ஓய்வை அறிவித்தார் கம்ரான் அக்மல்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், அனைத்து வடிவிலான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அணியின் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள கம்ரான் அக்மல், பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தான் அணிக்காக 268 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் அக்மல். மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடிய இவர், தற்போது அந்த அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.

கில் - சிராஜ் பெயர்கள் பரிந்துரை:
ஐ.சி.சியின் 'Player of the Month' விருதுக்கு இந்திய அணியின் சுப்மன் கில், முகமத் சிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்திற்கான இந்த விருதுக்குச் சிறப்பாக விளையாடிய கில், சிராஜ் மற்றும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தகவல் வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்டார் கிறிஸ்டியன் அட்சூ:
கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சூ, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டார். செல்சீ, நியூ காசில் அணிக்காக விளையாடிய அவரை தற்போது இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள 'Ghana Football Association', காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அவருக்குத் தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது.
மகளிர் போட்டியைக் காணும் நேரம் அதிகரிப்பு:
பெண்களின் கால்பந்து போட்டிகளை ரசிகர்கள் ஊடகங்கள் வழி காணும் நேரம் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. Women's Sport Trust என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 2021ம் ஆண்டில் 3 மணி நேரம் 47 நிமிடங்களாக இருந்த பார்வை நேரம், 2022ல் 8 மணி நேரம் 44 நிமிடங்களாக உயர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சிலர் ஆண்கள் ஆடும் கால்பந்து போட்டிகளை விடப் பெண்களின் போட்டியை அதிகம் பார்த்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தில் சிக்கி கோல் கீப்பர் மறைவு:
துருக்கிய கோல் கீப்பரான அஹ்மத் யூப் துர்க்கஸ்லான், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவர் விளையாடிவந்த 'Yeni Malatyaspor Club' உறுதி செய்துள்ளது. அவரின் மறைவுக்கு சமூக வலைத்தள பக்கங்களில் பலரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.