Published:Updated:

எம்மா ரடுகானு எனும் புதிய அமெரிக்க ஓபன் சாம்பியன்… யார் இவர், 18 வயதில் சாதனை எப்படி சாத்தியமானது?

150-வது ரேங்க் வீரராக தொடருக்குள் நுழைந்து, இன்று காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் மற்றொரு இளம் வீராங்கனையான லேலா ஃபெர்னண்டஸை 6-4, 6-3 என நேர்செட்டில் தோற்கடித்து அமெரிக்க ஒபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் எம்மா ரடுகானு.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் புதிய சரித்திரத்தை படைத்திருக்கிறார் பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு. தகுதிச்சுற்று வீரராக களம் இறங்கி பல முன்னனி வீரர்களை தோற்கடித்து, விளையாடிய பத்து போட்டிகளிலும் ஒரு செட் கூட இழக்காமல் இறுதிப் போட்டியில் வெல்வது எல்லாம் அசாத்தியமான சாதனை. 18 வயதேயான எம்மா ரடுகானுக்கு இதெல்லாம் கைகூடியிருக்கிறது.

150-வது ரேங்க் வீரராக தொடருக்குள் நுழைந்து, இன்று காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் மற்றொரு இளம் வீராங்கனையான லேலா ஃபெர்னண்டஸை 6-4, 6-3 என நேர்செட்டில் தோற்கடித்து அமெரிக்க ஒபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் எம்மா ரடுகானு.

எம்மா ரடுகானு
எம்மா ரடுகானு
Seth Wenig

கோப்பையை வெல்ல ரடுகானு கடந்து வந்த பாதை அவ்வுளவு எளிதானாதல்ல. மெயின் டிராவில் பங்கேற்க முதலில் மூன்று தகுதிச்சுற்று போட்டிகளை ரடுகானு வென்றாக வேண்டியிருந்தது. அந்தப் போட்டிகளை அசால்ட்டாக டீல் செய்து வெற்றி வாகை சூடினார்.

அதன்பிறகு அடுத்தடுத்து டாப்-50 ரேங்க்கில் உள்ள மூன்று வீரர்களை தோற்கடித்து, தான் ஒன்றும் அமெரிக்காவை சுற்றிப் பார்க்க வரவில்லை என ஆச்சர்யப்பட வைத்தார். நம்பர் ஒன் வீராங்கனை அஷ்லி பார்டியை தோற்கடித்த ஷெல்பி ரோஜர்ஸ், காலிறுதியில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெலிண்ட பெனிக் ஆகியோர் ரடுகானுவின் வெற்றிக்கு தடங்கலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.

ஒரு வாரத்துக்கு முன்புவரை பள்ளிச் சிறுமியாக இருந்த ரடுகானு, தற்போது அமெரிக்க ஓபன் அரங்கத்தில் மற்றவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அரையிறுதிப் போட்டி நிச்சியம் இவருக்கு சவாலாக இருக்கும் என கருதப்பட்டது. ஏனென்றால் அவர் எதிர்த்து விளையாட இருந்தது பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதி வரை சென்ற கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி. ஆக்ரோஷ ஆட்டத்துக்குப் பெயர்போனவர் இவர். ஆனால் ரடுகானு இதைப்பெற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கம் போல் இவரையும் ஒரு செட் கூட இழக்காமல் தோற்கடித்தார்.

எம்மா ரடுகானு
எம்மா ரடுகானு
Frank Franklin II

பொதுவாக டென்னிஸ் உலகில் சிறுவயதிலேயே பயிற்சி கொடுத்து வீரர்களை வளர்த்தெடுப்பார்கள். இளம் வயதிலேயே இவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சப்படும். விளம்பர ஒப்பந்தங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் என இவர்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகள் அள்ளி வீசப்படும். ஆனால் இவர்கள் கண்ணில் எல்லாம் ரடுகானு படவில்லை. அதற்காக அவரிடம் திறமை இல்லை என கூறி விட முடியாது.

338-வது ரேங்கில் இருந்த ரடுகானு, வைல்ட் கார்டு மூலம் முதன்முதலில் விம்பிள்டன் போட்டியில் நுழைந்தார். சொல்லப் போனால் எந்தப் எதிர்பார்ப்பும் இல்லாத யாரோ ஒருவராகதான் டென்னிஸ் உலகில் களம் பதித்தார் ரடுகானு. அதற்கு காரணம் இவரது பெற்றோர்கள். டென்னிஸை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்பதே பெற்றோர்கள் அவருக்கு இட்ட கட்டளை. இவரது தாயார் சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் படிப்பும், கடின உழைப்பும் இளம் வயதிலிருந்தே இவரிடம் ஒட்டிக் கொண்டது. ஒருபக்கம் பள்ளி வகுப்புகள், மறுபக்கம் கொரோனா நோய்தொற்று என 18 மாதங்களாக எந்தப் போட்டியிலும் ரடுகானுவால் கலந்துகொள்ள முடியவில்லை.

எம்மா ரடுகானு
எம்மா ரடுகானு
Elise Amendola

ஆனாலும், அமெரிக்க ஓபனில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் ரடுகானு. இந்த்தொடர் முழுக்க அவரது ஆட்டம் முறையாகவும், திட்டடமிட்டதாகவும், எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டு கொடுக்க கூடாத என நேர்த்தியான் ஆட்டமாகவும் இருந்தது. இவரை இளம் அறிமுக வீரராகவோ உற்சாக துள்ளல் கொண்ட இளைஞர்களின் அடையாளமாகவோ மட்டும் குறுக்கி விட முடியாது. இவரது ஸ்ட்ரோக்ஸ் ஒவ்வொன்றும் அச்சு பிசகாமல் ‘டெக்ஸ்ட்புக்’ ஷாட்களாக இருந்தன. இவரது டெக்னிக் அவ்வுளவு எளிதில் தகர்க்க முடியாதவை. சர்வீஸ் டெக்னிக்கில் எந்த தவறும் இல்லை. ஃபோர்ஹேண்ட் மற்றும் பேக்ஹேண்ட் ஷாட்? தரமோ தரம். கிரவுண்டை கவர் செய்வதில்? அற்புதம். மொத்தத்தில் 18 வயதிலேயே பல கோப்பைகளை வென்ற அனுபவ வீரர் போல் ஆடினார் எம்மா ரடுகானு.

ஒன்டைம் வொண்டராக இல்லாமல் டென்னிஸ் உலகில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைப்பார் இந்த எம்மா என எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு