Election bannerElection banner
Published:Updated:

`திறமை... தடை... தடுமாற்றம்...' - 32 வயதில் ஓய்வை அறிவித்த மரியா ஷரபோவா!

மரியா ஷரபோவா
மரியா ஷரபோவா

முதல் கிராண்ட் ஸ்லாமே ஜாம்பவானை வீழ்த்தி பெற்றதாலோ என்னவோ, அதுவரை ஷரபோவாவை சாதாரண வீராங்கனையாகப் பார்த்துவந்த இந்த உலகம், அதன்பின் ஜாம்பவானாக பார்க்கத் தொடங்கியது.

விம்பிள்டன் உள்பட ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்; உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவர்; செரீனா வில்லியம்ஸுடன் போட்டிபோடத் தகுதியானவர்; விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை... இன்னும் இப்படி எத்தனையோ அடையாளங்கள் கொண்டவர் மரியா ஷரபோவா. 2004-ம் ஆண்டு, 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில் பங்கேற்ற ஷரபோவா, அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டத்தை வென்று, உலகைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தார். ஷரபோவா வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமே இதுதான். முதல் கிராண்ட்ஸ்லாமிலேயே ஜாம்பவானை வீழ்த்தி வெற்றி பெற்றதாலோ என்னவோ, அதுவரை ஷரபோவாவை சாதாரண வீராங்கனையாகப் பார்த்துவந்த இந்த உலகம், அதன்பின் ஜாம்பவானாக பார்க்கத் தொடங்கியது.

மரியா ஷரபோவா
மரியா ஷரபோவா

அந்த காலகட்டத்தில், அடுத்தடுத்து ஷரபோவா ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் என வென்று அசத்தி, டென்னிஸ் ஃபீல்டில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். ஒருகட்டத்தில், உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையைப் பல ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்தார். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. 2016ச் இருந்து சரிவைச் சந்தித்தார். ஏற்கெனவே, காயம் காரணமாக அவ்வப்போது அவதிப்பட்டுவந்தாலும் 2016-ம் ஆண்டு, அவர் மோசமான சில பிரச்னைகளை எதிர்கொண்டார்.

2016-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இரண்டு ஆண்டுகள் தடையைப் பெற்றார். `மெலடோனியம்’ எனும் மருந்தை அவர் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த மருந்து தடைசெய்யப்பட்டது. ஆனால், ஆய்வு நடந்தது ஏப்ரலில். அவரோ, தான் அந்த மருந்தை கடந்த 10 ஆண்டுகளாகத் தனது மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், இதைத் தடைசெய்தது தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். ஆனாலும் தடை நீக்கப்படவில்லை.

தடைக் காலத்தை ஏகபோகமாக அனுபவித்த பின், மீண்டும் டென்னிஸ் களத்துக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், சோகம் விடவில்லை. தடையால் கிடைத்த 15 மாத இடைவெளி, அவரது ஆட்டத்தை மிகவும் பாதித்தது. பல டென்னிஸ் ஓப்பன்களில், ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறியது உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சிகொடுத்தது. அவரது டென்னிஸ் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பலரால் ஆரூடம் கூறப்பட்ட நிலையில், 'நான் திரும்ப வருவேன்னு சொல்லு' என்கிற அளவில் பேசிவந்தார்.

`உடலில் வலிமையும் ஆரோக்கியமும் இருக்கும் வரை, என் டென்னிஸ் வாழ்க்கை நீண்டுகொண்டே இருக்கும். டென்னிஸ் விளையாட்டின்மீது எனக்கு இருக்கும் காதலை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். ஒவ்வொரு முறை நான் அரங்குக்கு வரும்போதும், இன்னும் முன்னேறவும் வெற்றிபெறவுமே முயல்கிறேன்' என்று பேட்டிகளில் தனது தன்னம்பிக்கையை வார்த்தைகளை உதிர்த்தாலும், நாளுக்கு நாள் மோசமான ஃபார்மின் காரணமாகத் தவித்துவந்தார்.

மரியா ஷரபோவா
மரியா ஷரபோவா

இந்நிலையில்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுக்கும் வகையில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் ஷரபோவா. பிரான்ஸிலிருந்து வெளியாகும் வார இதழான vanityfair-க்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஓய்வவு முடிவை அறிவித்துள்ளார். மேலும், ``நான் இதற்கு புதியவள். எனவே, தயவுசெய்து என்னை மன்னிக்கவும். டென்னிஸுக்கு குட்பை. 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுவிட்டேன்.

என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று சொன்னால் நான் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்தது இல்லை. அதேநேரம் முன்னோக்கிப் பார்த்ததும் இல்லை. ஆனால், நான் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். டென்னிஸில் மிகப்பெரிய மலையைக் கடந்து வந்திருக்கிறேன் என்றே தோணுகிறது. நான் கடந்துவந்த பாதைகள் பள்ளத்தாக்குகளும், வேலிகளும் நிறைந்தவை. அதை உச்சியிலிருந்து பார்த்தால், நான் கடந்துவந்த பாதை நம்பமுடியாதவையாகத் தோன்றும்.

முயன்றுகொண்டே இருந்ததால், நிச்சயம் நம்பமுடியாத இடத்துக்கு நகர்த்த முடியும் என்று எப்போதும் நம்பினேன். அதை செயல்படுத்தினேன். என்னுடைய வாழ்க்கையை டென்னிஸ் விளையாட்டுக்காக அர்ப்பணித்தேன். டென்னிஸ்தான் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் டென்னிஸ் விளையாட்டை, பயிற்சியை இழப்பேன். எனது அன்றாட வாழ்க்கையிலிருந்து டென்னிஸை இழப்பேன். குறிப்பாக, சூரிய உதயம் முதல் மறைவு வரை பயிற்சிக்காகக் கூட காலில் ஷூவை அணிய முடியாது" என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

மரியா ஷரபோவா
மரியா ஷரபோவா

அமெரிக்காவில் குடியுரிமை வாங்கி அங்கு குடியேறினாலும், தனது சொந்த நாட்டின் மீதான பற்றால், ரஷ்ய வீராங்கனையாகவே கடைசி டென்னிஸ் போட்டியில் களம் கண்டார் ஷரபோவா. வீராங்கனையாக மட்டும வலம் வராமல் மாடலிங்கிலும் கோலோச்ச அவர் தவறவில்லை. தோல்வியோ... வெற்றியோ, ஷரபோவாவின் விளையாட்டைக் காண்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. காரணம், திறமைகளைக் கடந்து ஷரபோவாவின் அழகு, நளினம் விளையாட்டில் தனி கவனம் பெறும். ஓய்வு அறிவிப்பால் இந்த அழகுப் புயலின் ஆட்டத்தை இனி ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள்.

வீ மிஸ் யூ ஷரபோவா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு