தூக்கு தண்டனைக்கும் தயார்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் செயல்பட்டு வருபவர், 66 வயதான பிரிஜ் பூஷன் ஷரண் சிங். இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய பிரிஜ் பூஷன் ஷரண் சிங், "நான் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளவும், சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவும் தயாராக உள்ளேன். அவர்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். என் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனைக்கும் தயாராக உள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
மாஸ் காட்டிய ரொனால்டோ; வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி அணி:
சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் பி.எஸ்.ஜி அணிக்கும், அல் ஸ்டார் லெவன் அணிக்கும் இடையே நட்பு ரீதியான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கால்பந்தாட்டத்தின் தற்போதைய முன்னணி வீரர்களான மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஆகியோர் பி.எஸ்.ஜி அணியில் விளையாடினர். அல் ஸ்டார் லெவன் அணியில் ரொனால்டோ விளையாடினார். இந்தப் போட்டியில் PSG அணி, 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும், ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். பி.எஸ்.ஜி அணியின் எம்பாப்பே மற்றும் மெஸ்ஸி தலா ஒரு கோல் அடித்தனர்.

124 ஏக்கர் நிலத்தில் மெஸ்ஸியின் முகம்!
FIFA 2022 உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் விதமாக அர்ஜென்டினா விவசாயி ஒருவர், தன்னுடைய 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் லியோனல் மெஸ்ஸியின் முகத்தைப் போல சோளத்தை பயிரிட்டுள்ளார். வயலில் விதைகள் எங்கு நடப்பட வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அல்காரிதம் மூலம் விதைகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!
FIDE 2023 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் மே 1 வரை கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானாவில் நடைபெற உள்ளது. இந்த FIDE சாம்பியன்ஷிப் தொடரில், முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்தானாவில் நடைபெற உள்ள செஸ் சாம்பியன்ஷிப்-ன் பரிசுத் தொகை, 2 மில்லியன் டாலர்கள் ஆகும். இதில் 60% வெற்றி பெறுபவருக்கு பரிசாக வழங்கப்படும். மீதமுள்ள 40% இரண்டாம் இடத்தைப் பிடிப்பவருக்கும் வழங்கப்படும்.

ஹாக்கி உலகக்கோப்பையில் இந்திய அணி!
ஹாக்கி உலகக்கோப்பையில் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற முடியாமல் போனது. காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற எட்டு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றும், D குழுவில் இரண்டாவது இடத்திலேயே உள்ளது. இதையடுத்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், "இந்த வெற்றியால் நாங்கள் திருப்தி அடையவில்லை. இது எங்களின் சிறந்த ஆட்டம் அல்ல. ஆனால் நாங்கள் சிறப்பாகச் விளையாடியிருக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார். இந்திய அணி க்ராஸ் ஓவர் போட்டியில் ஆடவிருக்கிறது.