தனி ஒருவன் ரிஷப் பண்ட்!
தனது அபாரமான ஆட்டத்தால் 2022-ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியில் தேர்வாகியிருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ரிஷப் பண்ட். 2022ல் சிறப்பாக விளையாடிய பண்ட், 12 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்துள்ளார், இதில் இரண்டு சதமும், நான்கு அரை சதமும் அடங்கும். இதனிடையே கடந்த ஆண்டின் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய பண்ட், பலத்த காயமடைந்தார். இந்த விபத்தின் காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முத்துக்கள்:
நேற்று ஐசிசி வெளியிட்டுள்ள 2022 மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் பட்டியலில் ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மான் பிரீத் கௌர், ஸ்மிரித்தி மந்தனா, ரேனுகா சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதே போல் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று பேரும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்த தலா இருவரும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்வாகியுள்ளனர்.

தீராத அதிருப்தி!
கடந்த சில நாட்களாக விளையாட்டு வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். அரசு சார்பில் இது குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மல்யுத்த வீரர்களிடம் கலந்தாலோசிக்காமல் அமைப்பக்கப்பட்டதாக வீரர்கள் புகார் கூறிய நிலையில், அவர்களின் ஆலோசனை படியே ஐந்தில் மூன்று பேர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
லாராவை நினைவுபடுத்திய கில்!
இந்திய அணியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சுப்மன் கில், தன் சிறு வயது முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடினமாகப் பயிற்சி மேற்கொள்ளும் கில், தினமும் 500 முதல் 700 பந்துகள் வரை பயிற்சியில் விளையாடுவாராம், இதனால் அவரின் பேட்டில் குழி கூட விழுந்திருக்குமாம்! அவரின் திறமைகள் குறித்து விளக்கியுள்ள அவரின் பயிற்சியாளர் ஷுக்விந்தர் டிங்கு, அவரின் டைமிங் குறித்து மிகவும் புகழ்ந்துள்ளார். முதல் முறை கில்லை கண்டதும் அவரின் டைமிங்

பிரையன் லாராவை நினைவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். கில் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக கற்றுக்கொள்ளும் திறமை படைத்தவர். ஒரு முறை ஒன்றை கற்றுக்கொடுத்தால் அதை மீண்டும் அவருக்கு கற்றுத்தர தேவையில்லை எனப் புகழ்ந்துள்ளார் டிங்கு. கில்லின் இந்த வளர்ச்சியில் அவரின் தந்தை லக்விந்தருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பயிற்சி முடிந்து அனைவரும் சென்ற பின்னரும், 45 நிமிடங்கள் வரை தன் மகனுக்காகப் பந்துகளை வீசுவார் லக்விந்தர். விளையாட்டின் மீதுள்ள அவரின் நேர்மையும், அவர் தந்தையின் உந்துதலும் பெரும் பங்களிப்பை செய்துள்ளது. இவ்வாறு இன்று சதங்களாலும், இரட்டை சதங்களாலும் அணியின் வெற்றியில் முக்கிய அங்கம் வகிக்கும் சும்மன் கில் குறித்து அவரின் பயிற்சியாளர் டிங்கு மனம் திறந்துள்ளார்