Published:Updated:

ஒரே ஷாட்... ஒரே பாயின்ட்... ஆட்டம் மாறியது... மாற்றியது ஜோக்கோவிச் எனும் மாவீரன்! #Australianopen

Djokovic
Djokovic ( AP )

நடால், ஃபெடரர், ஜோக்கோவிச் மூவரிடமும் ஒரு ஒற்றுமையை பார்க்கலாம். அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தோல்வியை ஏற்கமாட்டார்கள். இறுதிவரை போராடுவார்கள். இந்த ஒரு ஆட்டிட்யூட் நடாலிடம் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், ஜோக்கோவிச் பெரிதாக ஒன்றும் நடக்காததைப்போல் காட்டிக்கொள்வார்.

ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் தன்னுடைய 17-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் கோப்பையை எட்டாவது முறையாக வென்று, அந்தக் கோப்பை அவரின் கைகளில் தவழும் நொடியில் ரஃபேல் நடாலைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 வீரராகவும் ஆகியிருக்கிறார்.

ஜோக்கோவிச் தீமுடன் மோதிய கடந்து ஐந்து ஆட்டங்களில் தீம் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தார். இதற்கு முன் ஃப்ரென்ச் ஓப்பன் அரையிறுதியில் மோதியபோது தீம் ஜோக்கோவிச்சை வீழ்த்தியிருந்தார். இந்தத் தொடரிலும் காலிறுதியில் நடாலை வீழ்த்தியிருந்தார் தீம். தற்போதுள்ள வீரர்களிலேயே கிரவுண்ட் ஷாட்டில் அதிவேகமாக அடிக்கக் கூடிய வீரர் தீம்தான். அவரின் ஃபோர்ஹேண்ட் ஷாட்டின் சராசரி வேகம் 132 கி.மீ. ஃபெடரரை போல் ஒரு கையில் பேக்ஹேண்ட் ஷாட் ஆடக்கூடியவர். அதன் சராசரி வேகமும் 119 கி.மீ. கிட்டத்தட்ட இவரை ஆன்டி-ஜோக்கோவிச் என்றே சொல்லலாம்.

Dominic Thiem
Dominic Thiem
AP

ஜோக்கோவிச்சின் பலத்தை உடைத்து எறிவதற்கான அத்தனை விஷயமும் இவரிடம் இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் இவர் ஆடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. பந்தை கோர்ட்டில் ஜோக்கோவிச் போலவே ஓடி ஓடி எடுப்பதாகட்டும், ஃபோர்ஹேண்ட் ஷாட் ப்ளேஸ்மென்ட் ஆகட்டும்... மிகச்சிறப்பாக ஆடினார். இந்தத் தொடரில், இரண்டாம் சுற்றிலிருந்து எல்லா போட்டிகளையும் நேர் செட்களில் வென்ற ஜோக்கோவிச் நேற்றும் அப்படியே வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது தீம் சிறப்பாக ஆடி ஆட்டம் ஐந்தாவது செட் வரை பரபரப்பாக செல்லக் காரணமானார்.

இருந்தும் இந்த ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்ததா என்றால் இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். இருவரும் சேர்ந்து மொத்தம் 114 அன்ஃபோர்ஸ்ட் எரர்ஸ், 10 டபுள் ஃபால்ட்ஸ் என இருவரும் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தவில்லை. அதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் ஜோக்கோவிச் ஆடியதைப் பார்க்கும்போது ``ஜோக்கோவிச்சா இது?” என்ற கேள்வி எழத்தான் செய்தது.

Dominic Thiem
Dominic Thiem
AP

இரண்டாவது செட்டில் ஜோக்கோவிச் டபுல் ஃபால்ட் செய்து சர்வை இழந்தார். சர்வ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தினால் ஒருமுறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு மீண்டும் நேர விரயம் செய்து முதல் சர்வ்வை இழக்கவும் நேரிட்டது. பேக்ஹேன்ட் ஷாட் எல்லாம் நெட்டில் விழுகிறது, ப்ளேஸ்மென்ட் மிஸ் செய்கிறார். அப்போதே புரிந்தது ஜோக்கோவிச் நார்மலாக இல்லை என்று. எந்தச் சூழ்நிலையிலும் நிதானமாக எதிராளியின் உளவியலை அறிந்து அதன்படி தன்னுடையை ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜோக்கோவிச் அந்த இரண்டு செட்களில் உளவியல் ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். எப்போதும் எதிராளியை தவறு செய்ய விட்டு பாயின்ட்களை எடுக்கும் ஜோக்கோவிச் நேற்று அவரே நிறைய தவறு செய்தார். முதல் செட்டில் 3 தவறு செய்தவர், அடுத்த இரண்டு செட்களில் 36 தவறுகள் செய்தார். முதல் செட்டைக் கைப்பற்றிய ஜோக்கோவிச் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4. 6-2 என இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தார்.

இருந்தும் நடால், ஃபெடரர், ஜோக்கோவிச் மூவரிடமும் ஒரு ஒற்றுமையை பார்க்கலாம். அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தோல்வியை ஏற்கமாட்டார்கள். இறுதிவரை போராடுவார்கள். இந்த ஒரு ஆட்டிட்யூட் நடாலிடம் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், ஜோக்கோவிச் பெரிதாக ஒன்றும் நடக்காததைப்போல் காட்டிக்கொள்வார்.

இதே ஆட்டிட்யூடை கடந்த விம்பிள்டன் ஃபைனலிலும் பார்த்திருப்போம். ஃபெடரின் சர்வில் இரண்டு சாம்பியன்ஷிப் பாயின்ட்களை ப்ரேக் செய்து கோப்பையை வென்று அசத்தினார். அங்கேயும் ஒரு ஷாட்டில் ஆட்டம் மாறிப்போனது. நேற்று முன்தினமும் முதல் செட்டை வென்று அடுத்த இரண்டு செட்களையும் இழந்து தடுமாறிக்கொண்டிருந்தார்.

Djokovic
Djokovic
AP

சாம்பியன்களின் சுபாவமே நெருக்கடியான நேரங்களை சமாளித்து மீண்டு வருவதுதானே. நெருக்கடியான சமயத்தில் மனதளவில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் ஜோக்கோவிச்.

``ஒரு பாயின்ட் அல்லது ஒரு ஷாட்தான் எனக்கும் தீமுக்குமான வித்யாசம்” என ஆட்டம் முடிந்ததும் ஜோக்கோவிச் சொன்னார். உண்மைதான்.

ஒரு ஷாட் ஆட்டத்தை ஒருவரிடமிருந்து பறித்துவிடும். தன்னம்பிக்கையை ஒருவருக்கு உயர்த்தி மற்றொருவருக்கு அளித்துவிடும்.

ஜோக்கோவிச் ரசிகர்களுக்கும் தெரியும், ஜோக்கோவிச்சுக்கும் தெரியும் ஒரு ஷாட், ஒரே ஒரு நல்ல ஷாட் ஜோக்கோவிச்சை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டுவந்து விடும் என்று. அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த ஷாட் அமைந்தது. நான்காவது செட்டில் 3-வது கேமில் தீமின் சர்வை ஒரு அற்புதமான பேக்ஹேண்ட் வின்னர் மூலம் ப்ரேக் செய்கிறார். ப்ரேக் செய்து விட்ட ரசிகர்களிடம் ஒரு பார்வையை விடுகிறார். அந்த ஷாட், அந்தப் பார்வை சொல்லிவிட்டது… ஜோக்கோவிச் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைந்துவிட்டார்.

Djokovic
Djokovic
AP
இவன் கடைசி துளி ரத்தமும் வியர்வையாய் விழும்... நடால் எனும் அற்புதன்! #Rafa #USopen

கடைசி இரண்டு செட்டிலும் ப்ரேக் பாயின்டை ஜோக்கோவிச் சேவ் செய்த விதமே வித்தியாசமாகத்தான் இருந்தது. நெட் ப்ளே பெரிதாக விரும்பாமல் பேஸ் லைனிலேயெ ஆடும் ஜோக்கோவிச் இரண்டு ப்ரேக் பாயின்ட்களையும் சர்வ் செய்து நெட் அருகே சென்று வாலி ஆடி வெற்றிபெற்றார். ப்ரேக் பாயின்ட், செட் பாயின்ட் போன்ற முக்கியமான பாயின்ட்களில் எல்லோரும் தங்களின் பலத்தையே முன்னிலைப்படுத்தி அதையே பின்பற்றுவர். ஆனால், ஜோக்கோவிச் அதை உடைத்தெறிந்து அதில் வெற்றியும் கண்டார். ஜோக்கோவிச் அட்டாக் செய்தார்!

ராட் லாவரில் புகழ் பெற்ற வாசகம் ஒன்று இருக்கும். ``நீங்கள் முன்னிலையில் இருக்கும் சமயம்தான் உங்கள் ஆட்டம் பெரிதாக பாதிக்கப்படக் கூடும்.” அந்த வாசகம் நேற்று டொமினிக் தீமிற்கு உண்மையானது. இரண்டு செட்கள் வென்று முன்னிலையில் இருந்த தீம் தடுமாறி ஜோக்கோவிச்சிடம் ஆட்டத்தைப் பறிக்கொடுத்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் தீமின் ஃபோர்ஹேண்ட் ஷாட்டில் இருந்த துல்லியம் விலகி பல ஷாட்கள் அவுட்டாக சென்றது. இப்போது தவறு செய்யாத முழு பலத்துடன் இருக்கும் ஜோக்கோவிச் அதை பயன்படுத்தி கோப்பையை வென்றார். ஆஸ்திரேலிய ஓப்பனை ஜோக்கோவிச் வெல்வது ஒன்றும் புதிதல்ல. ராட் லாவர் மைதானம் ஜோக்கோவிச்சின் கோட்டை. கடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனலில் நடாலை ஜோக்கோவிச் வென்ற விதத்தை இன்னமும் டென்னிஸ் ரசிகர்கள் வியப்புடன்தான் பார்க்கின்றனர். ஆனால், இரண்டு செட்கள் பின் தங்கி பின்பு வெகுண்டெழுந்து கோப்பையை ஜோக்கோவிச் வெல்வது இதுவே முதல் முறை.

பின் செல்ல