இந்திய அணியைச் சந்தித்த நீரஜ் சோப்ரா!
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இப்போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய அணி வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடினார் என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆலோசகர் மிதாலி ராஜ்!
இந்த ஆண்டு மார்ச் மாதம் பெண்களுக்கான பிரிமியர் லீக் ( WPL) தொடங்க உள்ளது. இதில் 5 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 9வது இடம்!
16 அணிகள் பங்கேற்று விளையாடி வரும், 15 -வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது, இந்திய அணி. ஆட்டத்தின் முடிவில், 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தத் தொடரில் இந்திய அணி 9 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வெற்றிக் கணக்கைத் தொடங்குமா இந்தியா?
இன்றிரவு, நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இதே நாளில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் டி20 போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில், சூப்பர் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ரோஹித் சர்மா, 2 சிக்ஸர்களை அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது, குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னையின் எப்.சியை வீழ்த்திய பெங்களூரு அணி!
11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணியும், பெங்களூரு அணியும் மோதியது. ஆட்டம் முழுவதுமே பெங்களூரு அணி, அதிரடியாகவும் ஆதிக்கம் செலுத்தியும் விளையாடி வந்தது. இறுதியில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.