புரோ கபடி ஒன்பதாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. புரோ கபடி வரலாற்றிலேயே தமிழ் தலைவாஸ் முதன்முறையாக ப்ளே ஆப் க்கு தகுதி பெற்றிருக்கிறது. PKL 5-ஆவது சீசனில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறையாவது ப்ளே ஆப் க்குள் செல்லுமா என்று ஒவ்வொரு தமிழ் தலைவாஸ் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சீசன்களில் தொடர் தோல்விகளால் புள்ளிபட்டியலில் 11, 12 இடத்தை தான் பிடித்தனர். இந்த சீசனிலும் வழக்கம் போலத் தொடர் தோல்விகளைச் சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆப்க்குள் செல்லாது என ரசிகர்களே முடிவே செய்துவிட்டனர். ஆனால் கதை மாறியது..பயிற்சியாளர் அசன் குமாரின் தமிழ் தலைவாஸ் 2.0 அணி மிரட்டலான கம்பேக் கொடுத்து தமிழ் தலைவாஸ் ரசிகர்களின் ப்ளே ஆப் கனவை நிறைவேற்றி இருக்கிறது.
பெரும் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்ட பவன்குமார் காயம் காரணமாக வெளியேறினார். பயிற்சியாளர் மாற்றம், புதிய கேப்டன் சாகர் காயம், தொடர் தோல்விகள் என எல்லா தடைகளையும் உடைத்து முதன் முறையாக ப்ளே ஆப்க்குள் கெத்தாக நுழைந்து இருக்கிறது தமிழ் தலைவாஸ். முதன்முறையாகத் தமிழ் தலைவாஸ் தனது ஒரு சீசனில் 10 வெற்றிகளை பெற்றிருக்கிறது. பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்து நம்பிக்கையோடு அசுர ஃபார்மில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் இருக்கிறார்கள்.
வருகிற 13-ஆம் தேதி எலிமினேட்டர் சுற்றில் யுபி யோதா அணியை எதிர்கொள்ள உள்ளனர். தொடர் தோல்விகள் முதல் ப்ளே ஆஃப் பயணம் வரை தமிழ் தலைவாஸ் அணி செய்த சம்பவங்கள் பற்றிய ஒரு அலசல்.

பவன் காயமும் தமிழ் தலைவாஸ் தொடர் தோல்விகளும்:
பவன் குமாரை இரண்டு கோடிக்கும் அதிகமாகக் கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த சீசனில் பவனை நம்பி மட்டும்தான் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. தமிழ் தலைவாஸ் ரசிகர்களுமே பவனின் வருகையால் உற்சாகமடைந்தனர். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டேக்கிள் செய்யும் பொழுது முட்டி மடங்கி பவனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பவன் முதல் போட்டிக்கு பிறகு ஆடவே முடியாத சூழல் உருவானது. இது தமிழ் தலைவாஸ்க்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பவன் குமாரை தாண்டி ஒரு அணியாக செட்டில் ஆவதில் தமிழ் தலைவாஸ்க்கு சிக்கல் இருந்தது. விளையாடிய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தன. தமிழ் தலைவாஸ் அணியில் ஒரு டீம் பெர்பார்மன்ஸ் வெளிப்படவே இல்லை.
பயிற்சியாளர் அசன் குமார்:
தொடர் தோல்விகளில் மூழ்கிக்கொண்டிருந்த தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து உதயகுமார் விலகினார். அவரின் தனிப்பட்ட காரணங்களால் விளக்குவதாக அணி நிர்வாகம் அறிவித்தது. தோல்விகளில் இருந்து மீட்டு தமிழ் தலைவாஸ் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த பயிற்சியாளர் அசன் குமார் அணியில் இணைந்தார்.

அனுபவமுள்ள பயிற்சியாளர் அசன் குமார் அணிக்குள் வந்த பிறகுதான் வெற்றிக்கான ஆக்ரோஷம் தமிழ் தலைவாஸ் வீரர்களிடம் வெளிப்பட்டது. அவர் வந்த பிறகு, தமிழ் தலைவாஸ் சந்தித்த எல்லா போட்டிகளும் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பலம் வாய்ந்த புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அசன் குமாரின் தமிழ் தலைவாஸ் படை.
இந்த வெற்றிகள் தலைவாஸ் ப்ளே ஆஃப் செல்ல மிக முக்கிய காரணங்களாக அமைந்தன. தமிழ் தலைவாஸ் செய்த எல்லா தவறுகளையும் சரி செய்து ஒரு அணியாக ஒற்றுமையோடு களமிறங்கி வெற்றி பெற வைத்தார். பவன் குமார் சென்ற பிறகு, ரெய்டில் நரேந்தர் கண்டோலாவை மட்டும் நம்பி இருக்காமல் அவருக்கு அடுத்தபடியாக அஜிங்கியா பவர் திறமையாக களமிறங்கினார். நரேந்தர் களத்தில் இல்லையென்றாலும் அஜிங்கியா பவரால் புள்ளிகள் எடுக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். தமிழ் தலைவாஸ் டிபன்ஸ் யூனிட்டையும் பலமாக்கினார். களத்தில் வீரர்களிடம் குவாடினேஷன் சிறப்பாக இருந்தது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கைக் கொடுத்து தொடர் வெற்றிகள் பெற்ற தமிழ் தலைவாஸ் அணியை ப்ளே ஆஃப் வரை அழைத்து வந்திருக்கிறார். களத்தில் அவர் கொடுக்கும் ஆலோசனைகள் அக்ரசிவ் அப்ரோச் ஆக வீரர்களிடம் வெளிப்பட்டது. இவரது அக்ரசிவ் மோட் காரணமாக முதல் பாதியிலேயே பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை எடுக்கும் வழக்கத்திற்கு தமிழ் தலைவாஸ் மாறியது. இதுவே பெரிய அணிகளுடன் மோதும் பொழுது பலமாக அமைந்தது.
நாயகன் நரேந்தர் கண்டோலா:
தமிழ் தலைவாஸ் ப்ளே ஆஃப்குள் செல்ல ரெய்டில் முக்கிய பங்காற்றியவர் நரேந்தர் கண்டோலா. கேலோ இந்தியா கபடி போட்டியில் அதிரடி காட்டிய ஃபார்மோடு பிகேஎல் சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் களமிறங்கினார் நரேந்தர் கண்டோலா. பவனுக்கு மாற்றாக அணியில் ஒட்டுமொத்த நம்பிக்கையும் நரேந்தர் மேல் இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் நரேந்தர் தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்.

அறிமுகமான முதல் சீசனிலேயே 21 போட்டிகளில் விளையாடி 224 புள்ளிகளை எடுத்துள்ளார் நரேந்தர். 13 சூப்பர் 10 எடுத்து அதிரடியான ஃபார்மில் இருக்கிறார். நரேந்தரின் அதிரடி ஆட்டத்தினால் தமிழ் தலைவாஸ்க்கு தொடர் வெற்றிகள் கிடைத்தது.
ஒரு இளம் வீரராக அழுத்தமில்லாமல் தமிழ் தலைவாஸ் அணியில் ஆடுகிறார். பலம் வாய்ந்த தபாங் டெல்லி அணியுடன் மோதும் போது 21 ரெய்டுகள் சென்று 27 ரெய்டு புள்ளிகளை எடுத்து அதிரடி காட்டியது நரேந்தரின் ஃபார்முக்கு ஒரு எடுத்துக்காட்டு. இதே பார்ம்மோடு நரேந்தர் ப்ளே ஆஃபில் தமிழ் தலைவாஸ் ரெய்டு யூனிட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Do or die ஸ்பெஷலிஸ்ட் அஜிங்கிய பவார்:
தமிழ் தலைவாஸ் அணியின் அடுத்த ஸ்டார் ரெய்டராக அஜிங்கிய பவார் திகழ்கிறார். நரேந்தர் தடுமாறிய போட்டிகளில் தமிழ் தலைவாஸ்க்கு தேவையான ரெய்டு புள்ளிகளை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். தொடக்கப் போட்டிகளில் ஒரு சில புள்ளிகளை மட்டும் எடுத்து இருந்தார். பயிற்சியாளர் அசன் குமார் வந்த பிறகு அஜிங்கியா திறனை மெருகேற்றினார்.
சிறந்த ரெய்டாக தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ரெய்டில் 6 புள்ளிகள் எடுத்து தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மற்றொரு போட்டியில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ஒரே ரெய்டில் 5 புள்ளிகள், மொத்தம் 20 புள்ளிகள் எடுத்து அதிரடி நிகழ்த்தினார். ஒரு சில போட்டிகளில் சூப்பர் 10 எடுக்கவில்லை என்றாலும் அஜிங்கியாவின் ரெய்டு புள்ளிகள் ஆட்டத்தின் முடிவில் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
Do or die ரெய்டு மற்றும் சூப்பர் டேக்கிள் சூழ்நிலையில் அழுத்தம் இல்லாமல் விளையாடி புள்ளிகளை எடுக்கிறார். முக்கியமான நேரங்களில் டேக்கிள்கள் நிகழ்த்தி ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்ஸை கொடுக்கிறார். 20 ஆட்டங்களில் விளையாடி 124 புள்ளிகள் எடுத்து இருக்கிறார். நரேந்தர் கண்டோலா மற்றும் அஜிங்கிய பவர் இருவரும் அசுர ஃபார்மில் ஆடுகிறார்கள். இவர்களது ஆட்டம் தமிழ் தலைவாஸின் ப்ளே ஆஃப் போட்டியில் ரெய்டுகளில் நிச்சயம் கைகொடுக்கும்.
கேப்டன் சாகரின் அதிரடி ஃபார்மும் காயமும்:
பவன் காயமடைந்து வெளியேறிய போது தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக டிஃபென்டர் சாகர் நியமிக்கப்பட்டார். சாகரும் தொடக்கத்தில் டிஃபன்ஸில் மோசமாக ஆடினார். பயிற்சியாளர் அசன்குமார் வந்த பிறகுதான் சாகரின் ஆட்டம் வேறு விதமாக மாறியது . டிஃபன்சில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்திருக்கிறார். அதிக சோலொ டேக்கிள்கள் மூலம் புள்ளிகளை எடுத்து அதிரடியாக ஆடுகிறார்.

இதுவரை இந்த சீசனில் 53 டேக்கிள் புள்ளிகள் எடுத்து இருக்கிறார். டிபன்ஸில் 5 ஹை ஃபைவ், 8 சூப்பர் டேக்கிள்கள் என சாகர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது. பின் எந்த ஆட்டத்திலும் சாகர் களமிறங்கவில்லை.
சாகர் இல்லாமல் ஒரு சில போட்டிகளில் தோற்றாலும் மற்ற டிஃபென்டர்களின் சிறப்பான ஆட்டத்தினால் தமிழ் தலைவாஸ் ப்ளே ஆஃப் சென்றது. தமிழ் தலைவாஸ் ப்ளே ஆஃப் போட்டிகளில் நிச்சயம் சாகர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை கொடுத்த தமிழ் தலைவாஸ் டிஃபென்டர்கள்
தொடக்க ஆட்டங்கள் முதல் தமிழ் தலைவாஸ் டிஃபென்டர்களாக சாகர், அபிஷேக் ,மோகித் ,சாஹில் களமிறங்கினார்கள். தொடக்கப் போட்டிகளில் இவர்கள் மிக மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தினார்கள். வழக்கம்போல அட்வான்ஸ் டேக்கிள்கள் , டிஃபன்ஸ் பெரிதாக கை கொடுக்கவில்லை. டிஃபென்டர்களின் மோசமான ஆட்டத்தினால் தமிழ் தலைவாஸ் தொடர் தோல்விகள் அடைந்தது. ஆனால் அசன் குமாரின் சிறப்பான பயிற்சியால் டிஃபென்டர்கள் மீண்டெழுந்தனர்.
டிஃபென்டர் சாகர் அணியில் இல்லாமலும் மற்ற டிஃபென்டர்கள் சிறப்பாக விளையாடி தமிழ் தலைவாஸ் ஆணி வெற்றிகளை குவித்தனர். சாஹில் 51 டேக்கிள் புள்ளிகளோடு லெப்ட் கார்னரில் சிறப்பாக ஆடுகிறார். அதிகமான அட்வான்ஸ் டேக்கிள் நிகழ்த்தும் அபிஷேக் கடந்த ஐந்து போட்டிகளில் நன்றாக ஆடுகிறார்.

கடைசி ஐந்து போட்டிகளில் டிஃபென்டர்களும் அதிரடி காட்டியதால் தான் தமிழ் தலைவாஸ் முதன்முறையாக பிளே ஆப்க்குள் நுழைய முடிந்தது. ப்ளே ஆஃப் ஆடுவதற்கு முன் தமிழ் தலைவாஸ் டிஃபென்டர்கள் ஃபார்முக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

எதிர்பாராத பல ட்விஸ்ட்டுகளுடன் விஸ்வரூபமெடுத்து தமிழ் தலைவாஸ் ப்ளே ஆஃப் வரை வந்திருக்கிறது. இதே வேகத்தோடும் உத்வேகத்தோடும் புரோ கபடி வரலாற்றில் முதன் முறையாக தமிழ் தலைவாஸ் இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.