புரோ கபடி வரலாற்றிலேயே முதன் முறையாக அரையிறுதி சுற்றில் தமிழ் தலைவாஸ் களமிறங்க இருக்கிறது 2.26 கோடிக்கு வாங்க பட்ட பவன் குமார் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேறினார். தொடர் தோல்வி, சாகர் காயம், பயிற்சியாளர் மாற்றம் என எல்லா தடைகளையும் உடைத்து தமிழ் தலைவாஸ் விஸ்பரூபம் எடுத்ததற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் அசன் குமாரே. அசன் குமார் வந்த பிறகுதான் தமிழ் தலைவாஸ் 'வேற மாதிரி' அணியாக மாறியது. அசன் குமார் எப்படி இதை சாதித்தார்?
பயிற்சியாளர் அசன் குமாருக்கு முன்:
சீசன் 5 இல் முதல் முறையாக களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி கடந்த 4 சீசன்களில் விளையாடிய 88 ஆட்டங்களில் 20 வெற்றிகள், 53 தோல்விகள், 15 டைகள் என மோசமான ரெக்கார்டே வைத்திருந்தது. 4 சீசன்களிலும் புள்ளிப்பட்டியலில் கடைசியான 11 அல்லது 12 வது இடத்தைதான் பிடித்தது. அசன் குமார் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பு இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகள், 1 டை என தொடக்கத்தில் புள்ளிப்பட்டியலில் 11 ஆவது இடத்திலேயே இருந்தது.

பயிற்சியாளர் அசன் குமார்:
61 வயதான அசன் ஹரியானாவின் பிவானி மாவட்டத்தை சேர்ந்தவர். அசன் ஒரு பயிற்சியாளர் மட்டுமில்லை. அவர் ஒரு கபடி வீரரும் கூட. ஈரான் மற்றும் தென் கொரியா அணிகளின் பயிற்சியாளராக இருந்து பல சம்பவங்களை செய்திருக்கிறார் . அசன் பயிற்சியின் கீழ் இந்த இரு அணிகளும் இந்தியாவை தோற்கடித்திருக்கின்றனர். இந்திய கபடி அணியின் கேப்டனாகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். 1990 ஆசிய விளையாட்டில் அசனின் தலைமையில் தங்க பதக்கமும் பெற்று கொடுத்தார்.
தமிழ் தலைவாஸும் அசன் குமாரும்:
அசாத்தியமான முறையில் தொடர் வெற்றிகளை குவித்தால் மட்டுமே பிளே ஆஃப்க்கு நுழைய முடியும் என சூழலில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை அசன் குமார் ஏற்றார். பவன் குமார் அணியில் இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களால் முடியும் என ஒவ்வொரு இளம் வீரர்களையும் மனதளவில் திடப்படுத்தினார். பயிற்சியாளரான பிறகு முதல் போட்டியிலேயே அப்போது புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை புள்ளிப் பட்டியலில் கடைசி 11-வது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் வீழ்த்தி அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார் அசன் குமார். தனிப்பட்ட வீரர்களை நம்பியிராமல் ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழ் தலைவாஸ் அணிக்கு ஊக்கமளித்தார். தற்காப்பாக ஆடி வந்த தலைவாஸை தட்டி எழுப்பி அக்ரசிவ் அணியாக மாற்றினார். இந்த விஷயம் தான் தலைவாஸ் நாக் அவுட் போட்டியில் அழுத்தமில்லாமல் வெற்றியை கைப்பற்றியதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. வீரர்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி 3 ரெய்டர்கள் 4 டிஃபென்டர்கள் என வலுவான ஸ்டார்டிங் 7 ஐ கட்டமைத்தார்.

பவன் குமாருக்கு பதில் ரெய்டில் நரேந்தரை சிறந்த ரெய்டராக செதுக்கினார். அஜிங்கியா பவரை மற்றொரு ஸ்டார் ரெய்டராக களத்தில் பயன்படுத்தி டூ ஆர் டை ரெய்டில் மாஸ் காட்டவைத்தார். சாகரை கேப்டனாக்கி அவரை ஃபார்முக்கு கொண்டு வந்தது டிபன்ஸ் யூனிட்டுக்கு பக்க பலமாக மாறியது. லெஃப்ட் கார்னரில் சாஹிலை கண்டறிந்து சிறப்பாக விளையாட வைத்தார்.
அதிக அட்வான்ஸ் டேக்கிள் நடத்தும் மோகித் அபிஷேக் அகியோரின் தவறை திருத்தி அதிரடியாக விளையாட செய்தார். இப்படியாக தனித்தனியாக ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் மெருகேற்றினார். கோச் கார்னரில் அசன் பேசும் வார்த்தைகளெல்லாம் வீரர்களின் நெஞ்சுரத்தை அதிகரித்திக் கொண்டே இருந்தது. விளைவாக, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த புனேரி பல்தான் அணியை தோற்கடித்தனர். நடப்பு சாம்பியனான தபாங் டெல்லி அணியை 2 முறை தோற்கடித்தனர். தொடர்ந்து சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருந்தது. பயிற்சியாளராக பொறுப்பேற்று 17 ஆட்டங்களில் 10 வெற்றிகள், 4 தோல்வி, 3 டை என தமிழ் தலைவாஸ் இதுவரை காணாத ரிசல்ட்டை எட்டி முதல் முறையாக பிளே ஆப் க்குள் அசன் குமார் தலைமையில் நுழைந்தனர்.
பிளே ஆஃப் சுற்று வரை யாரும் எதிர்பார்த்திராத தமிழ் தலைவாஸ் அணியை கெத்தாக அரையிறுதி சுற்று வரை அழைத்து வந்து இருக்கிறார் அசன் குமார். அசன் விதைத்த இந்த இளம் விதைகள் தமிழ் தலைவாஸுக்கு நாளை பல வெற்றிகளை கொடுக்கும்!