Published:Updated:

` தெருவுல சத்தம் அடங்கவே நைட் 11 மணி ஆயிரும்!' - தெருவோர சாதனைச் சிறுமியின் துயரக் கதை

மோனிஷா
News
மோனிஷா

சென்ட்ரல் ரயில் நிலையம் பக்கத்துல்ல இருக்குற வால்டாக்ஸ் ரோட்டுலதான் நான் தங்கியிருக்கேன்.

Published:Updated:

` தெருவுல சத்தம் அடங்கவே நைட் 11 மணி ஆயிரும்!' - தெருவோர சாதனைச் சிறுமியின் துயரக் கதை

சென்ட்ரல் ரயில் நிலையம் பக்கத்துல்ல இருக்குற வால்டாக்ஸ் ரோட்டுலதான் நான் தங்கியிருக்கேன்.

மோனிஷா
News
மோனிஷா

சென்னையின் தினசரி பரபரப்புகள் அடங்கிய பின்னர், நடைபாதைகள் எப்படி இருக்கும்..., `யாருமில்லாமல் காலியாக இருக்கும்' என்ற பதிலைத்தான் சொல்வீர்கள். ஆனால், அங்கு தற்காலிக குடியிருப்புகள் அமையும். நமக்குத்தான் அது நடைபாதைகள், வீடே இல்லாத மக்களுக்கு அதுதான் வீடு. நாம் தான் அந்த மனிதர்களைக் கவனிப்பதில்லை.

தெருவோர கிரிக்கெட்டில் சாதித்த சிறுவர்கள்
தெருவோர கிரிக்கெட்டில் சாதித்த சிறுவர்கள்

அந்த மனிதர்களையும் அவர்களது குழந்தைகளுக்குள் இருக்கும் திறமைகளையும் அடையாளம் காட்டுகிறது ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் நிறுவனம். தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச அளவிலான போட்டிகளை இந்த அமைப்பு நடத்துகிறது. சாலைகளில் வசிக்கும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் பிரதான நோக்கம். அண்மையில் தெருவோர சிறுவர்களுக்காக நடந்த உலகக்கோப்பை தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பங்குபெற்றனர். இந்த அணியே உலகக் கோப்பையை வென்றது. பால்ராஜ், சூர்யா, மோனிஷா, நாகலட்சுமி ஆகிய நான்கு தெருவோர சிறுவர்களும் வெளியுலகின் பார்வைக்குத் தெரியத் தொடங்கினர்.

மோனிஷா, பால்ராஜ் ஆகியோர் தெருவோரங்களில் வசித்து வருகின்றனர். நாகலட்சுமி, சூர்யா ஆகிய இருவரும் காப்பகத்தில் வளர்ந்து வருகின்றனர். ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் அமைப்பு கடந்த சில வருடங்களாக இந்தப் போட்டிகளை நடத்தி வருகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டி, பிஃபா தொடருக்கு முன்னதாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ` இதனை வெறும் விளையாட்டுப் போட்டி என கடந்துவிட்டு செல்வது சரியானதல்ல. எங்களின் வலி மற்றவர்களுக்குத் தெரியவேண்டும். குழந்தைகளுக்கான நான்கு முக்கியமான அடிப்படை உரிமைகளும் தெருவோரக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை' என லண்டனில் பேசியிருக்கிறார் சிறுமி மோனிஷா. வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை ஆகிய நான்கைத்தான் முன்வைத்தார் மோனிஷா

மோனிஷா
மோனிஷா

மோனிஷாவைச் சந்தித்துப் பேசினோம். `` தெருவோரத்துல வசிக்கறவங்களுக்கான பிரச்னை என்னன்னு அங்க குடியிருக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். சென்ட்ரல் ரயில் நிலையம் பக்கத்துல்ல இருக்குற வால்டாக்ஸ் ரோட்டுலதான் நான் தங்கியிருக்கேன். அந்த ரோட்டுல இருக்கற ஒரு கடை பக்கத்துல உட்கார்ந்து இருப்பேன். குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுறதா லண்டனில் நடந்த மாநாட்டில் பேசினேன். பொறந்த குழந்தையைக்கூட ரோட்டுல தான் வச்சிருப்போம். தெருவுல சத்தம் எல்லாம் அடங்கவே நைட் 11 மணிக்கு மேல ஆயிடும். அப்புறம் தான் தூங்க போவோம். காலையில 5 மணிக்கு முன்னாடி எல்லாம் படுக்கையில இருந்து எழுந்திருக்கனும். குழந்தைங்கள வச்சிருக்கவங்க நைட் எல்லாம் முழிச்சுகிட்டுத்தான் இருக்கணும். அப்படி இருந்தும் நிறைய குழந்தைகள் காணாம போயிருக்காங்க. மழை காலங்களில் வீடு இருக்குறவங்களே சிரமப்படுறதா சொல்றாங்க, எங்க நிலைமையை நினைச்சு பாருங்க. குழந்தையை எங்க வச்சிருக்கிறது. அடிப்படை உரிமைகள்ல முதன்மையான வாழ்வாதாரம்தான். அதுவே எங்களுக்கு கேள்விக்குறியா இருக்கு. லண்டன்ல நான் பேசியதை ஐ.நா சபையின் கவனத்துக்கு கொண்டுபோறதா சொன்னாங்க. எங்க நிலைமை எப்ப மாறும்னுதான் தெரியல" என்றார் வேதனையோடு