பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி!
2023 பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர், வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய பெண்கள் அணி, இந்திய பெண்கள் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக இந்திய அணி, 15 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

பிரதமர் மோடிக்குப் பரிசளிக்கப்பட்ட மெஸ்ஸியின் ஜெர்சி!
நேற்று பெங்களூரில் 2023-ம் ஆண்டிற்கான இந்திய எரிசக்தி வார விழாவை, பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த YPF எரிசக்தி நிறுவனத்தின் தலைவரான பாப்லோ கோன்சலஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சியைப் பரிசாக வழங்கினார். கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய செல்சீ அணி வீரர்!
நேற்று, துருக்கி நாட்டில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நாட்டின் பல கட்டடங்கள் இடிந்து 1900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்சீ அணியின் முன்னாள் வீரர் மற்றும் நியூகேஸ்டில் அணியின் வீரருமான கிறிஸ்டியன் அட்ஸு, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த 31 வயதான இவர், துருக்கி கிளப் போட்டியில் விளையாடியுள்ளார்.
சத்தியம் செய்து சாதித்த மெஸ்ஸி!
2022 கத்தார் உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி வீரரான ரோட்ரிகோ டி பால், தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிகழ்வு குறித்து பேசிய இவர், "நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு காயமடைந்தேன். காயம் பற்றி மெஸ்ஸி அறிந்ததும், 'ரிஸ்க் எடுக்க வேண்டாம். நான் உங்களை நிச்சயமாக அரையிறுதிக்கு அழைத்துச் செல்வேன்' என்று உறுதியளித்தார். இதை அணியின் கேப்டனாக என்னிடம் சொல்லவில்லை, ஒரு அண்ணனைப் போல கூறினார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சொன்னதைப் போலவே, குரோஷியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் விளையாடினார்.

பாகிஸ்தான் செல்வது குறித்து அஸ்வின்!
2023 ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானிற்கு வரவில்லை என்றால், 50 ஓவர் உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி மிரட்டும் வகையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். நாங்கள் அவர்களின் இடத்துக்குச் செல்ல மாட்டோம் என்று சொன்னால், அவர்களும் எங்கள் இடத்திற்கு வரமாட்டோம் என்று கூறுவார்கள். அதேபோல பாகிஸ்தானும் உலகக் கோப்பைக்கு வரமாட்டோம் என்று கூறியுள்ளது. இருப்பினும், அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் ஆசியக்கோப்பை இலங்கையில் நடந்தால் மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறியுள்ளார்.