Published:Updated:

ஜோகோவிச் எனும் 'கடவுளை' வீழ்த்தி அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம்... மெத்வதேவ் வென்றது எப்படி?

ஜோகோவிச் - மெத்வதேவ்
ஜோகோவிச் - மெத்வதேவ்

ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுக்கு எதிராகத் தோல்வியடைந்தபின் ''ஒரு கடவுளை போன்றே ஜோகோவிச்சை பார்க்கிறேன்''' என மெத்வதேவ் பேசியிருந்தார். நேற்று இரவு அதே கடவுளுக்கு எதிராக சமர் செய்து வென்றிருக்கிறார் மெத்வதேவ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஃபெடரர் மற்றும் நடால் என இரு தரப்பு ரசிகர்களுமே ஆத்மதிருப்தி அடைந்ததைப்போல கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் வேண்டுதல், நேர்த்திக்கடன் எல்லாமே நிறைவேறியிருக்கிறது. ஆனால், அதை அவர்களே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம், ஜோக்கோவிச் தோற்றிருக்கிறார்.

அமெரிக்க ஓபன் பட்டத்தை தட்டிதூக்கி, அதிக கிராண்ட் ஸ்லாம்களை வென்றவர்களின் பட்டியலில் நடால் மற்றும் ஃபெடரரை பின்னுக்குத்தள்ளி வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் இளம் வீரரான மெத்வதேவிடம் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கிறார்.

எல்லா துறைகளுமே இரு துருவங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என எந்த துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எதிரும் புதிருமாக முட்டி மோதி கோலோச்சிக் கொண்டிருக்கும் இருவரை தாண்டி இன்னொருவர் எழுச்சி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. டென்னிஸிலும் அப்படியே. ஆனால், இங்கே விதிவிலக்காக ஜோகோவிச் வெகுண்டெழுந்து வந்தார்.

ஜோகோவிச் - மெத்வதேவ்
ஜோகோவிச் - மெத்வதேவ்
John Minchillo
ஃபெடரெரும் நடாலுமே டென்னிஸ் கோர்ட்டின் இருமருங்கிலும் கோட்டை கட்டி ஆளப்போகிறார்கள் என ஆருடம் சொல்லப்பட்ட காலத்தில், மூன்றாவதாக என்ட்ரி கொடுத்து அந்த இருவரையுமே அசரடித்தவர் ஜோகோவிச்.

தி பெஸ்ட்டாக இருக்கும் இரண்டு வீரர்களை அலறவிடும் நபருக்கு எப்பேர்பட்ட ரசிகர் கூட்டம் இருக்க வேண்டும்? ஆனால், நடாலுக்கும் ஃபெடரருக்கும் கிடைக்கப்பெற்ற காந்தசக்தி ஜோகோவிச்சுக்கு கிடைத்ததேயில்லை. இருதரப்பு ரசிகர்களும் சேர்ந்து ஜோகோவிச்சை குமுறுவார்கள். மும்முனை போட்டியில் மூன்றாவதாக நின்று சமர் செய்து கொண்டிருக்கும் நபர்கள் எதிர்கொள்ளும் பிரத்யேக பிரச்னை இது. ரசிகர் கூட்டம், பாராட்டு, வரவேற்பு இதெல்லாம் கூட ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், வரலாறு?

'நம்பர் 3' ஆக இருந்து மும்முனை போட்டியை உருவாக்க நினைப்பவர்கள் நீண்ட கால நோக்கில் எப்படி மக்களால் மறக்கப்படுகிறார்கள், வரலாற்றில் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதற்கு நம்மூர் சினிமா மற்றும் அரசியலிலேயே ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறது. வருங்காலத்தில் அப்படியொரு நிலைமை ஜோகோவிச்சுக்கும் ஏற்படும் அபாயம் இருந்தது. இதை ஜோகோவிச்சுமே உணரத் தொடங்கியிருந்தார். ஃபெடரர் மற்றும் நடால் அலையில் தன் பெயர் ஓரங்கட்டப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்க வெறித்தனமாக ஆடினார். அந்த இரு துருவங்களுக்கும் மேலான ஒரு இடத்தை பிடிக்க விரும்பினார். அதற்கு ஒரே வழி, கிராண்ட்ஸ்லாம்களை அடித்து நொறுக்குவது.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்று அசத்தியிருந்தார் நோவாக் ஜோகோவிச்.

இந்த வெற்றிகள் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்களின் பட்டியலில் 20 கிராண்ட் ஸ்லாம்களுடன் ஃபெடரர் மற்றும் நடாலுடன் இணைந்தார். ஆனால், இது ஜோகோவிச்சுக்கு போதாதே. அவர்கள் இருவரையும் தாண்டிய ஒரு உச்சபட்ச இடத்தை பிடிப்பதற்கு இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியே தேவை. அமெரிக்க ஓபன் தொடங்கியது. ஜோகோவிசுக்கான டார்கெட் லாக் செய்யப்பட்டது. இந்த தொடரில் ஃபெடரர் இல்லை. நடால் இல்லை. ஜோகோவிச்சின் வெற்றி எளிதில் சாத்தியப்படும் எனத் தோன்றியது. எதிர்பார்த்ததை போலவே இறுதிப்போட்டிக்கு வந்தார். ஜோகோவிச் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று அரிய சாதனையை செய்யப்போகிறார், அந்த வரலாற்று தருணத்தை அருகிலிருந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெரும் ஆவலுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே 'ஆர்தர் ஆஷ்' மைதானத்தில் கூடியிருந்தது.

கடைசியாக 1969-ல் ராட் லேவர் ஒரே ஆண்டில் கிராண்ட்ஸலாமின் நான்கு தொடர்களையும் வென்றிருந்தார். கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கு பிறகு ஜோகோவிச்சுக்கு அப்படி ஒரு சாதனையை செய்யும் வாய்ப்பு அமைந்திருப்பதால் ராட் லேவரே இந்த போட்டியை காண நேரில் வருகை தந்திருந்தார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் குழுமியிருந்த அத்தனை பேர் மனதிலும் ஒரே ஒரு விஷயம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஜோகோவிச் இந்த போட்டியை வெல்லப்போகிறார், வரலாற்றில் இடம்பிடிக்க போகிறார், ஒரு மகத்தான தருணத்தை அருகிலிருந்து அனுபவித்த பெருமிதம் நமக்கு கிடைக்கப்போகிறது என்பது மட்டுமே நிறைந்திருந்தது. நடால் ரசிகர்கள் கூட ஜோகோவிச் எப்படியும் வென்றுவிடுவார் என கணித்து ஜெலுசில் பாட்டில்களோடு தயாராக இருந்தனர்.

ஆனால், நடந்தது வேறு. ரஷ்யாவை சேர்ந்த மெத்வதேவ் ஜோகோவிச்சை நேர் செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்க ஓபனை தட்டிச்சென்றார். வரலாற்று தருணத்தை அனுபவிக்க போகிறோம் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய அப்செட்டை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கப்பெற்றது.

மெத்வதேவ்
மெத்வதேவ்
Seth Wenig

யார் இந்த மெத்வதேவ்?

கரியரை தொடங்கிய குறுகிய காலத்திலேயே ராக்கெட் வேகத்தில் தரவரிசையில் டாப் 10-க்குள் நுழைந்தவர் மெத்வதேவ். பெரிய தொடர்களில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்.

மெத்வதேவ் ரஷ்யாவைச் சேர்தவர். 25 வயதான இவர் 2014 முதல் தொழில்முறையிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவருகிறார். 2019 அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக முன்னேறிய மெத்வதேவை, நடால் மாஸ்டர் க்ளாஸ் எடுத்து ரன்னர் அப் ஆக்கியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சிடம் சிக்கி சின்னாபின்னமாகி ரன்னர் அப் ஆனார் மெத்வதேவ். ஒட்டுமொத்தமாக அவரின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இது.

மெத்வதேவ் கடினமாக போட்டியளிப்பார். ஒன்றிரண்டு செட்களையும் தட்டிப்பறிப்பார். ஆனால், ஜோகோவிச்தான் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜோகோவிச்
ஜோகோவிச்
Elise Amendola

அதைபோன்றே முதல் செட்டை மெத்வதேவே வென்றார். முதலில் ஜோகோவிச் கொஞ்சம் இறுக்கிப்பிடித்தாலும் இந்த செட்டை 6-4 என சிறப்பாக முடித்து 1-0 என லீட் எடுத்தார் மெத்வதேவ். ஜோகோவிச் முதல் செட்டை இழப்பதில் எந்த ஆச்சர்யமுமே இல்லை. அவருடைய கேம் ப்ளானே அப்படித்தான் இருக்கும். எம்.ஜி.ஆர் மாதிரி மூணு அடி வாங்கிவிட்டுத்தான் திருப்பி அடிப்பார். அந்த இன்ஜின் சூடுபிடிக்கக் கொஞ்ச நேரம் எடுக்கும். மேலும், இறுதிப்போட்டிக்கு முன்பான ஐந்து போட்டியிலுமே ஜோகோவிச் முதல் செட்டை தோற்றுதான் ஆரம்பித்திருந்தார். ஆனால், இறுதியில் போட்டியை வென்றார். ஜோகோவிச் ஃபார்முலா படி எல்லாமே சரியாக சென்றதால் அனைவருமே செம கூலாக போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இரண்டாவது செட்டில்தான் விஷயமே புரிந்தது. மெத்வதேவ் தனது வலுவான சர்வ்கள் மூலமே தொடர்ந்து பாயின்டுகளை அள்ளினார். ஜோகோவிச் அந்த சர்வ்களை ரிட்டன் செய்யத் தடுமாறினால் கூட பரவாயில்லை. ஆனால், அவர் அதற்கு முயற்சிக்கக்கூட இல்லை.

ஜோகோவிச்
ஜோகோவிச்
Seth Wenig
கோர்ட்டின் ஒரு ஓரத்தில் சிலை போல நின்றார். அவரின் கால்கள் நகர மறுத்தன. அடி வாங்கிவிட்டு திருப்பி அடிக்கும் ப்ளானில் ஜோகோவிச் இல்லை. நிஜமாகவே தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது அப்போதுதான் புரிந்தது.

பல கேம்களில் முதல் இரண்டு புள்ளிகளை எடுத்து ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஜோகோவிச்சுக்கு கிடைத்தது. ஆனால், அத்தனையையும் கோட்டைவிட்டார். மெத்வதேவின் கால்கள் பம்பரமாக சுழன்றது. நரித்தனத்தில் ஊறித்திளைத்ததை போன்ற அவரின் ரேக்கட் நெட் ப்ளேயில் லாவகமாக ஜோகோவிச்சை ஏமாற்றிக் கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் ஜோகோவிச் நகர மறுத்த கால்களின் மீது தனது கோபத்தை காண்பித்துக் கொண்டிருந்தார். விரக்தியில் நிறைய unforced error-களை செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது செட்டும் 6-4 என மெத்வதேவ் வசமானது. இப்போது மூன்றாவது செட் வழக்கமாக ஜோகோவிச் திருப்பி அடிக்க ஆரம்பிக்கும் செட். இந்த முறையும் மூன்றாவது செட்டிலிருந்து மாய வித்தைகளை நிகழ்த்த தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியில் கொஞ்சம் ஆக்ரோஷமாக தொடர்ந்து இரண்டு கேம்களை வென்று 5-4 என மூன்றாவது செட்டை கொஞ்சம் பரபரப்பாக்கினார். ஆனால், இது மெத்வதேவின் வெற்றியை சில நிமிடங்கள் தள்ளிப்போட மட்டுமே பயன்பட்டது.

ஜோகோவிச் - மெத்வதேவ்
ஜோகோவிச் - மெத்வதேவ்
John Minchillo

நெட்டில் அடித்து தன்னுடைய தவறு மூலமே மெத்வதேவ்கான மேட்ச் பாயின்ட்டை பெற்றுக் கொடுத்தார் ஜோகோவிச். வரலாற்றை தரிசிக்க வந்தவர்கள், ஒரு ஆச்சர்யத்தை தரிசித்துவிட்டு சென்றனர். ஆம், 27 போட்டிகளில் தோல்வியே தழுவாமல் மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்று, வரலாற்றை படைக்கப்போகிறேன் என ஒரு பெருங்கூட்டத்தை கூட்டி நிறுத்தியிருக்கும் 'GOAT' ஐ அவர்களின் முன்பே ஒரு இளம் வீரர் அதுவும் நேர் செட் கணக்கில் வீழ்த்தியது ஆகப்பெரும் ஆச்சர்யம்தான்.

இந்த போட்டியின் மீது உருவான எதிர்பார்ப்பும் அழுத்தமுமே ஜோகோவிச்சுக்கு எதிராக அமைந்துவிட்டது. போட்டி முடிந்த பின்பு எப்படி உணர்ந்தீர்கள்? என கேட்டதற்கு ''எப்படியோ இந்த போட்டி... இந்த தருணம் முடிந்துவிட்டது என்று திருப்தியே கொண்டேன். ஏனெனில் இந்த போட்டிக்கு உருவாகியிருந்த எதிர்பார்ப்பு பெரும் அழுத்தத்தை கொடுத்தது. அதன்பிறகே, தோல்வி குறித்து வருத்தமுற்றேன்'' என ஜோகோவிச் சொல்லியிருந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுக்கு எதிராக தோல்வியுற்ற பிறகு 'ஒரு கடவுளை போன்றே ஜோகோவிச்சை பார்க்கிறேன்' என மெத்வதேவ் பேசியிருப்பார்.

இன்று அதே கடவுளுக்கு எதிராக சமர் செய்து வென்றிருக்கிறார்! தெய்வத்தால் ஆகாதெனினும்....
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு