சானியா மிர்சா - போபண்ணா சாதனை!
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா இணை 7-6, 6-7, 10-6 என்ற செட் கணக்கின் மூலம் நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது, இந்திய ஜோடி. இறுதிப்போட்டி வருகின்ற 28ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

பயிற்சியாளருக்கு பத்மஸ்ரீ!
கிரிக்கெட் பயிற்சியாளர் குர்சரண் சிங், டெல்லி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்ததற்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. 87 வயதான இவர், தன்னுடைய பயிற்சியின் மூலம் 12 சர்வதேச கிரிக்கெட் வீரர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளார். கீர்த்தி ஆசாத் முதல் அஜய் ஜடேஜா, மனிந்தர் சிங் மற்றும் முரளி கார்த்திக் உள்ளிட்ட முக்கியமான வீரர்களும் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
உலக அரங்கில் ஜொலிக்கும் இந்திய வீரர்கள்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வரும் 26 வயதான ரேணுகா சிங், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஐசிசி- ன் 2022 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். மறுபுறம், இந்திய ஆடவர் அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார்.
ஐபிஎல் சாதனையை முறியடித்த WPL
நேற்று நடைபெற்ற வுமன்ஸ் பிரிமியர் லீக் (WPL) தொடரின் அணிகளுக்கான ஏலத்தின்மொத்த மதிப்பு ரூபாய் 4669.99 கோடி என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்களுக்கான ஐபிஎல் சாதனையை WPL முறியடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த WPL தொடரின் முதல் சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

ஏலத்தில் முந்திய அதானி!
நேற்று நடைபெற்ற WPL தொடருக்கான ஏலத்தில் அதிகபட்சமாக அதானி ஸ்போர்ட்ஸ்லைன் நிறுவனம் அகமதாபாத் அணியை 1289 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இண்டியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பை அணியை 912.99 கோடி ரூபாய்க்கு வாங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், பெங்களூரு அணியை 901 கோடி ரூபாய்க்கும், JSW GMR கிரிக்கெட் நிறுவனம் டெல்லி அணியை 810 கோடி ரூபாய்க்கும் கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லக்னோ அணியை 757 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.