கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 101-வது வெற்றி என்ற மைல்கல்லை எட்டிய உற்சாகத்துடன் இறுதி ஆட்டத்தில் களமிறங்கினார் `டென்னிஸ் ஜாம்பவான்' செரீனா வில்லியம்ஸ். செரீனாவை எதிர்த்து களம்கண்டவர் கனடா நாட்டைச் சேர்ந்த 19 வயதே ஆன பியான்கா ஆண்டரீஸ்கு என்பவர். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்... 10-வது முறையாக அமெரிக்க ஓபன் என சாதனைகளுக்கு மத்தியில் செரீனா பங்கேற்றார் என்றால் ஆண்டரீஸ்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம்.

ஆனால் அந்த பயம் துளியும் இல்லாமல் ஆண்டரீஸ்கு விளையாடியது இந்தப் போட்டியில் கவனம் ஈர்த்தது. ஒருமணி நேரம் 41 நிமிடங்கள் நீட்டித்த இந்த ஃபைனலில் முதல் செட்டை 6-3 என்று செரீனாவுக்கு இடமே தராமல் கைப்பற்றினார் ஆண்டரீஸ்கு. இரண்டாவது செட்டில் அதைவிட ஆக்ரோஷமாக விளையாடினார் ஆண்டரீஸ். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் செரீனாவும் ஆக்ரோஷமாக விளையாட போட்டி விறுவிறுப்பானது. இறுதியில் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஆண்டரீஸ்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தனது அறிமுக தொடரிலேயே அமெரிக்கா ஓபன் டென்னிஸ் கோப்பையை கைப்பற்றிய ஆண்டரீஸ்கு, முதல்முறை கிராண்ட்ஸ்லாம் வெல்லும் கனடா வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். சாதனை படைத்த பியான்காவிற்கு 27 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ``ஐ லவ் பியான்கா. அவள் ஒரு சிறந்த பெண் என்று நினைக்கிறேன். பியான்கா மிகச் சிறப்பாக விளையாடினார். அவளுடைய ஆட்டம் என்னை சிறப்பாக விளையாட தூண்டியதோடு ஒவ்வொரு ஷாட்டுக்கும் எனக்கு அழுத்தம் கொடுத்தது.''

இப்படி பியான்காவை பாராட்டிய செரீனா, `` நான் விளையாடிய போட்டிகளில் மிக மோசமான போட்டி இது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை அறிவது கடினம். ரெக்கார்டுகளுக்காக விளையாட வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் கிராண்ட்ஸ்லாம்களை வெல்ல முயற்சிக்கிறேன்... அவ்வளவே. ஆனால் இது போன்ற தோல்வி நிச்சயமாக வெறுப்பாக இருக்கிறது. பெரும்பாலும் நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் முடிந்ததை நான் இன்னும் செய்கிறேன்'' எனவும் பேசினார்.
யார் இந்த பியான்கா ஆண்டரீஸ்கு?
``சிறு வயது முதலே இந்த தருணத்தை நினைத்து எப்போதும் கனவு கண்டுள்ளேன். எனது அந்த கனவு நனவாகும் என்று மக்கள் பலரும் நினைத்து இருக்கமாட்டார்கள். ஆனால் எனது நம்பிக்கையை தொடர்ந்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. வெற்றிக்கான புள்ளியை பெற்றதும் உண்மையில் அதிர்ச்சியில் உறைந்தேன். நான் இறுதிப்போட்டிக்கு முன்னேற தகுதியானவள் என்று நினைக்கிறேன்.

செரீனாவின் ஓய்வுக்கு முன்பு அவருடன் விளையாடிவிட வேண்டும் என்று விரும்பினேன். பலமுறை சாம்பியனான அவருக்கு எதிராக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்திருக்கிறேன். காரணம் விளையாட்டில் செரீனாவும் அவருடைய முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நானும் எனது உயர்ந்த தர ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இன்றைக்கு அவருடன் விளையாடியபோது புள்ளிகளை பெறுவது மிகவும் கடினமானதாக இருந்தது'' என்ற வெற்றிக்கு பிறகு பேசிய ஆண்டரீஸ்குவின் சொந்த நாடு கனடா கிடையாது.
ரோமானியா நாட்டை பூர்விகமாக கொண்டவர்தான் பியான்கா. அவரது தந்தையும், தாயும் இரண்டு சூட்கேஸ்களுடன் கனடா நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். பின்னர் கனடாவிலேயே பியான்கா பிறக்க அங்கேயே வளர்த்துள்ளார். சிறுவயது முதலே டென்னிஸில் கவனம் செலுத்திவரும் பியான்கா ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். சரியாக 2016ம் ஆண்டு.... பியான்காவுக்கு அப்போது 16 வயது. உள்ளூர் போட்டியில் போட்டியில் வென்ற பின் காசோலையில் யு.எஸ் ஓபனை வென்றது போல் தனது பெயரையும் அதற்கான பரிசுத்தொகையையும் போலியாக எழுதிவைத்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் அந்த தொகையை அதிகரித்துவைத்ததுடன் ஒருநாள் அதனை உண்மையாகவே வெல்ல வேண்டும் என்று நினைத்து அதற்கான தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். சரியாக மூன்றே ஆண்டுகளில் தான் நினைத்ததுபோலவே லட்சியத்தை அடைந்துள்ளார். அதுவும் முன்னாள் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி. எந்த காசோலையில் தனது பெயரை போலியாக லட்சியத்துக்கு உந்துதலாக நினைத்தாரோ.. அதே காசோலையில் இன்று அவர் பெயர் உண்மையிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நினைவுகூறும் பியான்கா, ``2015ல் நான் கோப்பை வென்ற பிறகு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விளையாட்டில் என்னால் பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்று உணர்ந்தேன். எனவே, நான் ஒரு காசோலையை வாங்கி அந்த ஆண்டின் அமெரிக்க ஓபன் பரிசுத் தொகையையுடன் எனது பெயரையும் எழுதினேன்.

ஒவ்வொரு ஆண்டும் நான் அதை அதிகரித்துக்கொண்டே இருந்தேன், ஏனெனில் அது மாறிக்கொண்டே இருந்தது. அந்த நாளிலிருந்து இந்த தருணத்தை நான் காட்சிப்படுத்திக்கொண்டே இருந்தேன். இப்போது நான் உண்மையான சாம்பியனாக இருக்கிறேன் நினைக்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது'' என உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார்.