Published:Updated:

இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் மட்டுமே கவனம்: சானியா அதிரடி!

இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் மட்டுமே கவனம்: சானியா அதிரடி!
இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் மட்டுமே கவனம்: சானியா அதிரடி!
இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் மட்டுமே கவனம்: சானியா அதிரடி!

புது டெல்லி: இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான காயங்களால் பாதிக்கப்பட்டதாலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. எனினும், இனி ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாட அவர் விரும்பவில்லை என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார் என்றே கருதப்படுகிறது.

இது தொடர்பாக சானியா கூறியதாவது:-

கடந்த ஜனவரியில் 3-வது அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதைக் குறைத்துக் கொண்டேன். இப்போது நான் விளையாடும்போது உடலில் கடுமையான வலிகள் ஏற்படுகின்றன. நான் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முறை வீராங்கனையாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஒற்றையர் பிரிவு போட்டியில் இப்போதும் மகிழ்ச்சியோடே விளையாடி வருகிறேன். இனி வரும் காலங்களில் தேவைப்பட்டால் மட்டுமே நாட்டுக்காக ஒற்றையர் பிரிவில் விளையாடுவேன்.

இரட்டையர் பிரிவு போட்டியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்.

'ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்காமல் போயிருந்தால் டென்னிஸ் வாழ்க்கை முழுமையடையவில்லை என்று நினைத்திருக்கலாம். ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதற்கு சிறிது அதிர்ஷ்டமும் தேவை என்று நினைக்கிறேன்.

டென்னிஸில் ராஜாவாகத் திகழும் ரோஜர் ஃபெடரரே இன்னும் ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்லவில்லை. டென்னிஸில் அசைக்க முடியாத வீரராக இருந்த அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் ஒலிம்பிக்கில் எந்தப் பதக்கமும் வென்றதில்லை'.

லியாண்டர் பயஸ் மிகச்சிறந்த இரட்டையர் பிரிவு வீரர். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் விளையாடியது வேடிக்கையாக இருந்தது. அதே நேரம் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து விளையாடுவது குறித்து மகேஷ் பூபதியுடன் இன்னும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் டென்னிஸ் மீதான காதல் எனக்குள் இருக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன். தரவரிசையில் முன்னேற விரும்புகிறேன். ஓய்வுபெறுவதற்கு முன்னதாக ஓரிரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்ல விரும்புகிறேன்'. என்றார்.