ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை இந்திய இணைக்கு எதிராகச் சிறப்பாக ஆடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று சானியா எண்ணியிருந்தார்.

ஆனால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் கண்ணீருடன் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் சானியா.
இதனிடையே பேசிய சானியா மிர்சா, "கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் எனது பயணம் 2005-ம் ஆண்டு மெல்பெர்னில்தான் தொடங்கியது.
என்னுடைய 18 வயதில் செரினா வில்லியம்ஸை இங்கேதான் மூன்றாவது சுற்றில் எதிர்கொண்டேன். அதன் பிறகு இங்கு அடிக்கடி ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் உங்கள் முன்பு பல தொடர்களில் வெற்றி பெற்றுள்ளேன், பல சிறந்த இறுதிச்சுற்றுகளை ஆடியுள்ளேன். இங்கே இப்படி என் மகனுக்கு முன்பாக ஓர் இறுதிப்போட்டியில் ஆடுவேன் என்றெல்லாம் அப்போது நினைத்துக் கூட பார்த்ததில்லை. இந்த Rod Laver அரங்கு எனது வாழ்க்கையில் மிக முக்கியமானது. எனது பயணத்தை முடிக்க இதைவிடச் சிறந்த அரங்கு எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்" எனக் கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் சானியா மிர்சா.
உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்கள் சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.