
படங்கள்: மஹேஷ்வர் சிங்; நன்றி: Brew Magazine
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
`வாள் தூக்கி நின்னா பாரு… வந்து சண்டை போட எவருமில்ல’ என்று எக்காளம் இசைத்து ஆர்ப்பரிக்கும் அளவுக்கு, சமீபத்தில் நடந்த காமன்வெல்த் வாள்சண்டைப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்று இந்தியர்களின் இதயங்களில் கம்பீரமாக நிற்கிறார் தமிழகப் பெண் பவானி தேவி. வரும் 2024 ஒலிம்பிக் போட்டிக்காக, கடந்த பத்து மாதங்களாக தமிழக அரசு செலவில் பிரான்ஸ் நாட்டில் தீவிர வாள்சண்டைப் பயிற்சியில் இருக்கும் பவானி தேவியிடம் வாழ்த்துகள் சொல்லி உரையாடினேன்.
``முதன்முறையாக சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் வாங்கியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதுவும், இந்தப் பதக்கங்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால், கடந்த காமன்வெல்த் போட்டியிலும் `தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை’ என்ற பெருமை கிடைத்தது. அதனால், இந்த முறையும் தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு விளையாடினேன். இதே போன்று, இன்னும் பல பதக்கங்களைக் குவிக்க வேண்டும்.
இதுக்கெல்லாம் காரணம் என் அம்மாதான். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தண்டையார்பேட்டை. அப்போ, முருக தனுஷ்கோடி ஸ்கூலில் ஆறாவது படிச்சுக்கிட்டிருந்தேன். ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், வாள்சண்டைன்னு பல விளையாட்டுகளைப் பள்ளியில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஒவ்வொரு விளையாட்டுலேயும் ஆறு பேர் கலந்துக்கணும். எனக்கு வாள்சண்டை போட்டியில மட்டும்தான் இடம் கிடைச்சுது. கத்தியைச் சுழற்றி விளையாட வேண்டும்.
சின்ன வயசுல எம்.ஜி.ஆர் - நம்பியார் கத்திச்சண்டை போட்டுக்கறதைப் பார்த்திருக்கேன். பார்க்கும்போதே ரசிக்கும்படி இருக்கும். அதை நினைச்சுக்கிட்டுதான் வாள்சண்டை போட்டியில விளையாடினேன்.

பெண் பிள்ளை வாள்சண்டை போடுறதான்னு மற்ற பெற்றோர்களா இருந்தா பயந்து தடுத்திருப்பாங்க. ஆனா, எங்கம்மா ரமணி அப்படிச் செய்யலை. `தைரியமா விளையாடு’ன்னு ஊக்கப்படுத்தினாங்க. அம்மா உறுதியாவும் உறுதுணையாவும் இருந்ததாலதான் ஒலிம்பிக் வரை போக முடிஞ்சது. முழுக்க முழுக்க சென்னை நேரு ஸ்டேடியத்துலதான் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அங்க எடுத்த பயிற்சிதான் உலகம் முழுக்கப் போய் விளையாட வெச்சுருக்கு.'' பவானி தேவியின் வார்த்தைகளில் நிறைவும் உற்சாகமும் பொங்குகின்றன.
``காமன்வெல்த் போட்டிகளில் வாள்சண்டை விளையாட்டு சேர்க்கப்படாமல் இருக்கிறதே?''
``ஒலிம்பிக் போட்டிகள் 1896-ம் ஆண்டு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது, ஐந்து விளையாட்டுகள் இருந்தன. அவற்றில், ஒன்று வாள்சண்டை. ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வாள்சண்டை இருக்கிறது. ஆனால், காமன்வெல்த் போட்டிகளில் தற்போதுவரை வாள்சண்டை இடம்பெறாதது வருத்தத்தைக் கொடுக்கிறது. காமன்வெல்த் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதுபோலவே, காமன்வெல்த் வாள்சண்டைப் போட்டியும் நடக்கிறது. காமன்வெல்த் போட்டி நடக்கும் அதே நாட்டில், அதே நேரத்தில் அருகருகேதான் இதுவும் நடத்தப்படுகிறது. என்றாலும் வாள்சண்டை, மதிப்பு குறைவாகத்தான் பார்க்கப்படுகிறது.''
``வாள்சண்டை வீரர் என்பதைத் தாண்டி இயல்பு வாழ்க்கையில் பவானி தேவி எப்படிப்பட்டவர்?''
``விளையாட்டு என்று வந்துவிட்டால் என் முகம் சீரியஸாகிவிடும். ஆனால், இயல்பு வாழ்க்கையில் ரொம்ப ஜாலியான பொண்ணு. நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன். நல்லா தூங்குவேன். கோயிலுக்குப் போவேன். நண்பர்களுடன் அரட்டை அடிப்பேன். புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். வாள்சண்டைக்கு வரவில்லையென்றால் எம்.பி.ஏ படிச்சு முடிச்சுட்டு, அது சார்ந்த ஒரு வேலையில சேர்ந்திருப்பேன். அதையும் தாண்டி புதுசா ஏதாவது செய்திருப்பேன். ஏன்னா, சின்ன வயசுல புதுசா ட்ரை பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேமாதிரிதான் வாள் சண்டையிலேயும் கலந்துக்கிட்டேன்.''

``வாள்சண்டைப் போட்டிக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கிறீர்கள்?''
``தமிழகத்தில் வாள்சண்டை போட்டி நன்றாக டெவலப் ஆகியிருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, பயிற்சிக்கு நிறைய உபகரணங்களும் கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கத்திடம் கோரிக்கையும் வைத்திருக்கிறோம். அரசாங்கமும் நிறைவேற்றுவதாக உறுதிகொடுத்திருக்கிறது. அதற்கான பணிகளும் நடந்துக்கிட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன். சந்தோஷம்.''
``ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாதபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''
``ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றதே எனக்கு முதல் வெற்றிதான். ஆனால், தோற்கும்போது எப்படி வலி இல்லாமல் இருக்கும்... நிச்சயமாக வருத்தம் இருந்தது. ஆனால், அதையே நினைத்து சோர்ந்துவிடக் கூடாது. அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வலிமையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதால், என் மனதை தேற்றிக்கொண்டேன். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டது நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்களைவைத்து நிச்சயமாக வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்.''
``உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர் யார்?''
``நடிகர் சசிகுமார் சார்தான். பவானி தேவி யாருன்னே தெரியாதபோது, அவர்தான் எனக்குப் பல போட்டிகளில் கலந்துகொள்ள உதவிகள் செய்தார். அவர் ஊரில் இல்லையென்றாலும் உறவினர்களிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பிடுவார். தொடர்ந்து நான் விளையாடும் போட்டிகளை கவனித்து வாழ்த்து சொல்லி ஊக்கப்படுத்துவார். போன வருடம் ஆகஸ்ட் 27-ம் தேதி எனது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸா வீட்டுக்கு நேரடியா வந்து வாழ்த்து சொன்னதோடு, தங்க செயினையும் பரிசாகக் கொடுத்தார். அவர் மிகப்பெரிய இயக்குநர், நடிகர். ஆனால், மிகவும் சாதாரணமாகப் பழகுவார்.''

``பவானி தேவிக்குப் பிடித்த விளையாட்டு எது, பிடித்த விளையாட்டு வீரர் யார்?''
``தோனியைப் பிடிக்கும். தோனியைப் பிடிக்கும்போது கிரிக்கெட் பிடிக்காம இருக்குமா... கிரிக்கெட்தான் என்னோட ஃபேவரைட் விளையாட்டு.''
``விளையாட்டு வீரர்களுக்கு உணவு எந்த அளவுக்கு முக்கியமானது?''
``சைவம், அசைவம் என்றில்லை. இரண்டிலுமே சத்துகள் உள்ளன. தகுந்த நியூட்ரிஷியன்களிடம் டயட் சார்ட் கேட்டு வாங்கி, அந்த வழிகாட்டுதல்களின்படி சாப்பிட வேண்டும். அதேநேரத்தில், விளையாட்டு வீரர்களுக்கு சைவ உணவு ரொம்ப முக்கியமானது.''
``எப்போது திருமணம்?''
``திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை. ஒலிம்பிக் பக்கத்தில் வந்துடுச்சு. ஆசியப் போட்டிகளும் இருக்கின்றன. முழு கவனத்தையும் அதில்தான் செலுத்திக்கொண்டிருக்கிறேன். என் திருமணப் பொறுப்பை அம்மாகிட்ட ஒப்படைச்சுட்டேன். அவங்க பார்த்துப்பாங்க.''
``வாள்சண்டை போட்டிக்கு வருகிறவர்களுக்கு உங்களது ஆலோசனை?''
``எந்த விளையாட்டா இருந்தாலும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கணும். நூறு சதவிகித உழைப்பைச் செலுத்தணும். வாள்சண்டை விளையாடும் பெண்களுக்கு, வீட்டுலயும் சுற்றத்தாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க. நாமதான் சொல்லிப் புரியவெக்கணும். பொறுமையும் நிதானமும் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம்.''
``தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?''
``இனிப்புகளும் பட்டாசுகளும்தான். குறிப்பாக, லட்டு ரொம்பவே பிடிக்கும். வாள்சண்டை விளையாடுவதால், இனிப்புகள் உண்பதில்லை. தீபாவளி அன்று மட்டும், அதற்கு விதிவிலக்கு. அதேபோல, விடிய விடிய அண்ணன்களுடன் பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பேன். தீபாவளி நெருங்கும்போது தானாகவே உற்சாகம் வந்துடும். ஆனால், போட்டிகளில் பங்கேற்று வருவதால், கடந்த ஐந்து வருடங்களாக தீபாவளியின்போது நான் வீட்டில் இல்லை. இந்த வருடமும் எனக்கு பிரான்ஸில்தான் தீபாவளி.''