சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தோனி... கொஞ்சம் தமிழ்நாட்டையும் கவனி!

கிரிக்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிக்கெட்

சையது முஸ்தாக் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிகபட்ச ரன்கள் குவித்திருப்பவர் தமிழ்நாட்டின் ஜெகதீசன்தான்.

லம் வாய்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, இந்தியா `பி’ டீமை வைத்தே தோற்கடித்ததைப்போல, சையது முஸ்தாக் அலி கோப்பையை ‘பி’ டீம் கொண்டே வென்று வந்திருக்கிறது தமிழ்நாடு. ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், வருண் சக்ரவர்த்தி, முரளி விஜய் எனத் தமிழ்நாட்டின் ஸ்ட்ரைக்கிங் வீரர்கள் பலரும் இல்லாமலேயே 14 ஆண்டுகளுக்குப்பிறகு சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்றிருக்கிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு!
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

இந்தியாவின் உள்ளூர் டி20 தொடர், சையது முஸ்தாக் அலி கோப்பை. ஐபிஎல் காலத்துக்கு முன்பாகவே 2006-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடரின் முதல் சாம்பியன் தமிழ்நாடு. ஆனால், அதன்பிறகு கோப்பையை தமிழ்நாடு நெருங்கும், ஆனால் வெல்லாது. கடந்த ஆண்டு கர்நாடகாவிடம் வெறும் ஒரே ஒரு ரன் வித்தி யாசத்தில் கோப்பையைக் கோட்டைவிட்டது தமிழ்நாடு. ஆனால், இந்த முறை கொஞ்சமும் பிசிர் தட்டாமல், விளையாடிய அத்தனை போட்டிகளிலும் எதிரணிகளை அடித்து வெளுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று அசத்தியிருக்கிறது.

ஓர் அணியில் இருக்கும் 11 பேருமே மேட்ச் வின்னர்களாக இருந்தால், எதிரில் விளையாடுவது எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும் எளிதில் வீழ்த்திவிடலாம். இந்தத் தொடரில் அதற்கான உதாரணமாக தமிழ்நாடு அணி இருந்தது.

தோனி... கொஞ்சம் தமிழ்நாட்டையும் கவனி!

அசாமுக்கு எதிரான லீக் போட்டியில் ஓப்பனிங் இறங்கிய ஜெகதீசன் - ஹரி நிஷாந்த் கூட்டணி இறுதிவரை களத்தில் நின்று 128 ரன்களையும் சேஸ் செய்து முடித்தது. இமாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் ஓப்பனர்களான ஜெகதீசனும், ஹரி நிஷாந்த்தும் எளிதாக வீழ்ந்துவிட, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபா அபராஜித்தும், ஷாருக்கானும் அணியை மீட்டார்கள். வெறும் 32 பந்துகளில் 75 ரன்களைக் குவித்த இந்தக்கூட்டணி, அரையிறுதிப்போட்டிக்குள் தமிழ்நாட்டைக் கொண்டுபோனது.

அரையிறுதிப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தவர் வேகப்பந்து வீச்சாளரான முகமது. ராஜஸ்தானின் முக்கிய பேட்ஸ்மேனான மஹிபால் லாம்ரோரின் விக்கெட்டை வீழ்த்தி வேட்டையைத் தொடங்கியவர், அன்று மொத்தம் 4 விக்கெட்டுகளைத் தூக்கினார். சேஸிங்கில் தமிழ்நாட்டின் சூப்பர் ஹீரோவாக வந்தவர் அருண் கார்த்திக். நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழ்நாடு அணிக்குத் திரும்பிய 34 வயது அருண் கார்த்திக், 54 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இறுதிப்போட்டிக்குள் தமிழ்நாட்டைக் கொண்டுபோனார்.

தோனி... கொஞ்சம் தமிழ்நாட்டையும் கவனி!

பரோடாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் நாயகன், 22 வயதான சித்தார்த் மணிமாறன். கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஸ்தாக் அலி தொடரின் சுழற்பந்துச் சூறாவளியாக இருந்த இந்த இடது கை ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின்னரை இறுதிப்போட்டியில்தான் பயன்படுத்தினார் தினேஷ் கார்த்திக். ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்த அகமதாபாத் பிட்ச்சில், பரோடாவின் நான்கு முக்கிய பேட்ஸ்மேன்களைப் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் மணிமாறன். நான்கு ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் எடுத்த மணிமாறனால் தமிழ்நாட்டின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. சேஸிங்கில் அபராஜித்தும் ஷாருக்கானும் இணைந்து ரன்களை விரட்ட, தமிழ்நாடு இரண்டாவது முறையாக சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்றது.

சையது முஸ்தாக் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிகபட்ச ரன்கள் குவித்திருப்பவர் தமிழ்நாட்டின் ஜெகதீசன்தான். எட்டுப் போட்டிகளில் விளையாடி 364 ரன்கள் குவித்த ஜெகதீசன், நான்கு போட்டிகளில் அரை சதம் அடித்தார். ஆனால், இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்த்தாலும், 2018, 2019 சீசன்களில் பென்ச்சில் உட்காரவைத்த தோனி, பலகட்ட விமர்சனங்களுக்குப்பிறகு கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தார். எந்த ஐபிஎல் அணியும் இந்த அளவுக்கு சொந்த மாநில வீரர்களைப் புறக்கணித்தது இல்லை.

முருகன் அஷ்வின், சாய் கிஷோர், பாபா அபராஜித், மணிமாறன் சித்தார்த் என இப்போதைய தமிழ்நாடு அணியில் மட்டும் நான்கு ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இது இல்லாமல் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களால் நிரம்பியிருக்கிறது தமிழ்நாடு. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸோ பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ்களைக் கோடிகளில் வாங்கப் போட்டாபோட்டி போடுகிறது. இந்த முறையாவது தமிழ்நாட்டு வீரர்களுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸில் தோனி இடம் கொடுப்பார் என நம்புவோம்!