சாதித்த இந்திய அணி!
ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. ஷெஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முதன்முறையாக இந்திய அணி, ஐசிசி- ன் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய டிடாஸ் சாது, சிறந்த வீரருக்கான விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடாலும் 22 ஜோக்கோவிச்சும் 22:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஜோகோவிச் மற்றும் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர்.
இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (4), 7-6 (5) என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் வெற்றியின் மூலமாக இவர், 22வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன் மூலம் ரஃபேல் நடால் சாதனையை (22 கிராண்ட்ஸ்லாம்) ஜோக்கோவிச் சமன் செய்துள்ளார்.

ஜோகோவிச்சும் கிராண்ட்ஸ்லாமும்!
டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னணி வீரராக வலம் வரும் ஜோக்கோவிச், இதுவரை 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மட்டும் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 7 முறையும், அமெரிக்க (US) ஓபன் டென்னிஸ் தொடரில் 3 முறையும், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 2 முறையும் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
விட்டதைப் பிடித்த ஜோகோவிச்!
கடந்த 2022 ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியிருந்தது. இதனால் பல நாடுகளில் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. ஜோக்கோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் விசா ரத்து செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட முடியாமல் போனது. ஆனால் இந்த 2023 டென்னிஸ் தொடரில் சிறப்பாக விளையாடி கிராண்டஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார், ஜோக்கோவிச்.

5 கோடி பரிசுத்தொகை!
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, "உலகக்கோப்பையின் வெற்றி இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் மதிப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்த அணிக்கும் சேர்த்து 5 கோடி ரூபாயை பரிசாக வழங்குகிறோம்." என்று அறிவித்துள்ளார்.