புரோ கபடி ஒன்பதாவது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 52-24 என மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக் காரணம் அஜிங்கியா பவாரின் அசத்தலான பெர்ஃபார்மன்ஸ் தான்.

ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணியைக் காப்பாற்றி மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார் அஜிங்கியா பவார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ஒரே ரெய்டில் 5 புள்ளிகள் எடுத்து அதிரடி நிகழ்த்தினார். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதும் போது ஒரே ரெய்டில் 6 புள்ளிகள் எடுத்து அசத்தியிருந்தார். கடைசி நேரத்தில் அஜிங்கியா பவாரின் சிறப்பான ஆட்டத்தினால் அந்தப் போட்டியிலும் தமிழ் தலைவாஸ் வென்றிருந்தது. ஒருமுறை கூட ரெய்டில் பிடிபடாமல் இந்த ஆட்டத்தில் 18 ரெய்டுகள் சென்று 20 புள்ளிகள் பெற்றுள்ளார்.
தொடக்கத்தில் நரேந்தர் கண்டோலா சொதப்பல், அபிஷேக்கின் அட்வான்ஸ் டேக்கிள்கள் என தமிழ் தலைவாஸ் தடுமாறிக் கொண்டிருந்தது. பன்னிரண்டாவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. களத்தில் கடைசி வீரராக அஜிங்கியா பவார் ரெய்டு இறங்கினார். டச் மற்றும் போனஸ் புள்ளிகளை எடுத்து தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆகாமல் காப்பாற்றினார். அடுத்து அபிஷேக்குடன் சேர்ந்து சூப்பர் டேக்கிள் செய்தார். இந்த இரண்டு சம்பவத்தால் தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆகாமல் லீடிங் பெற்றது. அதன் பின்னர் அஜிங்கியாவின் ஆட்டம் வெறித்தனமாக மாறியது. Do or die ரெய்டில் அழுத்தமே இல்லாமல் புள்ளிகளை எடுத்தார். முதல் பாதியிலேயே அஜிங்கியா சூப்பர் 10 எடுத்துவிட்டார். இரண்டாவது பாதியில் தான் அந்த ஒரு அசத்தலான ரெய்டை அஜிங்கியா நிகழ்த்தினார். இரண்டாவது பாதையில் do or die ரெய்டில் அஜிங்கியா பவர் களமிறங்கினார்.

ரெய்டு முடிய பத்து நொடிகள் மீதம் இருக்கையில் டேக்கிள் செய்ய வந்த தெலுங்கு டைட்டன்ஸ் ஒட்டுமொத்த வீரர்களின் பிடியில் சிக்காமல் பிரமாதமாக நடுக்கோட்டை தொட்டு 5 புள்ளிகளை எடுத்தார். மீண்டும் சூப்பர் டேக்கில் சூழலில் களமிறங்கி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட் செய்தார். கடைசி வரை அஜிங்கியா பவர் களத்தில் இருந்து தமிழ் தலைவாஸுக்கு அற்புதமாக ஆடிக் கொடுத்தார். அஜிங்கியா பவரின் மிரட்டலான ஆட்டம் தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது