Published:Updated:

கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

Published:Updated:
கிளாசிக் ஷாட்ஸ், கிரேட் டெக்னிக், வின்டேஜ் ரஃபா... நடால் ஏன் `கிங் ஆஃப் க்ளே?!’

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 97 டைட்டில்கள், 1,149 வெற்றிகள் என டென்னிஸ் உலகின் ஈடு இணையற்ற ராஜாவாக அரியணையில் அமர்ந்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் அரியாசனம் ஆஸ்திரேலியன் ஓப்பன், ஃபிரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் என நான்கு கால்களைக் கொண்டது. ஆனால், ஃபெடரரின் அரியாசனத்தில் இருப்பது மூன்று கால்கள்தான். அந்த மற்றொரு கால் இவன் கையில். அதை வாளாக்கினான்... வெற்றிகள் சூடினான்... அதுவும் 13 ஆண்டுகள்... இன்று அதையே செங்கோலாக்கி, தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டான். ரஃபேல் நடால்... ஃபிரெஞ்ச் ஓப்பனின் ராஜா... களிமண் தரையின் ராஜாதி ராஜா..! 

ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக `ரோலண்ட் கேரோஸ்' அரங்கின் கதாநாயகனாகியுள்ளார் நடால். 2005-ம் ஆண்டு தொடங்கிய இவரது ஆதிக்கம் இன்றுவரை முடியவில்லை. இந்த 11 வெற்றிகளையும்விட, கடந்த ஆண்டு ஃபெடரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை நடாலின் ஆதிக்கத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லிவிடும்: ``என்னை எதிர்த்து விளையாடிய வீரர்களில் நடால் மிகவும் கடினமானவர். அவருக்கு எதிராக போதுமான அளவுக்கு களிமண் தரையில் ஆடவேண்டும். என்னை ஒவ்வொரு ஃபைனலிலும் தோற்கடித்துக்கொண்டே இருக்கிறார். இவரோடு ஆடிய போட்டிகள் என்னை மிகவும் பயமுறுத்தியுள்ளன". ஆம், களிமண் தரையில், டென்னிஸின் மகத்தான வீரனைப் பயமுறுத்தியுள்ளார் ரஃபா!

ஃபெடரர் மட்டுமல்ல... பீட் சாம்ப்ரஸ், போரிஸ் பெக்கர், ஜிம்மி கானர் போன்ற ஜாம்பவான்களாலும் ஃபிரெஞ்ச் ஓப்பனில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததில்லை. ஒற்றையர் பிரிவில் மொத்தம் 48 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் பெற்றுள்ள இந்த 4 ஜாம்பவான்களும் சேர்த்து, ஃபிரெஞ்ச் ஓப்பனில் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை - 1. நடால் - 11! ஏன்..? களிமண்தரையில் ஜெயிப்பதில் அப்படி என்ன கஷ்டம்..?

புல்தரை ஆடுகளங்களைப்போல் இங்கு சர்வீஸால் ஆதிக்கம் செலுத்தமுடியாது. பந்து மற்ற ஆடுகளங்களைவிட மெதுவாக வரும். அதிகம் பௌன்ஸ் ஆகும். அதனால் எதிர்ப்புறம் இருக்கும் வீரருக்குப் பந்தை அடிக்க அதிக 'டைமிங்' கிடைக்கும். வீரர்கள் base line-ல் இருந்து தள்ளி நின்றே விளையாட முடியும். அதனால் ரேலிகளின் எண்ணிக்கை அதிகமாகும். மற்ற ஆடுகளங்களில் 10 ரேலிகளில் முடியும் கேம், இங்கு 15 ரேலிகளை எளிதாகத் தாண்டும். அதிக 'மூவ்மென்ட்' தேவைப்படும். தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்க, ஸ்டாமினா விரைவில் குறையும். களிமண் தரையில் ஒரு வீரன் ஜொலிக்கவேண்டுமென்றால் டெக்னிக்கோடு சேர்ந்து, ஃபிட்னஸும், அதிகபட்ச கவனமும், உச்சபட்ச பொறுமையும் தேவை. இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒருவரால் மட்டும்தான் களிமண் தரையில் சாதிக்க முடியும். நடால் களிமண்ணில் ஆட்சி புரியக் காரணம் இதுதான். 

ஃபிட்னஸ்... நடால் பற்றிப் பேசும்போது அவசியம் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம். எத்தனை காயங்கள், எத்தனை அறுவை சிகிச்சைகள், எத்தனை நாள்கள் ஓய்வு... இவ்வளவு ஏன் நேற்றைய போட்டியிலும் ஃபிட்னஸ் பிரச்னையால் டைம் அவுட் கேட்கிறார். ஆனால், நேற்றைய காயம் நடாலுக்குப் புதிது. ஏனெனில், நடால் நேற்று விளையாடியதும் புதிது. புது நடால், புது கேம் பிளான், அதனால் புது காயம்! 

நடால், தன் உடலை மிகவும் வருத்திக்கொண்டு விளையாடும் ஒரு வீரர். ஃபெடரர் போல் டெக்னிக் கிடையாது. அவரைப் போல் டெக்னிக்கலான ரிஸ்க் எடுத்து பாயின்ட் எடுக்க அவர் எப்போதும் விரும்ப மாட்டார். தன் உடலால் எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்கமாட்டார். எதிராளி அடிக்கும் ஒரு கிராஸ் கோர்ட் ஷாட்டுக்கு, ஆடுகளத்தின் ஒரு எண்டில் இருந்து மற்றொரு எண்டுக்கு விரைந்து சென்று பந்தைத் திருப்பி அனுப்புவார். தன் ஆட்டத்தில் தவறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கில்லாடி. களத்தின் எந்த மூலையையும் எளிதில் அடைந்துவிடும் வேகம் அவரது பலம். களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்த முக்கியக் காரணம் அதுதான். ஆனால், காலப் போக்கில் அதுவே அவரது பலவீனமானது. அதீத உடல் உழைப்பு காயங்களை அதிகமாக்கியது. ஒருகட்டத்தில் நடாலின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டது. 

ஆனால், நேற்றைய போட்டி... வேற லெவலில் ஆடினார் ரஃபா. எப்போதும் முதல் புள்ளியிலிருந்தே முழு உடல் உழைப்பையும் கொட்டுபவர், நேற்று ஆரம்பத்தில் இருந்தே தன் எனர்ஜியை சேமித்தார். உடல் ரீதியாக அதிக ரிஸ்க் எடுக்கவில்லை. முதல் செட்டில் தன் வழக்கமான டிஃபண்டிங் பாணியில்தான் விளையாடினார். இரண்டாம் செட்டில் டொமினிக் தீம், தன் திட்டங்களை மாற்ற, அதிரடி காட்டத் தொடங்கினார் நடால். வழக்கமாக பேஸ் லைனிலேயே நின்று விளையாடுபவர், அடிக்கடி சர்வீஸ் லைன் வரை சென்று டொமினிக்கை மிரளவைத்தார். தன் கால்களை முன்பைப் போல் வேலை வாங்காமல், டிராப்களில் கவனம் செலுத்தினார். சும்மாவே அவரின் டாப் ஸ்பின் ஷாட்களுக்கு எதிர்த்து விளையாடும் வீரர்கள் திணறுவார்கள். இதில் டிராப்கள் வேறு. டிராப்களுக்கு அதிகமாக மணிக்கட்டைப் பயன்படுத்தியதுகூட நடாலின் காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். 

நடால் ஒவ்வொரு முறை சர்வீஸ் லைனை நெருங்கியபோதும், ஒவ்வொரு முறை டிராப் போட்டபோதும் தீம் பதிலற்றவராகவே இருந்தார். நடாலின் அந்த ஆட்டத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது ஸ்டாமினாவைச் சோதிக்க முழுக்க முழுக்க கிராஸ் கோர்ட் ஷாட்களில் கவனம் செலுத்தியவருக்கு, நடாலின் அந்த டெக்னிக்கல் ஆட்டம் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால், நடால் நேற்று களிமண் தரையில் அல்ல...புல்தரையில் ஆடியிருந்தாலும் நிச்சயம் வென்றிருப்பார். அவரது ஆட்டம் அவ்வளவு அருமை. 

முதல் செட்டில் நடாலை அதிகமாக 'பேக் ஹேண்ட்' ஷாட் ஆடச் செய்தார் தீம். ஆனால், அப்போது மிகவும் கவனமாக ரிப்ளை செய்த நடால், 'ஃபோர் ஹேண்ட்' ஷாட்களில் சில தவறுகள் செய்தார். அதைத் தெளிவாக அலசிய தீம், இரண்டாவது செட்டில் கிராஸ் கோர்ட் ஷாட்கள் ஆடத் தொடங்கினார். தான் பேக் ஹேண்ட் ஆடும்போதும், யோசிக்காமல் நடால் ஃபோர் ஹேண்ட் ஷாட் ஆடுவதற்குத் தோதாக கிராஸ் கோர்ட் ஷாட்கள் ஆடினார். முதல் செட்டில் செய்த தவறுகளை நடால் மீண்டும் செய்வார் என்று. ஆனால், இந்த முறை நடாலின் பெர்ஃபெக்ஷன் லெவல் 100 சதவிகிதத்தை அடைந்தது. 

தீமின் கிராஸ் கோர்ட் ஷாட்களை, அவரது வலதுபுற சைட் லைனுக்கு அருகே மிகக் கச்சிதமாக 'place' செய்தார். ஒவ்வொரு ஷாட்டும் கோட்டின் ஓரத்தை லேசாகத் தொட்டுப் பறந்துகொண்டிருந்தன. அந்த ஷாட்களுக்கு தீமால் பதில் சொல்ல முடியவில்லை. அதைத் திருப்பி அனுப்ப அவர் கொஞ்சம் கூட அதனருகில் இல்லை. போதாக்குறைக்கு ஒவ்வொரு முறை 'அவே' சேலஞ்ச் செய்தபோதும், பந்து எப்படியேனும் கோட்டைத் தொட்டிருந்தது. நடாலின் ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு பெர்ஃபெக்ட்! இது வின்டேஜ் ரஃபா!

உண்மையைச் சொல்லப்போனால் நேற்று நடால் ஆடியது ஆட்டத்துக்கு 'கிராஸ் கோர்ட்', 'ஹார்ட் கோர்ட்' என எங்கு ஆடியிருந்தாலும், எந்த கிராண்ட் ஸ்லாமாக இருந்தாலும் வென்றிருப்பார். 13 ஆண்டுகளாக தன் உடலில் மொத்த பாரத்தையும் இறக்கி, அதை வருத்தி வென்றுகொண்டிருந்தவர், நேற்று புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 17-வது கிராண்ட் ஸ்லாமை வென்றுவிட்டார். அடுத்து விம்பிள்டன்... புல்தரை... பிரச்னையில்லை; ரோஜர் ஃபெடரர்... பிரச்னையில்லை; இது நடால் 2.0! களங்கள் இனி வெற்றிகளை நிர்ணயிக்கப் போவதில்லை. இனி கிராண்ட் ஸ்லாம்களை அடையப் போவது யார் என்பதை இந்தக் களிமண் தரையின் ராஜா தான்... சாரி, களிமண் தரையின் சக்ரவர்த்திதான் நிர்ணயிக்கப் போகிறார்! இவர் செல்லமாகக் கடிக்க இன்னும் சில கிராண்ட் ஸ்லாம்கள் காத்திருக்கின்றன!