
வித்தியாச விளையாட்டுகள்
திரையில் கற்பனையாக விரியும் சில விஷயங்கள் அப்படியே நிகழ் உலகத்திலும் நடந்தால் எப்படியிருக்கும்? அந்தக் கற்பனையிலிருந்து நிகழ் உலகத்திற்கு மாறியிருக்கும் அம்சத்தில் நாமும் ஓர் அங்கமாகப் பங்கெடுத்தால் எப்படியிருக்கும்? திரையில் நம்மைப் பரவசப்படுத்தும் கற்பனைக்கு மீறிய காட்சிகளைப் பார்க்கையில், இப்படியான எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படியே திரையில் கற்பனையாக விரியும் அத்தனையும் நிஜமாகிவிட முடியாதுதான் என்றாலும் சில விஷயங்களை முடிந்த அளவுக்கு நிகழ் உலகிலும் மறு உருவாக்கம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதே ‘வித்தியாச விளையாட்டுகள்’ தொடரின் முந்தைய பகுதியில் குவிடிச் என்ற விளையாட்டைப் பற்றிப் பார்த்திருப்போம். மந்திர தந்திரங்கள் நிறைந்த ‘ஹாரிபாட்டர்’ உலகில் ஆடப்படும் அந்த மாயாஜால விளையாட்டு, திரையைத் தாண்டி இப்போது நிஜத்திலும் வெளிநாடுகளில் ஆடப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் இப்போது பார்க்கவிருக்கும் விளையாட்டுமே இதே ரீல் டு ரியல் வகைதான். நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதுமே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குவிட் கேம்’ ஆட்டம்தான் அது. ஹாங்-டுங்-யாக் என்பவரால் இயக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் அதிக மணித்துளிகளுக்குப் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் என சாதனை செய்திருக்கிறது. 456 போட்டியாளர்கள் ஒரு விசித்திர இடத்தில் பணத்திற்காக ஆடும் வாழ்வா - சாவா ஆட்டம்தான் இந்த ‘ஸ்குவிட் கேம்’-ன் மையக்கதை. இந்த ‘ஸ்குவிட் கேம்’-ல் ஆடப்படும் ஆட்டங்களைத்தான் இப்போது நிஜத்திலும் பலர் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வெப் சீரிஸில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான போட்டிகளும் சவால்களும் வழங்கப்படும். வெல்பவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள். அதேநேரத்தில் வீழ்பவர்கள் வெறுமென ஆட்டத்திலிருந்து மட்டுமல்ல. இந்த உலகத்திலிருந்தே வெளியேற்றப்பட்டுவிடுவார்கள். ஆம், உடனடியாக அந்தச் சிவப்பு கலன் அணிந்த முகமூடி மனிதர்கள், வீழ்ந்தவர்களை மரணிக்கச் செய்துவிடுவார்கள். நிஜத்தில் ஆடும்போது உயிரைவிடும் அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் அந்த அம்சத்தை மட்டும் தவிர்த்துவிட்டு ஆடுகிறார்கள். இந்த ஆட்டத்தில் ஹைலைட்டே வெல்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைதான்.
அந்த வெப்சீரிஸின் கதைப்படி இறுதியில் அத்தனை பேரையும் வீழ்த்தி, அதாவது அத்தனை பேரும் மரணித்த பிறகு மீதமிருக்கும் வெற்றியாளருக்கு 456 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். எத்தனை பூஜ்ஜியம் வருமென்றுகூட தெரியாத அளவுக்குப் பெரிய தொகை கொடுக்கப்படுவதுதான் ஸ்குவிட் கேமை இன்னும் இன்னும் சுவாரஸ்யமாக்கிக்கொண்டே இருக்கும். ஏழ்மையின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களை உயிரை விடுமளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தூண்டுவது இந்தப் பெரிய தொகை மட்டும்தான். மேலும், இடையிடையே ஆட்டத்தின்போது எதிரிகளை நண்பராக்குவதும், நண்பர்களை துரோகியாக்குவதுமே பணம் செய்யும் மகிமையாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இத்தனை தீவிரமாக இந்த ‘ஸ்குவிட் கேம்’-ல் என்னென்ன ஆட்டங்கள் ஆடப்படுகின்றன என்று பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும். இளம் வயதில் சிறுபிள்ளைத்தனமாக ஆடிய ஆட்டங்கள் போட்டியாளர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் சவால்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும். ரெட் லைட் & கிரீன் லைட் என்கிற ஒரு ஆட்டத்தில் ஒரு பொம்மை பார்க்கும் போது போட்டியாளர்கள் சிலையாக நிற்க வேண்டும். அதே பொம்மை திரும்பியவுடன் முன்னகர்ந்து இலக்கை எட்ட வேண்டும். இன்னொரு கட்டத்தில் அச்சில் ஊற்றப்பட்டிருக்கும் சர்க்கரைப்பாகில் குறிப்பிட்ட வடிவங்களைச் செதுக்க வேண்டும். போட்டி தீவிரமடைந்து உயிர்பலி அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்னொரு தறுவாயில் கோலிக்காய்களை வைத்து ஒரு ஆட்டம் ஆடச் சொல்வார்கள்.

இப்படியாக அடுத்தடுத்த கட்டங்களை எட்ட எட்ட ஆட்டங்கள் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகத்தான் சென்று கொண்டிருக்கும். ஆனால், இங்கே ஆட்டத்தின் தன்மை முக்கியமல்ல. வெற்றி - தோல்விதான் முக்கியம். வெல்பவர் அந்தப் பணக்குவியலை நோக்கி மேலும் ஒரு அடி முன்னகர்வார். வீழ்பவர் அத்தோடு விடைபெறுவார். ஏழ்மையும் பணத்தின் மீதான விருப்பமும் மனித மனங்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கும் எனப் பல இடங்களில் நுணுக்கமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
தங்களின் தளத்தில் சக்கைப்போடு போட்ட இந்தக் கற்பனையான ‘ஸ்குவிட் கேம்’ சீரிஸை நிஜமாக்க முனைகிறது நெட்ப்ளிக்ஸ். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்த ஸ்குவிட் கேமைப் போலவே இதிலும் 456 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் உலமெங்கும் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ‘மரணித்தல்’ என்கிற அந்த ஒரு கொடூர ரிஸ்க் மட்டும் இந்த நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினலில் இருக்காது. வீழ்பவர் போட்டியிலிருந்து மட்டும் வெளியேற்றப்படுவார். மற்றபடி ஸ்குவிட் கேமின் அத்தனை அம்சங்களும் இங்கேயும் பின்பற்றப்படும். சக 455 போட்டியாளர்களையும் வீழ்த்திக் கடைசியில் வெற்றியாளராக நிற்கும் அந்த ஒரு போட்டியாளருக்கு 4.56 மில்லியன் டாலரை நெட்ப்ளிக்ஸ் பரிசாக அளிக்கும். இந்த ரீல் டு ரியல் கேம் ஷோவைப் படம்பிடித்து 10 எபிசோடுகளாக வெளியிடவும் நெட்ப்ளிக்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

நெட்ப்ளிக்ஸுக்கு முன்பே நெட்ப்ளிக்ஸுடன் இணைந்தும் தனிப்பட்ட முறையிலும் பல யூடியூபர்களுமேகூட ‘ஸ்குவிட் கேம்’-ஐ ரியலாக நடத்திக் காட்டிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றனர். மிஸ்டர் பீஸ்ட் எனும் பிரபலமான யூடியூபர் ஒருவர் இப்படியாக ‘456’ போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து, தானே ஒரு ஸ்குவிட் கேமை நிகழ்த்திக் காட்டினார். வென்றவருக்குப் பெருந் தொகையையும் பரிசாக அளித்தார். அவருடைய யூடியூப் பக்கத்தில் மட்டும் அந்த ‘ஸ்குவிட் கேம்’ வீடியோ 330 + மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து படுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
‘ஸ்குவிட் கேம்’ ஆட வாருங்கள் என உங்களுக்கும் ஒரு அட்டையில் அழைப்பு வருமெனில் நீங்கள் அதில் பங்கேற்பீர்களா? (பி.கு: உயிருக்கு உத்தரவாதம் உண்டு!)