சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“ஐ.பி.எல் ஆடாவிட்டாலும் ‘ஆல் இஸ் வெல்’!”

நாராயண் ஜெகதீசன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயண் ஜெகதீசன்

இவ்வளவு ரெக்கார்ட்ஸ் பண்ணதுல ரொம்பவே சந்தோஷம்தான். ஆனா, இந்த சீரிஸுக்கு முன்னாடி ரன்கள் மற்றும் ரெக்கார்ட்ஸ் பற்றியெல்லாம் பெருசா யோசிக்கவே இல்ல

கிரிக்கெட் உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன், தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன். விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்திருக்கிறார். அருணாசலப்பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் மட்டும் 277 ரன்களைத் தனி ஆளாக அடித்திருக்கிறார். இதே ஆட்டத்தில் சாய் சுதர்சனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 416 ரன்களைச் சேர்த்திருக்கிறார். அந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 506 ரன்களை எடுத்திருந்தது. தனிநபர், கூட்டணி, அணி என அத்தனை விதத்திலும் முந்தைய உலக சாதனைகளை உடைத்தெறிந்து புதிய தடம் பதித்திருக்கிறார் ஜெகதீசன். விஜய் ஹசாரே தொடரில் ஜெகதீசன் சாதித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் ஐ.பி.எல் போட்டியில் அவர் இடம்பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை அணியிலிருந்து விடுவித்திருந்தது.

“ஐ.பி.எல் ஆடாவிட்டாலும் ‘ஆல் இஸ் வெல்’!”

‘‘சின்ன வயசுல ஆர்வமா கிரிக்கெட் ஆடத் தொடங்குனப்போ எனக்கு எந்த இலக்கும் இல்ல. இந்த கேம் பிடிச்சிருக்கு. இதை என்ஜாய் பண்ணி ஆடணும்ங்கறதுதான் எண்ணமா இருந்துச்சு. இப்பவும் அதேதான். இங்க ஸ்கோர் பண்ணுனா அங்க போயிடுவேன், அங்க ஸ்கோர் பண்ணுனா இங்க போயிடுவேன்னு எந்தக் கணக்கையும் வச்சுக்கிறதில்ல.'' சாதனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் மத்தியிலும் ‘ஆல் இஸ் வெல்' மனப்பாங்கோடு செம பாசிட்டிவ்வாகப் பேசத் தொடங்கினார் ஜெகதீசன். அவர் பேசியவை இனி...

``ஐந்து சதங்கள், தனிநபர் அதிகபட்சம், கூட்டணியாக டாப் என ஏகப்பட்ட சாதனைகளை ஒரே தொடரில் படைத்திருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?’’

‘‘இவ்வளவு ரெக்கார்ட்ஸ் பண்ணதுல ரொம்பவே சந்தோஷம்தான். ஆனா, இந்த சீரிஸுக்கு முன்னாடி ரன்கள் மற்றும் ரெக்கார்ட்ஸ் பற்றியெல்லாம் பெருசா யோசிக்கவே இல்ல. வழக்கமான பயிற்சிகளில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும்போதும் அந்தப் பந்தை எவ்வளவு சிறப்பாக ஆடுறோம்ங்றதுலதான் என்னோட கவனம் இருந்துச்சு. இந்தத் தொடருக்கு முன்பாக வலைப்பயிற்சியில் கொஞ்சம் புதுசா சில ஷாட்கள் ஆடப் பயிற்சி செஞ்சேன். கேம்ல நல்லா செட்டில் ஆன பிறகு அந்த ஷாட்ஸ எந்தப் பிசிரும் இல்லாம ஆடுறதுலயும் கவனம் செலுத்தினேன். அதை சரியா செஞ்சதனால ரன்களும் தானாக வரத் தொடங்குச்சு. சதங்களும் அடித்தேன்.’’

``நிறைய பாராட்டுகள் வந்திருக்கும். அதில் நீங்கள் மதிப்புமிக்கதாக நினைக்கும் பாராட்டு எது?’’

‘‘எக்கச்சக்க வாழ்த்துகள் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்கு. ரசிகர்களுமே சோஷியல் மீடியால பாராட்டித் தள்ளினாங்க. ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துச்சு. என் அப்பா, அம்மா மற்றும் கோச் எல்லோரும் என்னைவிட ரொம்ப ஹேப்பி. அதேநேரத்துல ‘இதையெல்லாம் என்ஜாய் பண்ணு. ஆனா, நாளைக்கே இதெல்லாம் கடந்தகாலமா மாறிடும். அதனால அடுத்து என்ன செய்யப் போறேங்றதுல கவனம் செலுத்து'ன்னு அறிவுரையும் சொல்லிருக்காங்க.’’

“ஐ.பி.எல் ஆடாவிட்டாலும் ‘ஆல் இஸ் வெல்’!”

``இப்படி ஒரு நற்சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உங்களை விடுவித்திருக்கும் செய்தியும் வந்திருக்கிறதே?’’

‘‘எந்த கிரிக்கெட்டருக்குமே இதுமாதிரியான செய்திகள் நல்ல ஃபீலைக் கொடுக்காது. ஆனா, ரிலீஸ் பண்ணுனதுக்கு அப்புறம் அதைப் பத்தியே யோசிச்சு எந்தப் பயனும் இல்ல. அதை எவ்ளோ சீக்கிரம் மறக்க முடியுமோ மறந்துட்டு அடுத்த வேலைய பார்க்கணும். சி.எஸ்.கே-க்காக ஆடுன 7 மேட்ச்ல நாலு மேட்ச்தான் பேட்டிங் ஆடினேன். அதுல ரெண்டு மேட்ச்ல 30+ ரன்கள் ஸ்கோர் பண்ணிருந்தேன். ஓரளவுக்கு நல்லாதான் ஆடியிருந்தேன்னு நினைக்கிறேன். ஆனா, இதுல என் கையில எதுவுமே இல்ல. எல்லா முடிவுமே அணி நிர்வாகம் எடுக்குறதுதான். அதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். சி.எஸ்.கே நிறைய அனுபவங்கள கொடுத்திருக்கு. பெரிய மனிதர்களோட மதிப்புமிக்க நேரத்த செலவிட்டிருக்கேன். நிறைய கத்துக்கிட்டேன். அதையெல்லாம் வச்சுக்கிட்டு வருங்காலத்துல என்ன பெஸ்ட்டா பண்ண முடியுமோ பண்ணுவேன்.''

``ஐ.பி.எல் மினி ஏலமும் விரைவில் வரவிருக்கிறது. அது சார்ந்து உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?’’

‘‘எந்த எதிர்பார்ப்பையும் வச்சுக்கல. ஒருவேளை இந்த முறை எந்த டீமும் ஏலத்துல எடுக்கலைன்னாலும், அதையும் ஒரு நல்ல வாய்ப்பாதான் பார்ப்பேன். ஏன்னா, கடந்த ஐந்து வருஷங்கள்ல எனக்கு தொடர்ச்சியா ரெண்டு மூன்று மாதங்கள் பயிற்சிக்காகக் கிடைக்கவே இல்ல. எந்த டீமும் எடுக்கலைன்னா ஐ.பி.எல் ஆடாம இருக்குற அந்த 2-3 மாசத்த என்னை இன்னும் நல்ல கிரிக்கெட்டரா மெருகேற்றிக்கப் பயன்படுத்திக்குவேன். அடுத்த சீசனுக்கு இப்ப இருக்கிறதவிட சிறப்பான பிளேயரா வந்து நிற்கப் பார்ப்பேன்.''

``தேசிய அணிக்கான வீரர்கள் தேர்வில் உள்ளூர்ப் போட்டிகளைவிட ஐ.பி.எல் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?’’

‘‘ஐ.பி.எல்-க்கு அதிக ரீச் இருக்கு. அதுல ஆடுற வீரர்களுக்கு அதிக வெளிச்சம் கிடைக்குது. ஆனா, எங்க ஆடினாலும் ரன் அடிக்கணும், அதுதான் முக்கியம். அணித்தேர்வுகள்ல ஐ.பி.எல் பெர்ஃபாமென்ஸ் முக்கிய இடம் வகிக்குதுதான். ஆனா, ஐ.பி.எல்-க்குக் போகணும்னா உள்ளூர்ப் போட்டிகள்ல சிறப்பாக ஆடியே ஆகணும். அதனால உள்ளூர்ப் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையாது.''

``அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து நடக்கவிருக்குது. சரியான சமயத்தில் நீங்களும் ரெக்கார்டு மேல் ரெக்கார்டு படைத்திருக்கிறீர்கள். உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் கனவு இருக்கிறதா?’’

‘‘இந்தியாவுல கிரிக்கெட் ஆடுற எல்லாருக்கும் இந்திய அணிக்கு ஆடணுங்றதுதான் இலக்கா இருக்கும். எனக்கும் அதேதான். ஆனா, வரவிருக்கிற உலகக்கோப்பை பத்தியெல்லாம் எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. அடுத்து நாளைக்கு ஆடப்போற மேட்ச்சை நல்லா ஆடுனா போதும். அவ்ளோதான். மற்ற விஷயங்கள் நடக்கணும்னா நடக்கும், இல்லைன்னா இல்ல.’’

“ஐ.பி.எல் ஆடாவிட்டாலும் ‘ஆல் இஸ் வெல்’!”

``உங்களின் ஓப்பனிங் பார்ட்னர் சாய் சுதர்சனும் உங்களுடன் இணைந்து சிறப்பாக ஆடிவருகிறார். இந்தக் கூட்டணியின் சக்சஸ் சீக்ரெட் என்ன?’’

‘‘சமீபமாக சாய் சுதர்சனும் நானும் நிறைய போட்டிகள்ல ஓப்பன் பண்ணிக்கிட்டு இருக்கோம். ரெண்டு பேருக்கும் புரிதல் ரொம்ப நல்லாவே இருக்கு. ரைட் - லெஃப்ட் என்பதால் இருவரும் இயல்பிலேயே நல்ல கூட்டணியா இணைஞ்சிருக்கோம். சூழலப் பொறுத்து களத்துல ஒருவருக்கொருவர் உதவிகள் செஞ்சிப்போம். இதுதான் எங்க சக்சஸ் சீக்ரெட்!''

``நீங்கள் பாரம்பரிய முறையில் பேட்டிங் ஆடும் பழக்கமுடையவர். முதல் பந்திலிருந்தே சிக்ஸரை மட்டும் குறிவைக்கும் டி20-ன் தற்போதைய டிரெண்ட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘டி20-ல் ரன்கள்தான் முக்கியம். அதே நேரத்தில் ரன் அடிக்கிற விதமும் முக்கியம்தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கு. பாபர் அசாம் மாதிரியான வீரர்களையும் இங்கிலாந்துல பட்லர் மாதிரியான வீரர்களையும் ஒப்பிடவே முடியாது. ரெண்டு பேருமே ஸ்கோர் பன்றாங்க, அதுதான் முக்கியம். ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே பிரதானம் கிடையாது. ஆடுகிற மைதானங்களைப் பொறுத்தும் களச் சூழலைப் பொறுத்தும் அணுகுமுறை மாறும். இப்ப இந்த சீசன்ல உள்ளூர்ப் போட்டிகள்ல சூர்யகுமார் வந்து ஆடுனா அவராலகூட 180+ ஸ்ட்ரைக் ரேட்ல ஆட முடியுமாங்றது சந்தேகம்தான். பாரம்பரியமா ஆடுறதிலேயே இன்னும் என்னை பலப்படுத்திக்க விரும்புறேன். சூழலுக்கு ஏற்ற மாதிரி சில மாறுதல்கள் செஞ்சுக்கிட்டா மட்டும் போதும்னு நினைக்கிறேன். எப்படி ஆடினாலும் டி20-ல் அதிகமாக ரன்கள் அடிக்க வேண்டும். அவ்வளவுதான்.''

``இளம் வீரர்களோட வளர்ச்சியில் தமிழ்நாடு ப்ரீமியர் லீகின் பங்கு என்ன?’’

‘‘இதுல வருஷா வருஷம் ஏதோ ஒரு இளம் வீரர் பெருசா வந்துட்டே இருக்காங்க. என்னோட கரியரிலுமே TNPL-ன் பங்கு பெருசு. நகரங்களைத் தாண்டியும் இன்னும் நிறைய ஊர்களிலிருந்து நிறைய பேருக்கு இது மூலமா வாய்ப்பு கிடைக்குது. இந்தத் தொடர் நம்மோட தன்னம்பிக்கையை அதிகப்படுத்துது.’’

``ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு சாதிக்கத் தவறுகிறதே?’’

‘‘சமீபத்திய ரிசல்ட்களை மனதில் வைத்துதான் எல்லாரும் இப்படிப் பேசுகிறார்கள். ஆனா, நாங்க ரெட் பால் ஆடுற விதம் இப்ப நிறையவே மாறியிருக்கு. கடைசி சீசன்ல எப்படி ரஞ்சி ஆடினீங்கன்னு கேட்டா ‘வேற லெவல்ல ஆடினோம்’னு காலர தூக்கிச் சொல்வோம். அடுத்தடுத்த சீசன்கள்ல ரஞ்சி ஜெயிச்சு ரெட் பால் சாம்பியன் ஆகுறதுதான் எங்களோட இலக்கு!''