சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

கிறங்கவைக்கும் கிறிஸ்டல் மியூசியம்!

கிறிஸ்டல் மியூசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
கிறிஸ்டல் மியூசியம்

இந்தி சினிமா கணக்காக ஒரு பிரிவு. அதன் தீம்: `காதல்.’ உள்ளே நாலு பக்கமும், நான்கு வரிசைகளில் விதம்விதமாக, கலர் கலராக இதயம்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

நம் ஊரில் பெரும் பணக்காரர்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்த தங்கம், வைரம் என்று வாங்கி அணிந்து வலம்வருவார்கள். (அதன் பிறகு இன்கம்டாக்ஸ் ரெய்டு இன்னபிற தொல்லைகளைச் சந்திக்க நேரிடும் என்பது தனிக்கதை!) ஆனால் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தங்கம், வைரம், பிளாட்டினம் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிறது ஸ்வரோவ்ஸ்கி. ஹாலிவுட் நட்சத்திரங்கள் காதில், மூக்கில், கழுத்தில், கையில், இடுப்பில் மட்டுமல்லாமல் பிரா மற்றும் காலணிகளில்கூட ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்களைப் பதித்து கெத்து காட்டுகிறார்கள். இத்தனைக்கும், அவை கண்ணாடி கிறிஸ்டல்கள்தான். ஆனால், `ஸ்வரோவ்ஸ்கி’ என்ற பெயருடன் சந்தைக்கு வரும்போது, அந்தப் பெயருக்கான மரியாதையே வேற லெவல்!

ஸ்வரோவ்ஸ்கி நிறுவனத்தின் வருடாந்தர வருவாய் சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய். கொரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி ஸ்வரோவ்ஸ்கி தலைமையகம், தொழிற்சாலை மற்றும் இதர மையங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம். உலகெங்கிலும் 170 நாடுகளில், மூவாயிரம் ஸ்வரோவ்ஸ்கி விற்பனை மையங்கள் இருக்கின்றன.

கிறங்கவைக்கும் கிறிஸ்டல் மியூசியம்!

1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம்தான் `ஸ்வரோவ்ஸ்கி.’ ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த டேனியல் ஸ்வரோவ்ஸ்கி என்பவர் ஆர்மண்ட் கோஸ்மான், பிரான்ஸ் வெயிஸ் என்ற இருவருடன் சேர்ந்து `ஏ.கோஸ்மான் அண்ட் டி. ஸ்வரோவ்ஸ்கி அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் சிறிய அளவில் ஆரம்பித்த நிறுவனம், 127 ஆண்டுகளில் அபார வளர்ச்சியடைந்து, சர்வதேச ஃபேஷன் உலகில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதன் தலைமையகம் ஆஸ்திரியா நாட்டிலுள்ள இன்ஸ்புரூக் நகரத்துக்கு அருகில், வாட்டன்ஸ் என்ற இடத்தில் உள்ளது.

ஸ்வரோவ்ஸ்கி நிறுவனம் மூன்று முக்கியத் தொழில் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல் பிசினஸ். இந்தப் பிரிவு படிகக் கண்ணாடி (கிறிஸ்டல்) மற்றும் நகைகளைத் தயாரிக்கிறது. இரண்டாவது பிரிவு வானியல் தொலைநோக்கிகள், துப்பாக்கிகளில் குறி பார்ப்பதற்குப் பொருத்தக்கூடிய தொலைநோக்கிகள், பைனாகுலர் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. மூன்றாவது பிரிவு இந்தத் துறைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இந்த மூன்று பிரிவுகளிலும் பிசினஸில் முன்னணி வகிப்பது கிறிஸ்டல் பிரிவுதான்! தற்போது, ஸ்வரோவ்ஸ்கி நிறுவனத்தின் ஸ்தாபகரான டேனியல் ஸ்வரோவ்ஸ்கி குடும்பத்தைச் சேர்ந்த ஐந்தாவது தலைமுறையினர் கம்பெனியை நிர்வகித்து வருகிறார்கள்.

அண்மையில் ஆஸ்திரியாவுக்குச் சென்றிருந்தபோது, வாட்டன்ஸில் உள்ள ஸ்வரோவ்ஸ்கி அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். நுழைவுக் கட்டணமே தலைக்கு 19 யூரோ. நம் ஊர் கணக்குக்கு 1,500 ரூபாய். இன்ஸ்புரூக் நகரத்திலிருந்து வாட்டன்ஸ் சற்றுத் தள்ளி இருப்பதால், அங்கு சென்று வர ஸ்வரோவ்ஸ்கி நிர்வாகமே இலவச பஸ் சர்வீஸ் நடத்துகிறது.

ஸ்வரோவ்ஸ்கி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் `கிறிஸ்டல் உலக'த்தினுள் நுழைந்தவுடனேயே நம்மை வரவேற்பது பசுமை போர்த்திய ஒரு பெரிய முகம். அதன் வாயிலிருந்து கொட்டும் அருவி. அந்தப் பசுமை மனிதரது இடது பக்க தோள்பட்டைதான் உள் நுழைவாயில். அங்கேயே `யார் இந்த ஸ்வரோவ்ஸ்கி?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. ஒரு கண்ணாடி வெட்டும் தொழிலாளியின் மகன்தான் டேனியல் ஸ்வரோவ்ஸ்கி. சிறு வயதிலேயே, அப்பாவின் சிறிய கண்ணாடித் தொழிற்சாலையில் அப்ரெட்டிஸாக வேலைக்குச் சேர்ந்து கண்ணாடி வெட்டும் தொழிலைக் கற்றுக்கொண்டார். 1892-ல் மின்சாரத்தால் இயங்கும் கண்ணாடி வெட்டும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து, அதற்கான காப்புரிமையைப் பெற்றார். இது கண்ணாடி வெட்டும் வேலையை சுலபமாக்கியது. 1895-ல் ஒரு பிரத்யேகமான கண்ணாடித் தயாரிப்பு முறையை உருவாக்கி, அந்தக் கண்ணாடி படிமத்துக்கு `ஸ்வரோவ்ஸ்கி' என்று தனது குடும்பப் பெயரைச் சூட்டினார். உயர் வெப்பநிலையில் குவார்ட்ஸ் மணல், சோடா, பொட்டாஷ் ஆகியவற்றுடன் இன்னும் சில ஸ்பெஷல் அயிட்டங்களை (தொழில் ரகசியம்?) சேர்த்து, அந்தக் கலவையை உருக்கித் தயாரிப்பதுதான் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்கள்.

இந்த அருங்காட்சியகத்தைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்களோடு இணைத்து, பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் புதுமைகளைச் செய்திருக்கிறார்கள். எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய குதிரை... ஆபரணங்கள் பூட்டிக்கொண்டு பின்னங்கால்கள் இரண்டும் தரையில் இருக்க, முன்னங்கால்கள் ஆகாயத்தில் பறக்க, மொத்த குதிரையும் தகதகவென்று ஜொலிக்கிறது. குதிரையைப் பார்த்தவுடன் அனைவரது கைகளும் பரபரத்து சாட்டையை… சாரி... மொபைலை எடுக்கின்றன. செல்ஃபி எடுத்துக் கொள்ளத்தான்! பக்கத்தில், ஒரு பெரிய சைஸ் கிறிஸ்டல் அந்தரத்தில் தொங்குகிறது. புத்திசாலித்தனமான லைட்டிங் காரணமாக அதன் ஜொலிப்பு வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டுகிறது.

கிறங்கவைக்கும் கிறிஸ்டல் மியூசியம்!

அடுத்து, ஓர் இருட்டு அறை. அதனுள் சென்றதும் இடது, வலது, முன்னே, பின்னே, மேலே, கீழே என எங்கே பார்த்தாலும் நட்சத்திரங்களாக மினுக்கின்றன. இங்கேகூட நட்சத்திரங்களை எண்ண முடியவில்லை. இருட்டில் போட்டோ எடுத்தால் சரி வராது. ஃப்ளாஷ் போட்டாலோ நட்சத்திர ஜொலிப்பு தெரியாது. பாவம் பார்வையாளர்கள்!

இங்கே இருக்கும் ஹாலிவுட் பகுதிதான் பார்வையாளர்களைக் கவரும் நம்பர் ஒன் பகுதி என்றால் அது மிகை இல்லை. காரணம், ஹாலிவுட்டுக்கும், ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டலுக்கும் அத்தனை நெருக்கம். ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஸ்வரோவ்ஸ்கி ஆபரணங்களை வாங்கி அணிந்துகொள்வது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல் காஸ்ட்யூம்கள். திரைப்பட நட்சத்திரங்கள் அணிந்து நடித்த கிறிஸ்டல் பதித்த தொப்பி முதல் ஜொலிக்கும் காலணிகள் வரை பல்வேறு ஆடைகளும், அணிகலன்களும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குக் கீழே எந்தத் திரைப்படத்தில், எந்த நட்சத்திரம் அணிந்தார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சில சமயங்களில் இவற்றுக்கும் அப்பால் சில விஷயங்கள் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, `டை அனதர் டே' (2002) என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில், ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் பிராஸ்னனும், ஹாலே பெர்ரியும் ஒரு காட்சியில் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல் படுக்கையில் படுத்திருப்பார்கள். `தி பான்டம் ஆஃப் தி ஓபரா' (2004) படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான சாண்ட்லியர் விளக்கு ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்களால் ஆனது. 2012-ல் வெளியான `ஸ்கை ஃபால்' என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஹீரோயினுக்கு ஒரு காட்சியில் 60 ஆயிரம் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்களைக்கொண்டு உடையை வடிவமைத்தார், ஹாலிவுட் டிசைனரான ஸ்டீபன் வெப்ஸ்டர். `ஜென்டில்மென் பிரிஃபெர் பிளாண்ட்ஸ்' (1953) என்ற படத்தில் மர்லின் மன்றோ அணிந்திருந்த எல்லா ஆடைகளுமே கிறிஸ்டல் அலங்கார உடைகள்தான். `டிரீம் கேர்ள்ஸ்' படத்துக்காக 10 லட்சம் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்களைக் கொண்டு 275 உடைகள் தயாரிக்கப்பட்டன. 2010-ல் ஓர் இசைப் பயணத்தின்போது மைக்கேல் ஜாக்சன் கிறிஸ்டல் பொருத்திய கையுறைகளைப் பயன்படுத்தினார். அது பின்னர் ஏலம்விடப்பட்டபோது, சுமார் இரண்டு லட்சம் டாலருக்கு விலைபோனது.

இந்தி சினிமா கணக்காக ஒரு பிரிவு. அதன் தீம்: `காதல்.’ உள்ளே நாலு பக்கமும், நான்கு வரிசைகளில் விதம்விதமாக, கலர் கலராக இதயம். அதுவும் சில சிங்கிள் ஹார்ட். சில டபுள் ஹார்ட். நம் ஊர் சினிமாக்காரர்கள் கண்ணில்பட்டிருந்தால் இந்நேரம் அங்கே போய் ஒரு டூயட் எடுத்திருப்பார்கள்.

உலகப் புகழ்பெற்ற உள்ளாடைத் தயாரிப்பாளர்களான விக்டோரியாஸ் சீக்ரெட்டும், ஸ்வரோவ்ஸ்கியும் சேர்ந்து நிறைய ஃபேஷன் ஷோக்கள் நடத்தியிருக்கிறார்கள். 2018-ல் நடந்த ஃபேஷன் ஷோவில் எல்சா ஹாஸ்க் என்ற மாடல் ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரா அணிந்து பூனை நடை நடந்தார். அன்றைய மதிப்பில் அதன் விலை, பத்து லட்சம் டாலர்.

அருங்காட்சியத்தின் முகப்பில் 
கட்டுரையாளர்
அருங்காட்சியத்தின் முகப்பில் கட்டுரையாளர்

பார்வையாளர்களை ஈர்க்கும் இன்னொரு விஷயம், கிறிஸ்டல் மேகம். திறந்தவெளியில் அண்ணாந்து பார்த்தால் மேகக் கூட்டம்போலப் பளபளக்கும் கம்பிவலைகளில் கோக்கப்பட்ட வெள்ளியாக ஒளிர்கின்றன கிறிஸ்டல்கள். எட்டு லட்சம் கிறிஸ்டல்களைப் பயன்படுத்தி இரண்டு கலைஞர்கள் உருவாக்கிய கலைப் படைப்பு இது.

இன்னோர் இடத்தில் உலக அதிசயங்களையெல்லாம் கிறிஸ்டலில் செய்துவைத்திருக்கிறார்கள். அடுத்த பகுதி, கிறிஸ்டல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான ஷாண்ட்லியர் விளக்குகள். இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தால், அடுத்தது ஒரு மெகா விற்பனைக் கூடம். ஒரு மெகா சைஸ் பூமி உருண்டை. அதன் ஒவ்வொரு மில்லிமீட்டரும் கிறிஸ்டல்தான். வரைபடத்தில் நாட்டுக்கு நாடு வண்ணம் வேறுபடுவதுபோல, இந்த கிறிஸ்டல் குளோபிலும் நாட்டுக்கு நாடு கலர் மினுமினுக்கிறது.

இந்த விற்பனைக்கூடத்தில் இன்னதுதான் என்று இல்லாமல், ஸ்வரோவ்ஸ்கி கிறிஸ்டல்களைப் பயன்படுத்தி உச்சி முதல் பாதம் வரை அணியத்தக்க சகலவிதமான அணிகலன்கள், அலங்கார அறைகலன்கள். கொரோனா ஸ்பெஷலாக கிறிஸ்டல் பதித்த முகக்கவசம்கூட உண்டு. விலை அதிகமில்லை ஜென்டில்மேன், சுமார் எட்டாயிரம் ரூபாய் மட்டுமே! கிறிஸ்டல் பதித்த கைக்கடிகாரம், பேனாகூட உண்டு.

மணிக்கணக்காக அங்கேயே நின்றுகொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்து ரசிக்கலாம். அவற்றை உருவாக்கிய கலைஞர்களின் கற்பனைத் திறனுக்கு `ஓ' போடலாம். ஆனால், விலையைக் கேட்டதும், “சரி! புறப்படலாமா... ரிட்டர்ன் பஸ் எத்தனை மணிக்கு?” என்று நழுவத் தோன்றும்.