Published:Updated:

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!
பிரீமியம் ஸ்டோரி
நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

Published:Updated:
நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!
பிரீமியம் ஸ்டோரி
நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

‘‘அவருக்கு உங்களை மோசமாக விளையாடவைக்கும் திறமை இருக்கிறது” - ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் தோற்றபின், ரஃபேல் நடால் பற்றி ஸ்டெஃபானோஸ் சிட்ஸிபாஸ் சொன்ன வார்த்தை அது. நடால் காட்டிய ஆட்டத்தில் விரக்தியின் உச்சத்தில் இருந்தார் அவர். ஃபெடரரை வென்று, முதல் கிராண்ட் ஸ்லாம் கனவோடு இருந்தவரை, அநாயசமாக வெளியேற்றினார் நடால். அதுவரை தவறுகளே செய்யாத சிட்ஸிபாஸ், அந்தப் போட்டியில் செய்தது 22 `அன்ஃபோர்ஸ்டு எரர்ஸ்’! நடால் அவரைத் தவறு செய்ய வைத்தார். மோசமாக விளையாடவைத்தார். சிட்ஸிபாஸ் சொன்னது 100 சதவிகித உண்மை.

இந்த ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் நடால் செய்தது அதுதான். தன்னை எதிர்த்து விளையாடிய ஒவ்வொரு வீரரையும் மோசமாக விளையாடச் செய்தார். அவரது புதிய அணுகுமுறை அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது. இந்த 5 மாத இடைவெளியில் தன் சர்வீஸை பலமடங்கு முன்னேற்றி இருந்தார். வழக்கமாக, ஃபோர்ஹேன்ட் ஷாட்களாலும், கிராஸ்கோர்ட் ஷாட்களாலும் திணறடிப்பவர், சர்வீஸ்களாலும் திணறடிக்கத் தொடங்கினார். முதல் சுற்று தொடங்கி, அரையிறுதிவரை... எவராலும் அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு செட்டைக்கூட இழக்கவில்லை. 18/18! அவரது புதிய டெக்னிக்கைவிடவும் பிரமிக்கவைத்தது என்னவோ, அவரிடம் காணப்பட்ட அந்த உச்சபட்ச நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளில், ஹார்ட் கோர்ட்களில் அவர் அவ்வளவு `கம்ஃபர்ட்டாக’ ஆடியதில்லை. இது நடாலின் புதிய வெர்ஷனாகவே தெரிந்தது.

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

இந்தப் புதிய நடால், தன் புதிய அக்ரெஸிவ் அணுகு முறையால் நிச்சயம் ஜோகோவிச்சை வென்றுவிடுவார் என்றுதான் எதிர்பார்க் கப்பட்டது. பல வல்லுநர்களும் அதைத்தான் சொன்னார்கள். ஜோகோவிச்சின் தடுப்பாட்டத்தை, நடாலின் அதிரடி உடைத்துவிடும் என்று பலரும் கணித்தனர். `இது நடாலின் ஸ்லாம்’ என்றார்கள். பெரும்பாலான ரசிகர்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகள் முன்பு ஃபெடரரிடம் இழந்ததை, ஜோகோவிச்சிடம் மீட்பார் என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள். 7 ஆண்டுகளுக்கு முன் அதே அரங்கத்தில், இவர்கள் இருவரும் சுமார் 6 மணிநேரம் நடத்திய அந்த மாபெரும் யுத்தம் போன்றதொரு ஆட்டம்தான் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்...!

`6-3, 6-2, 6-3’... இப்படியொரு ஸ்கோரை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நடால் சரண்டர் ஆகிவிட்டார். நேர் செட்களில், எந்தவித போட்டியும் இல்லாமல் வீழ்ந்துவிட்டார். நடாலின் ஆட்டத்தில், அந்த ஆக்ரோஷம் இல்லை. நடாலின் முகத்திலும்கூட! கடந்த 2 வாரங்களாக அவரது ஆட்டத்தைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம்... அதிர்ச்சி..! அவரிடம் வீழ்ந்த வீரர்களுமே அதிர்ச்சியடைந்திருப்பார்கள். என்ன ஆச்சு நடாலுக்கு? நடால் தவறுகள் செய்தார். நடால் மோசமாக விளையாடினார். நடால் சிட்ஸிபாஸுக்குப் பரிமாறிய உணவை, நடாலுக்கு விருந்தாக்கினார் ஜோகோவிச். நோவாக் ஜோகோவிச், நடாலை மோசமாக விளையாட வைத்தார்!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

3 செட்களில் வெறும் எட்டே கேம்கள், ஜோகோவிச்சின் முதல் 5 சர்வீஸ்களில், ஒரே ஒரு பாயின்ட் (ஜோகோவிச் - 25, நடால் - 1), 28 unforced errors..! ஆனால், இது நடாலின் தவறுகளால் ஏற்பட்ட முடிவுதான். ஆனால், அவர் செய்த ஒவ்வொரு தவறும் ஜோகோவிச் ஆடிய ஆட்டத்தின் எதிர்வினை. தொடரில் ஒரு செட் கூடத் தோற்காத நடாலை, முதல் செட்டின் மூன்றாவது கேமிலேயே வீழ்த்தினார் இந்த டென்னிஸ் அரக்கன்.

`டென்னிஸ் உலகின் மிகச் சிறந்த டிஃபன்ஸிவ் வீரர் யார்?’ இந்தக் கேள்விக்கு `மைக்ரோ செகண்ட் டிலே’ கூட இல்லாமல் ஜோகோவிச் என்று பதில் சொல்லிவிடலாம். மற்ற வீரர்கள் போல் பாயின்ட் எடுக்க ஆசைப்பட்டு, புதிதாக ஏதும் செய்து எதையும் இழக்கமாட்டார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எவ்வளவு சிறிய வீரராக இருந்தாலும், ஒவ்வொரு பாயின்டுக்காகவும் காத்திருப்பார். தவறுகளை அறவே காண முடியாது. எதிர்த்து விளையாடுபவர் தவறு செய்தால்தான் அந்த பாயின்ட் முடிவுக்கு வரும். அதுவரை ஜோகோவிச் விடமாட்டார். நியூட்டனின் மூன்றாம் விதி, சமகாலத்தில் சரியாகப் பொருந்தும் இடம் அது. நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும், பதில் உண்டு!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

நடாலுக்கு இது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால்தான் அரையிறுதிவரை அதிரடி காட்டியவர், தொடக்கத்தில் கொஞ்சம் அமைதியாக இருந்தார். பேஸ்லைன் அருகிலேயே நின்றார். ஆனால், அவர் அட்டாக் செய்ய நினைத்தபோதெல்லாம், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் - ஜோகோவிச்சின் மாபெரும் பலம் - பெர்ஃபெக்ஷன்! அவர் இருக்கும் கோர்ட்டின் எதிர்ப்புறம், பேஸ்லைனும் சைட்லைனும் சந்திக்கும் இடத்தில் ஒரு சிறிய வட்டம் வரைந்து, அதில் சரியாக அடிக்கச் சொன்னால், 10-ல் 9 ஷாட்களை சரியாக அடித்துவிடுவார். அந்த ஷாட்களை எதிர்த்து, சர்வீஸ் லைன் நோக்கி நகர நடாலால் முடியவில்லை. பேஸ்லைனிலேயே தேங்கி நின்றார். நடாலின் திறமையும் அங்கேயே தேங்கி நின்றது. முதல் கேம்... ஒரு பாயின்ட் கூட இல்லை. 15-0, 30-0, 40-0.. கேம்.

நடாலின் அந்தப் புதிய சர்வீஸ் ஜோகோவிச் முன்னால் எந்த மாயமும் நிகழ்த்தவில்லை. தன் அசத்தல் மூவ்மென்ட்களால், அந்த சர்வீஸ்களை அற்புதமாகத் திருப்பி அனுப்பினார் ஜோகோ. சொல்லப்போனால், தன் சர்வீஸில் ஆடியதைவிட, நடாலின் சர்வீஸில் கொஞ்சம் உக்கிரம் காட்டினார். பேக்ஹேண்ட் ஷாட்கள் புயலெனத் திரும்பிவந்தன. ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஜோகோவிச் பதில் சொல்ல, பொறுமை இழந்தார் நடால். பேஸ்லைனின் முனையை, சைட்லைனின் ஓரத்தைக் குறிவைத்தார். ஆனால்... அவர் ஜோகோவிச் இல்லையே! பெர்ஃபெக்ஷன் இல்லாத ஷாட்கள், ஜோக்கருக்கு எளிதாகப் புள்ளிகளைப் பரிசளித்தன. 0-15, 0-30, 15-30, 15-40, கேம்... நடாலின் முதல் சர்வீஸையே முறியடித்தார் ஜோகோவிச். 2-0! அரையிறுதிவரை அவரிடம் காணப்பட்ட அந்த அதீத நம்பிக்கை, கரைந்துகொண்டிருந்தது.

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

நடாலின் மிகப்பெரிய பலம், அவரது ஃபோர்ஹேன்ட் கிராஸ் கோர்ட் ஷாட்கள். கோர்ட்டின் இரண்டு புறமும் அடித்து, எதிராளியின் மூவ்மென்ட்டை `டிக்டேட்’ செய்வார். ஜோகோவிச்சிடம் அது சுத்தமாக எடுபடவில்லை. அந்த 36 அடி அகலம் கொண்ட கோர்ட்டின் இரு முனைகளையும் நொடியில் கவர் செய்தார் ஜோகோ. வலதுபக்கம் செல்லும் பந்தைத் திருப்பி அனுப்பிவிட்டு, அடுத்த நொடியே இடது புறம் சென்று பேக்ஹேண்ட் ஷாட் மூலம் பந்தைத் திருப்பி அனுப்பினார். அந்த மூவ்மென்ட்களிலும், திருப்பி அனுப்பப்பட்ட ஷாட்களிலும் உச்சகட்ட பெர்ஃபெக்ஷன். ஜோகோவிச் வலது மூலைக்குச் செல்கிறார் என்றால், தன் கால்களை அடுத்த நொடியே ஓடுவதற்குத் தயாராக இருப்பதுபோலத்தான் நகர்த்தினார். முழு உடலையும் வலது மூலைக்கு எடுத்துச் செல்லவில்லை. தன் கால்களையும், கைகளையும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளைத்தார். நடாலால் அங்கு எதுவுமே செய்ய முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஃபெடரர் உட்பட அத்தனை வீரர்களையும் தாக்கிய தன் பிரமாஸ்திரத்தை ஒரு வீரர் `ஜஸ்ட் லைக் தட்’ டீல் செய்தால்..?

 தன் இரண்டாவது சர்வீஸிலும் கேமை வெல்ல, 3-0 என முன்னிலை பெற்றார் ஜோகோவிச். நடால் அதை எதிர்பார்க்கவில்லை. அதிரடி காட்ட முடியவில்லை. சர்வீஸிலும் பலன் இல்லை. தன் மிகப்பெரிய ஆயுதத்தையும் எதிரில் இருப்பவர் ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார். என்ன செய்வது? விரக்தியின் உச்சத்திற்குச் சென்றார் நடால். முகத்தில் அவ்வளவு வெறுமை. குழம்பத் தொடங்கினார். தவறுகளுக்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காமல், உச்சபட்ச பெர்ஃபெக்ஷனோடு ஆடும் அந்த வீரனுக்கு எப்படிப் பதில் சொல்வது? ராட் லேவர் அரங்கில் கூடியிருந்த ரசிகர் கூட்டத்தின் கோஷம், தனக்குப் பாதகமாக இருக்கும் ஸ்கோர் போர்டு, அதற்கும் மேலாக... கொஞ்சமும் சலனம் இல்லாமல் நிற்கும் அந்த செர்பிய வீரன்... நடால் மீதான நெருக்கடி அதிகரித்தது. குழப்பம் அதிகரித்தது. இறுதியாக... அவர் செய்த தவறுகள் அதிகரித்தது!

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

ஜோகோவிச் கடினமான பந்துகளையும் கோர்ட்டுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க, எளிதான ஷாட்களையும் வெளியே அனுப்பினார் ரஃபா. போதாக்குறைக்கு, பேக்ஹேண்டில் ஆடவேண்டிய ஷாட்களை, கோர்ட்டின் மூலைக்குச் சென்று ஃபோர் ஹேண்டில் திருப்பி அனுப்பினார். ஜோகோவிச் `placement’ செய்ய அது ரொம்பவே உதவிகரமாக இருந்தது. நடாலால் உடனடியாக அடுத்த ஷாட்டுக்கு நகர முடியவில்லை. சரி, அடித்த பேக்ஹேண்ட் ஷாட்களையாவது ஒழுங்காக ஆடினாரா? இல்லை. இரண்டு கைகளில் ஆடவேண்டிய ஷாட்களை ஒரு கையால் ஆடினார். பெரும்பாலான ஷாட்கள், ஜோகோவிச் நின்ற இடத்துக்கே வந்தன. அதுவும் float ஆகி, மெதுவாக. ஜோகோவிச் ஃபோர்ஹேண்ட் வின்னர் அடிப்பதற்கு ஏதுவான டைமிங்கை ஏற்படுத்திக்கொடுத்தன அந்த ஷாட்கள்.

சரி, டிஃபன்ஸ் ஆடும் ஜோகோவிச்சை, சர்வீஸ் லைனுக்கு அருகில் எடுத்துவர நினைத்தார் நடால். அதனால் டிராப்கள் முயற்சி செய்தார். ஆனால், அந்த வலையிலும் அவரே விழுந்தார்! சில ஷாட்கள் நெட்டிற்கு முன்பே விழுந்தன. நெட்டைத் தாண்டிய ஷாட்களை, தன் டிரேட் மார்க் வின்னர்களால் தன்வசப்படுத்தினார் நோவாக். ஆட்டத்தின் ஒவ்வோர் அசைவும் நடாலுக்கு எதிராகவே இருந்தது.

நடுங்கிய நடால்... ஜோகோவிச் என்னும் அரக்கன்!

எதிரில் ஆடும் வீரன் 100 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு விளையாடினால், நாம் 200 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு விளையாடவேண்டும். அப்போதுதான் கடுமையான போட்டியளிக்க முடியும். ஆனால், நடாலிடம் 20 சதவிகிதம்கூட அது வெளிப்படவில்லை. ``நான் 100 சதவிகிதம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை விளையாடி யிருந்தாலே வென்றிருப்பேனா தெரியவில்லை” என்று போட்டிக்குப் பின்னர் சொன்னார் நடால். ஆம் அதுதான் உண்மை. ஏனெனில், ஜோகோவிச் ஆடியது அப்படி ஓர் ஆட்டம். உளவியல் ரீதியாக நடாலை மூன்றாவது கேமிலேயே வீழ்த்தினார். ஆட்டம் தொடங்கி 11 நிமிடங்களிலேயே முடிவைத் தீர்மானித்துவிட்டார். அந்த இடத்திலேயே தன் ஏழாவது ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தையும் வென்றுவிட்டார்.

ஆக்ரோஷம் காட்டவில்லை, சர்வீஸ் லைனுக்கு அருகில் சென்று ஆதிக்கம் செலுத்த நினைக்கவில்லை, ஏஸ்கள் அதிகம் இல்லை... ஆனால், ஒருதலைபட்சமாக, ஒரு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியை வென்றிருக்கிறார் ஜோகோவிச். தன் டிஃபன்ஸிவ் ஆட்டத்தால்... கால்பந்து மேனேஜர்களின் பிதாமகன் சர் அலெக்ஸ் ஃபெர்குசன் ஒருமுறை சொல்லியிருக்கிறார். ``Attack wins you games. But defense wins you titles”. கால்பந்து போன்ற அணி விளையாட்டுக்கு மட்டுமல்லாமல், அந்தச் சொற்றொடரை டென்னிஸ் களத்திலும் நிஜமாக்கியதில்தான் ஜோகோவிச், டென்னிஸ் வரலாற்றின் மற்ற வீரர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். டிராவிட் சுவர் என்றால், கசியஸ் கோட்டை மதில் என்றால்... நோவாக் ஜோகோவிச் அதற்கெல்லாம் மேல்..!

- மு.பிரதீப் கிருஷ்ணா