Published:Updated:

``இந்த மையத்தை வட மாநிலத்துக்கு மாற்றினால் எங்கள் நிலை...’’ - கூடைப்பந்து வீராங்கனைகள் கலக்கம்!

கூடைப்பந்து வீராங்கனைகள்
News
கூடைப்பந்து வீராங்கனைகள்

``பொதுவாக இங்கு பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவதே அரிது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கும் ஒரே கூடைப்பந்து பயிற்சி மையமான இங்கு வந்து சேர்வதற்கே நாங்கள் பல போராட்டங்களை கடந்திருப்போம். இந்நிலையில் இதை வட மாநிலத்துக்கு மாற்றினால்...’’

Published:Updated:

``இந்த மையத்தை வட மாநிலத்துக்கு மாற்றினால் எங்கள் நிலை...’’ - கூடைப்பந்து வீராங்கனைகள் கலக்கம்!

``பொதுவாக இங்கு பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவதே அரிது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கும் ஒரே கூடைப்பந்து பயிற்சி மையமான இங்கு வந்து சேர்வதற்கே நாங்கள் பல போராட்டங்களை கடந்திருப்போம். இந்நிலையில் இதை வட மாநிலத்துக்கு மாற்றினால்...’’

கூடைப்பந்து வீராங்கனைகள்
News
கூடைப்பந்து வீராங்கனைகள்

பல்வகை விளையாட்டுகளுக்கான இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையங்கள், நாடு முழுவதும் 37 நகரங்களில் உள்ளன. அதில் 2 பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

மயிலாடுதுறையில் உள்ள விளையாட்டுப் பயிற்சி மையம், கூடைப்பந்து மற்றும் கைப்பந்துக்கான அங்கீகாரம் பெற்று பயிற்சியை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள, ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் இது. இதற்காக அங்கு செல்பவர்கள் மயிலாடுதுறை பள்ளியிலேயே அனுமதி பெற்று பயின்றும் வருகிறார்கள். இதில் பல மாணவிகள் பயிற்சி பெற்று பல வெற்றி வாகைகளைச் சூட்டியுள்ளனர்.

முத்தாய்ப்பாக, தற்போதைய இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா, அணியில் உள்ள சத்யா ஆகியோர் இந்த மயிலாடுதுறை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களே. இவ்வளவு சிறப்பு மிக்க இந்தப் பயிற்சி மையத்திற்கு மயிலாடுதுறை மட்டுமன்றி தமிழ்நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் பயிற்சி பெற வருகிறார்கள்.

ராஜலெஷ்மி, வைஷ்ணவி
ராஜலெஷ்மி, வைஷ்ணவி

இந்நிலையில், இந்திய விளையாட்டு ஆணையம், மயிலாடுதுறையில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்துக்கான பயிற்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, வேறு மையங்களுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், வாரணாசி மையத்தில் கூடைப்பந்து பெண் வீரர்கள் பயிற்சி பெற இடங்கள் தரப்பட்டுள்ளன. அல்லது சட்டிஸ்கர் செல்ல வேண்டும் என சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ. அப்பர் சுந்தரத்திடம் பேசினோம்... ``மாணவிகளின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிக்கூடம் வாரணாசிக்கு மாற்றப்பட்டால் மாணவிகள் பல சிரமங்களுக்கு ஆளாவார்கள். வாரணாசி, பிரதமரின் சொந்தத் தொகுதி. அங்குள்ள பயிற்சி மையத்தை இன்னும் சிறப்பாக்கி, அந்த விளையாட்டு வீரர்கள் பல கோப்பைகளை வெல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதேபோல, மயிலாடுதுறை பயிற்சி மையத்தையும் தரம் உயர்த்தி, தமிழக விளையாட்டு வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். மாறாக, அவர்களை அலைக்கழிக்கக் கூடாது’’ என்றார்.

மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெறும் மாணவிகளிடம் பேசினோம். ராஜலெஷ்மி மற்றும் வைஷ்ணவி பேசும்போது, ``பொதுவாக இங்கு பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவதே அரிது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கும் ஒரே கூடைப்பந்து பயிற்சி மையம் இது. பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பயிற்சி பெறும் பெண்கள், அதற்கே பல போராட்டங்களை கடந்திருப்போம். இந்நிலையில், இந்த மையத்தை வட மாநிலத்துக்கு மாற்றினால் எங்களால் அவ்வளவு தொலைவுக்குச் சென்று பயிற்சி பெற முடியுமா? பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் எல்லாம் போட்டியில் வெற்றி பெற போராடுவார்கள்.

அ.அப்பர் சுந்தரம்
அ.அப்பர் சுந்தரம்

ஆனால் இருக்கும் பயிற்சி மையமும் இல்லாமல் போய், நாங்கள் பயிற்சிக்கே போராட வேண்டுமா என்று கலக்கமாக உள்ளது. இங்கு பயிற்சி பெறும் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களை அவ்வளவு தூரம் அனுப்பத் தயங்குவார்கள். 2,500 கிமீ பயணம், பாதுகாப்பு, செலவு என எல்லாவற்றையும் பற்றி யோசிப்பார்கள். இந்த உத்தரவை மாற்றியமைக்கும்படி வேண்டுக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் சீனியர்கள் போல நாங்களும் சாதிக்க வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள்’’ என்றனர் கோரிக்கையுடன்.

இங்கு பயிற்சி பெறும் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு, மத்திய அரசு முடிவெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் மறு உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள் இங்குள்ள விளையாட்டு வீராங்கனைகள்.