அசன் குமாரைத் தக்கவைத்த தமிழ் தலைவாஸ்
புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணியை முதல் முறையாக பிளேஆஃப்ஸ்க்கு அழைத்து சென்ற அணியின் பயிற்சியாளர் அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமான பயிற்சியாளர் ஒருவர் தக்கவைக்கப்பட்டிருப்பதால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

குஜராத் ஜெயன்ட்ஸின் புதிய பயிற்சியாளர்!
புதிதாகத் தொடங்கவிருக்கும் மகளிர் பிரிமியர் லீகில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹேனஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய U19 அணியின் பயிற்சியாளர் நூஸின் அல் காதீர் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் Big Bash தொடரில் சிட்னி தன்டர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், கடந்த செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார்.

தரவரிசையில் முன்னேறிய இந்தியா!
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (International Boxing Association) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் 36,300 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அமெரிக்கா, கியூபா உள்ளிட்ட அணிகளைப் பின்னுக்குத் தள்ளியது. இந்தத் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் கஜகஸ்தான் (48,100), உஸ்பெகிஸ்தான் (37,600) அணிகள் உள்ளன.

நடுவராகத் திருநங்கை சாதனை
கேரளாவைச் சேர்ந்த திருநங்கையான அனாமிகா லியோ (29), மாநில அளவிலான குராஷ் போட்டியின் நடுவராகச் செயல்பட்டு சாதனை படைத்துள்ளார். குராஷ் வீராங்கனையான அனாமிகா லியோ, தேசிய அளவிலான போட்டிகளில் இரண்டு முறை கேரளாவுக்காக விளையாடியுள்ளார். இத்தகைய முயற்சியை மேற்கொண்டதற்காக கேரள குராஷ் சங்கத்தைப் பாராட்டியுள்ள அனாமிகா, இந்தியாவில் திருநங்கைகளுக்கு விளையாட்டில் தனி கொள்கை உருவாக்கப்பட்டால் தங்களின் சிரமங்களுக்குத் தீர்வு கிடைக்கும் எனக் கூறினார். இந்தியாவில் அதிகாரபூர்வ போட்டியில் ஒரு திருநங்கை நடுவராகச் செயல்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.