Published:Updated:

நோவக் ஜோகோவிச் : ஃபெடரர், நடால் எனும் அரண்கள் மீது அரியாசனமிட்ட பேரரசன்! #HBDDjoker

பல நூற்றாண்டுகளாக உலகம் கண்ட அதே கதைதான். உலகின்மீது ஆதிக்கம் செலுத்த இரண்டு ராஜாக்களுக்கு சண்டை. பனிப் பிரதேசத்தில் பிறந்த அந்த மாயக்கார மன்னன் பலரால் கடவுளாகவே பார்க்கப்பட்டான்.

இன்னொரு அரசனோ, அந்நாட்டின் பெயர்போன காளையைப்போல் விட்டுக்கொடுக்காமல் போராடிக்கொண்டே இருப்பான். கடவுளுக்கும் காளைக்குமான சண்டை அதுவரை உலகமே கண்டிடாத ஒன்று!

இருவரும் மாறி மாறி வென்றுகொண்டே இருந்தார்கள். புல்தரையில் நடக்கும் போர்களில் மாயக்காரனைக் கட்டுப்படுத்துவது அசாத்தியமாக இருந்தது. களிமண் தரைகளோ அந்த முரட்டுக் காளைக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. அங்கு நடந்த போர்களில் வாகை சூடிக்கொண்டே இருந்தான். உலகின் ஒரு பாதி அந்த ஸ்விட்சர்லாந்தின் மாயக்காரனுக்கும், மறுபாதி ஸ்பானிஷ் மெஷினுக்கும் ஆதரவுக்குரல் எழுப்பியது. இருவரும் நிகழ்காலத்தை ஆட்சிபுரிந்தார்கள். வரலாறை மாற்றி எழுதினார்கள். எதிர்காலத்தைத் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தார்கள்.

இரு வேறு கொடிகள் பறந்த யுத்த களத்தில் புதிதாய் ஒரு சங்கு முழங்கியது. இரு கொடிகளுக்கும் மேலே புதியதோர் கொடி பறக்கத் தொடங்கியது. இரண்டு ராஜ்ஜியமும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பிடியை இழந்தன. உலகம் அதுவரை கண்டிராத, நினைத்தும்கூடப் பார்த்திடாத மும்முனைப் போரை எதிர்கொண்டது. கடவுளின் மாயங்களையும், காளையின் உறுதியையும் இந்தப் புதியவன் அசராமல் எதிர்கொண்டான். புற்தரைகளில் மாயக்காரன் வீழ்ந்தான். எதற்கும் அசராத அந்த முரட்டுக் காளை இவன் முன் சற்றே தடுமாறியது. நோவக் ஜோகோவிச் - ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் எனும் இரு மாவீரர்களுக்கு மத்தியில் புதியதோர் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார்.

ஒரு அரசனின் ஆதிக்கம் வரைபடத்தில் அவன் ஏற்படுத்தும் தாக்கத்தில் தெரியும். யுகோஸ்லேவிய யுத்தங்களின் விளைவால் பிறந்திருந்தாலும், மக்கள் பயன்படுத்தும் வரைபடத்தில் செர்பியாவுக்கு இடம் கொடுத்தது என்னவோ ஜோகோவிச்தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபெடரர், நடால் இருவரும் டென்னிஸ் உலகை ஆட்சி செய்துகொண்டிருக்க, அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இளம் வயதில் கருதப்பட்ட வீரர்கள் பலரும் அவர்களிடம் அடிபணிந்துகொண்டிருந்தார்கள். இவ்வளவு ஏன், பீட் சாம்ப்ரஸ், ஆண்ட்ரே அகாஸி போன்ற ஜாம்பவான்களையே திக்குமுக்காடவைத்தவர்களாயிற்றே. இந்த இருபெரும் சக்திகளை சமாளிக்கவேண்டுமெனில் தீர்க்கமான திட்டம் இருக்கவேண்டும். அசாத்திய உறுதிகொண்டவராக இருக்கவேண்டும். இருவரின் தாக்குதலையும் சமாளிக்கக்கூடிய அசாத்திய அரண் அமைக்கத் தெரிந்தவராக இருக்கவேண்டும்.

Djokovic - Nadal - Federer
Djokovic - Nadal - Federer

ஃபெடரர் தன் அட்டாக்கிங் ஆட்டத்தால் எவரையும் நிலைகுலையச் செய்பவர். நடால் - தன் ஃபோர்ஹேண்டால் மகத்தான மதில்களையே உடைத்துவிடக்கூடியவர். இந்த அரக்கர்களை அட்டாக் செய்யாமல் தடுப்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், ஜோகோவிச், இவர்கள் அவ்வளவு எளிதில் ஊடுருவிட முடியாத ஓர் அரண் அமைத்தார். களத்தின் எந்த மூளைக்குச் சென்றாலும் பந்து எதிர்முனைக்குத் திரும்பிவிடும். யாரும் எட்ட முடியாத இடத்துக்கு பந்தை அனுப்பிவிட்டதாக எண்ணி எதிராளி ஆசுவாசப்படலாம். ஆனால், சென்ற வேகத்தில் அந்தப் பந்து திரும்பிவந்துகொண்டிருக்கும். நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் நடந்துகொண்டிருக்கும் போட்டியாக இருந்தாலும், ஒவ்வொரு பந்தும் எதிர்முனைக்குச் சென்றுகொண்டே இருக்கும். தூரம், வேகம், சோர்வு என எதுவும் அவரைத் தடுத்திடாது. எந்தவொரு பந்தும் அவரைக் கடந்திடாது.

அளவில்லா ஆயுதங்களை நம்பி போருக்குச் செல்பவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால், தன்னிகரற்ற அரணை முன்னிறுத்து போர் செய்பவனை தோல்வி அவ்வளவு எளிதில் தொட்டுப்பார்த்துவிடுவதில்லை. சொல்லப்போனால், அன்று செங்கிஸ்கான் பயன்படுத்திய போர் யுக்திகள்தான் இன்று ஜோகோவிச் பயன்படுத்துபவை. எதிராளி எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், எத்தனை ஆயுதங்கள் வேண்டுமானாலும் ஏந்தியிருக்கட்டும், அவை அத்தனையும் வீணாகி, எதிராளி நிராயுதபாணி ஆகும்வரை தன் கேடயத்தை ஏந்தி நிற்பார் ஜோகோவிச்.

Novak Djokovic
Novak Djokovic

புல் தரையில் ஃபெடரரை வீழ்த்தினார். களிமண் தரையில் ஆடப்பட்ட ATP போட்டிகளில் 11 முறை நடாலை வீழ்த்தியிருக்கிறார். அந்த இரண்டு ஜாம்பவான்களும் அவர்களின் உச்சபட்ச ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும்போதே, தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டார் ஜோகோவிச். இப்போது அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற ரேஸிலும் அவ்விருவரையும் துரத்திக்கொண்டிருக்கிறார்.

அந்த ரேஸில் அவர்களை ஜோகோவிச் முந்தலாம், இல்லை பின்தங்கலாம். இனி கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்லலாம், அல்லது வெல்லாமல் போகலாம். இனி நடக்கப்போவது எதுவும் ஜோகோவிச்சின் இடத்தை தீர்மானிக்கப்போவதில்லை. அவர் ஏற்கெனவே ஆல் டைம் கிரேட் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். டென்னிஸ் உலகின் மகத்தான வீரர்களுக்கு இணையாக சண்டை செய்தபோதே அவர்களின் நிலையை அடைந்துவிட்டார். ஜோகோவிச் - அரண்களே ஆயுதமாய் அமைந்த ராஜ்ஜியத்தில் அரியாசனமிட்டு அமர்ந்திருக்கும் தன்னிகரற்ற அரசன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு