Published:Updated:

பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen

செரினாவின் இந்த ஆவேச செயல், பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள், அவர் எப்போதுமே 'தான் பாதிக்கப்பட்டவள்’ என்ற பிம்பத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டு திரிகிறார்.

பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen
பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen

டந்த சனிக்கிழமை, செரினா வில்லியம்ஸுக்கு அப்படி ஒருநாளாக அமையும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

2018-ம் ஆண்டின் யு.எஸ் ஓப்பன் இறுதிப் போட்டி... செரினா வில்லியம்ஸ், ஜப்பானைச் சேர்ந்த நோமி ஒசகா (Naomi Osaka) மோதுகிறார்கள். இடைவேளையின்போது, தன் பயிற்சியாளருடன் (பாட்ரிக் மெளரடொக்ளோவ்) சைகை மொழியில் செரினா பேசினார் என எச்சரித்தார், நடுவரான கர்லோஸ் ரமொஸ் (Carlos Ramos). டென்னிஸ் விதிமுறைப்படி, போட்டிக்கிடையே, சம்பந்தப்பட்ட வீரருக்கும் பயிற்சியாளருக்கும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் உடல்மொழிகளும் இருக்கக் கூடாது. எனவேதான், செரினாவுக்கு எச்சரிக்கை அளித்து, அவரின் ஆட்டப்புள்ளிகளையும் எதிராளிக்கு அளித்தார் ரமோஸ்.

இதனால் கோபமடைந்த செரினா, “ஏமாற்றுவதைவிட ஆட்டத்தில் தோற்பது மேல் என நினைப்பவள் நான். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, இனி நான் விளையாடும் மைதானத்தில் நிச்சயம் இருக்க மாட்டீர்கள். நீங்கள் பொய் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது என்னிடம் மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள்? மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். என்னிடம் கேளுங்கள். மன்னித்துவிடு எனக் கேளுங்கள். என் புள்ளிகளை நீங்கள் திருடிவிட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனும்” என ஆவேசமாகக் கத்தினார். தன் டென்னிஸ் ராக்கெட்டையும் வீசி எறிந்தார்.

இதன்மூலம், விளையாட்டின் மூன்று விதிமுறைகளை மீறியிருக்கிறார் என 17,000 டாலர் அபராதம் விதித்திருக்கிறது யு.எஸ் டென்னிஸ் அமைப்பு. விளையாட்டின்போது பயிற்சியில் ஈடுபட்டதால் 4,000 டாலர்களும், நடுவரிடம் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதால் 10,000 டாலர்களும், டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததால் 3,000 டாலர்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செரினா வில்லியம்ஸின் பயிற்சியாளர் பாட்ரிக் மெளரடொக்ளோ, “நான் நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். செரினாவுக்குப் பயிற்சி அளிக்கவே முயன்றேன். ஆனால், அவர் என்னைப் பார்த்ததுபோலத் தெரியவில்லை. அதனால்தான், அவருக்கு இந்த விஷயம் பற்றி தெரியவில்லை. ஆனால், ஒசாகாவின் பயிற்சியாளரும் அவருக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்” எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு, சனிக்கிழமை இரவு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செரினா வில்லியம்ஸ், ``பெண்களின் உரிமைகளுக்கும் அவர்களைச் சமமாக நடத்துவதற்கும் பெண்கள் சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் நான் போராடி வருகிறேன். அவரைத் திருடன் என அழைத்தது, என்னை அவர் நடத்தியவிதமும், பாலியல் பாகுபாடு கொண்ட வகையில் இருந்ததற்குமே. காரணம், எந்த ஆண்களையும் அவர் இப்படி நடத்தியதில்லை. ஆனாலும், நான் தொடர்ந்து பெண்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் போராடுவேன். இந்தச் சம்பவம், இனிவரும் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு நற்பாதையை அமைக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

செரினாவின் இந்த ஆவேச செயல், பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள், "அவர் எப்போதுமே 'தான் பாதிக்கப்பட்டவள்' என்ற பிம்பத்தை தனக்குள் வைத்துக்கொண்டு திரிகிறார். அதனால்தான் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார்" எனக் குற்றம் சாட்டுகிறது. மற்றொருபுறம், அந்த நடுவர் எப்போதுமே இப்படித்தான் என்று விளையாட்டு வீரர்களை அவர் நடத்தும் விதம் பற்றி பலரும் மனவருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒருமுறை பிரபல விளையாட்டு வீரர் ரபேல் நாடல், 'நடுவர் என்பவர் ஒரு போட்டியை அலசி ஆராய வேண்டுமே தவிர, வீரர்கள் மீதே குறியாக இருக்கக் கூடாது. அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அதேபோல அவரும் இருந்தால் நன்றாக இருக்கும்’ என வருந்தியுள்ளார்.

இங்கு விஷயம் அதுவல்ல செரினா... 23 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 36 வயதாகும் நீங்கள், பல மைதானங்களையும் நடுவர்களையும் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயம் பல அனுபவங்கள் கிடைத்திருக்கும். அவ்வளவு சீனியரான நீங்கள், இந்த விஷயத்தைச் சற்றே நிதானமாகக் கையாண்டிருந்தால், பெண் உரிமைக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு நடுவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறீர்கள். இது நீங்கள் கூறும் 'வருங்கால டென்னிஸ் வீராங்கனைகளுக்கு' எத்தகைய தவறான முன்னுதாரணமாக அமையும்? நம் நேர்மையைச் சந்தேகிக்கும்போது நிச்சயம் கோபம் வரும்தான். அந்தக் கோபத்தை விளையாட்டில் காண்பித்து, நீங்கள் பேசும் பாலின பாகுபாட்டை உடைத்திருக்கலாமே? தற்போது, செய்திருக்கும் செயலால், முன்பு நீங்கள் நியாயமாகப் பேசிய பெண்ணியமும் கேள்விக்குறியாகி இருப்பதை உணரமுடிகிறதா செரினா?

செரினா செய்தது சரியா? உங்கள் கருத்துகளை கமென்டில் பதிவு செய்யுங்களேன்...