Published:Updated:

நவோமி ஒசாகா : போராளிகளுக்கு விதிமுறைகள் வொர்க் அவுட் ஆகாது... ஏன் விலகினார் லிட்டில் சாம்பியன்?

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளாததற்காக நவோமி ஒசாகாவுக்கு அபராதம் விதித்தது பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் அமைப்பு. புறக்கணிப்பைத் தொடர்ந்தால் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், தொடரிலிருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார் நவோமி ஒசாகா.

2021 பிரெஞ்சு ஓப்பன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ரொமானிய வீராங்கனை பேட்ரிசியா டிக்-ஐ 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார் உலகின் நம்பர் 2 வீராங்கனை நவோமி ஒசாகா. அந்தப் போட்டி முடிந்ததும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை. அதனால், அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏனெனில், இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே தான் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கூறியிருந்தார் ஒசாகா.

டென்னிஸ் உலகைப் பொறுத்தவரை, போட்டி முடிந்ததும் இரண்டு வீரர்களுமே பிரஸ் மீட்டில் கலந்துகொள்வது வழக்கம். அது வீரர்களின் கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும், உளவியல் ரீதியான தன்னுடைய நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக பிரஸ் மீட்களில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார் ஒசாகா.

"மக்கள் பெரும்பாலும் விளையாட்டு வீரர்களின் மனநலத்தைப் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை. குறிப்பாக, ஒருசில பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்கும்போது அதை உணர்ந்திருக்கிறேன். அங்கு உட்கார்ந்திருக்கும்போது பல முறை கேட்கப்பட்ட கேள்விகளையும், நம்மீதே சந்தேகத்தை உண்டாக்கக்கூடிய கேள்விகளையும் நிறைய எதிர்கொண்டிருக்கிறேன். என்னை சந்தேகிப்பவர்களுக்கு இம்முறை நான் இடம்கொடுக்கப்போவதில்லை.

ஒரு தோல்விக்குப் பிறகு பிரஸ் மீட்டில் வீரர்கள் மனமுடைந்து அழும் வீடியோக்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அந்த சூழ்நிலைக்கான காரணம் புரியவில்லை. இது பிரெஞ்சு ஓப்பனுடனான எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. என்னை பல பத்திரிகையாளர்கள் சிறுவயதிலிருந்து பேட்டி எடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. இன்னும் வீரர்களின் மனநலனில் அக்கறை கொள்ளாமல் பிரஸ் மீட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்று அமைப்புகள் வற்புறுத்தினால் சிரிக்கத்தான் வேண்டும். இருந்தாலும், எனக்கு விதிக்கப்படும் அபராதத்தொகையின் பெரும்பகுதி வீரர்களின் மனநலனைக் காக்க செலவிடப்படும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஒசாகா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் சுற்றுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்ததால், ஒசாகாவுக்கு 15,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது பிரெஞ்சு ஓப்பன் நிர்வாகம். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து பிரஸ் மீட்களைப் புறக்கணித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போட்டியிருந்தே வெளியேற்றப்படலாம் என்றும் நான்கு கிராண்ட் ஸ்லாம் நிர்வாகங்களும் அவரை எச்சரித்தன. இந்நிலையில்தான் பிரெஞ்சு ஓப்பன் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ஒசாகா.

Naomi Osaka
Naomi Osaka
AP

"சில தினங்களுக்கு முன்பு பதிவிடும்போது, இப்படியொரு சூழ்நிலை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. இப்போதைய சூழ்நிலையில், நான் இந்தத் தொடரிலிருந்து விலகுவதுதான் இந்தத் தொடருக்கும் வீரர்களுக்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன். இப்போது அனைவரும் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். நான் எப்போதுமே கவனச் சிதறலாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். மனநலன் என்ற வார்த்தையை நான் அவ்வளவு கவனக்குறைவாகவும் பயன்படுத்திவிடமாட்டேன்.

உண்மை என்னவெனில், 2018 அமெரிக்க ஓப்பன் தொடருக்குப் பிறகு தொடர்ந்து மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நான் அதிகம் மற்றவர்களோடு பேசிடவோ பழகிடவோ மாட்டேன் என்பது. போட்டியின்போது நான் ஹெட்செட்களோடு இருப்பதை எல்லோரும் பார்த்திருக்கலாம். ஏனெனில், எந்தவித பதற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். டென்னிஸ் பத்திரிகையாளர்கள் எப்போதும் என்னிடம் கனிவாக நடந்துகொண்டிருக்கிறார்கள். (என் முந்தைய பதிவால் சில கூலான பத்திரிகையாளர்கள் காயமடைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்).

நான் பொது வெளியில் பேசக்கூடிய ஆள் இல்லை. மீடியாவில் பேசுவதற்கு முன் நான் அதிகம் பதற்றம் அடைந்துவிடுவேன். சரியான பதில் சொல்லுவதற்காக முயற்சிக்கும்போது என்னை நானே வருத்திக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவேன். இங்கே பாரிஸில் ஏற்கனெவே நான் மனசோர்வுடன்தான் இருந்தேன். அதனால், என் சொந்த நலனில் அக்கறை செலுத்துவது சரியானது என்று தோன்றியது. அதனால்தான், அந்த முடிவையும் நான் முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். மன்னிப்பு கேட்டும், இந்தத் தொடர் முடிந்ததும் விரிவாக விவாதிப்போம் என்று கூறியும் போட்டி நிர்வாகத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறேன். இப்போது களத்திலிருந்து சிறு ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்று தன் பதிவில் கூறியிருக்கிறார் 4 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இந்த லிட்டில் சாம்பியன்.

ஒசாகாவின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல முன்னணி விளையாட்டு வீரர்கள், அவருக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கிறார்கள். டென்னிஸ் வீரர்கள் செரீனா வில்லியம்ஸ், கோகோ கிராஃப், ஆஷ்லி பார்டி, ரஃபேல் நடால், முன்னாள் வீராங்கனை மார்டினா நவரத்லோவா, பேஸ்பால் வீரர்கள் கைரி இர்விங், ஸ்டீவன் கர்ரி போன்றவர்கள், ஒசாகாவின் முடிவுக்கு மதிப்பளிப்பதாகவும், அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். இப்படியொரு தைரியமான முடிவை எடுத்ததற்கு சிலர் வாழ்த்தியிருக்கிறார்கள்.

Naomi Osaka
Naomi Osaka
AP

இருந்தாலும், பிரெஞ்சு ஓப்பன் உள்ளிட்ட கிராண்ட் ஸ்லாம்களின் நடவடிக்கைகள் குறித்தோ, அவை வீரர்களின் மனநலனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தோ யாரும் எதுவும் பேசவில்லை. ஒசாகாவின் முடிவை மதிப்பதாக சொல்லியிருக்கும் நடால், பார்ட்லி ஆகியோர் பிரஸ் மீட்டில் பங்கேற்பது தங்கள் கடமை என்பதை உணர்ந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இங்கிலாந்து வீராங்கனை லாரா ராப்சன் மட்டுமே, கிராண்ட் ஸ்லாம் நிர்வாகங்கள் இந்த விஷயத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

ஒசாகா விலகியதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரெஞ்சு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஜில்லெஸ் மொரடான், "ஒசாகாவுக்காக வருந்துகிறோம். இது எதிர்பாராத ஒரு விஷயம். அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்றும், அடுத்த ஆண்டு இத்தொடரில் பங்கேற்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். மற்ற அனைத்து கிராண்ட் ஸ்லாம்களையும் போல, வீரர்களின் மனநலனையும் மற்ற திறன்களையும் மேம்படுத்த எங்களால் முடிந்த வகையில் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். அதில், மீடியாவும் ஒரு அங்கம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு மேல் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

பிரெஞ்சு ஓப்பன் அமைப்பும் சரி, மற்ற வீரர்களின் பேட்டிகளும் சரி, மீடியா என்பது வீரர்களின் கடமை என்பதை நிறுவியிருக்கிறது. ஒசாகாவின் முதல் பதிவில் இருந்த காட்டம், இன்றைய பதிவில் இல்லை. ஆக, டென்னிஸ் சங்கங்களின் இந்த முடிவை வீரர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது. மனநிலை சரி இல்லையென்றால் வீரர்கள் விலகலாமே தவிர, விதிகள் மாற்றப்படாது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. ஆனால், போராளிகளுக்கு விதிமுறைகள் வொர்க் அவுட் ஆகாதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு