Published:Updated:

'தடுப்பூசி போடலையா? விசா இல்லை' - ஜோகோவிச்சை திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலிய அரசு!

Novak Djokovic
News
Novak Djokovic

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்கியது டென்னிஸ் ஆஸ்திரேலியா. ஆனால், இப்போது விக்டோரிய அரசு அவர் விசாவை ரத்து செய்திருக்கிறது!

ஆஸ்திரேலியன் ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்க வந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. தடுப்பூசி போடாத அவர், நாட்டுக்குள் நுழைவதற்கான விதிகளைப் பின்பற்றவில்லை என்று சொல்லி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓப்பன் மெல்போர்னில் ஜனவரி 17-ம் தேதி தொடங்கிவிருக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் முன்கூட்டியே வந்து தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒமைக்ரான் அலை மீண்டும் பெரிய தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருப்பதால், பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் மிகவும் தீவிரமாக இருக்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு, தடுப்பூசி போட்டவர்கள்தான் நாட்டுக்குள் வரமுடியும் என்பதை கடந்த சில மாதங்களாக கடுமையாகப் பின்பற்றிவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆண்கள் பிரிவின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் இந்தத் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் கடந்த சில மாதங்களாகவே இருந்துகொண்டிருந்தது. காரணம், அவர் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லாதவர். இதை முன்பு வெளிப்படையாகவே சொல்லியிருக்கும் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா இல்லையே என்பதைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால்தான் அவரின் பங்கேற்பு குறித்து நிறைய குழப்பங்கள் இருந்தன.

Novak Djokovic
Novak Djokovic

இந்நிலையில், ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்பதற்கு விலக்கு அளிப்பதாக டென்னிஸ் ஆஸ்திரேலியா நிர்வாகம் நேற்று அறிவித்தது. அவர்கள் குறிப்பிட்ட மருத்துவர்களிடம் போதிய மருத்துவ சான்றிதழ்கள் வாங்குபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்பதால், ஜோகோவிச்சுக்கு அனுமதி கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது டென்னிஸ் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நம்பர் 1 வீரர் என்பதால், அவருக்கு ஆதரவாக முடிவெடுத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள், வல்லுநர்கள் என பலரும் விமர்சனம் செய்தனர்.

இன்று ஆஸ்திரேலிய அரசு அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வந்த ஜோகோவிச்சை, விசா அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாததால், விக்டோரியா மாகண அரசு அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி விசாவை ரத்து செய்துவிட்டது. இதனால், ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி அனுப்பப்பட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் அவருக்கு விசா கொடுத்தால் பெரிய அளவிலான விமர்சனங்களைச் சந்திக்கவேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய அரசு தலையிடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.