய வாழ்வின் மிக முக்கிய பகுதியொன்றும் என்னிடமிருந்து விலகிச் செல்வதாகவே உணர்கிறேன். அவர் எனதருகில் இருந்த நாள்கள் எல்லாமே என் வாழ்வின் அதி முக்கிய நாள்களாக இருந்திருக்கின்றன.நடால்

இவ்வாறாக நடால் ஃபெடரரை பற்றி பேசியிருக்கிறார். களத்தில் பரம எதிரிகளாகப் பார்க்கப்பட்டவர்கள் இப்படியொரு நெருக்கமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே சுவாரஸ்யமான விஷயம்தான். கடந்த வாரத்தில் ஃபெடரர் ஓய்வை அறிவித்த சமயத்தில் அதையொட்டி நடால் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டிருந்தார். "இப்படி ஒரு நாள் வரவே கூடாதென நினைத்தேன். இது ஒரு சோகமான நாள்" எனக் குறிப்பிட்டிருந்தார் நடால். நடாலின் அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது என்பதை நேற்று காண முடிந்தது.
நடால் சிந்திய கண்ணீரும் பேசிய வார்த்தைகளும் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக்குகிறது. ஆன் கோர்ட்டில் மட்டுமில்லை. ஆஃப் தி கோர்ட்டிலும் ஃபெடரர் ஒரு வசீகரர்தான்!
நான் மகிழ்ச்சியாக உணரும்போது கூட அழுதுவிடுவேன். கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பதை விட அழுதுவிட்டால் அந்த அழுகை அந்த்த தருணத்தை இன்னும் அதிக நினைவுகூரத்தக்கதாக மாற்றிவிடும்.ஃபெடரர்

தன்னுடைய கண்ணீர் சிந்தல்களுக்கு இப்படியான ஒரு விளக்கத்தை ஃபெடரர் முன்பு கொடுத்திருந்தார். அந்த வகையில் ஃபெடரரின் இந்தப் பிரிவு உபச்சார தினத்தை யாராலும் எப்போதும் மறக்க முடியாது. நடால் ரசிகர்களாலுமே கூட! ஏனெனில் அவரும் ஃபெடரருக்காக கண்ணீர் சிந்தியிருக்கிறாரே!