Published:Updated:

மைதானங்களில் அவதரிக்கும் இளம் கடவுள்கள்!

எம்மா ரடுகானு
பிரீமியம் ஸ்டோரி
எம்மா ரடுகானு

விளையாட்டு

மைதானங்களில் அவதரிக்கும் இளம் கடவுள்கள்!

விளையாட்டு

Published:Updated:
எம்மா ரடுகானு
பிரீமியம் ஸ்டோரி
எம்மா ரடுகானு

விளையாட்டு காலத்திற்குக் கட்டுப்பட்டது. கடவுளாகவே இருந்தாலும் ஒருகட்டத்தில் ஓரங்கட்டப்படுவார்கள்; ஓய்வெடுத்துவிடுவார்கள். வாழ்க்கையின் ஆறாம் எட்டுக்குள் நுழைவதற்கு முன்பே களத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களின் ஓய்வை கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களின் இடத்தை ஏதோவொரு வகையில் இன்னொருவர் நிரப்பிவிடுவார். மாரடோனாவுக்கு அடுத்து மெஸ்ஸி, சாம்ப்ரஸுக்குப் பிறகு ஃபெடரர், சச்சினின் இடத்தில் கோலி என ஒவ்வொரு மகத்தான வீரருக்கும் சரியான மாற்றை அடுத்த தலைமுறை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. என்னதான் ஸ்டார் பிளேயர்களின் ஓய்வுக்கு நாம் பழகியிருந்தாலும், இந்தக் காலகட்டம் நமக்கு மிகவும் புதிதாக இருக்கப்போகிறது!

மைதானங்களில் அவதரிக்கும் இளம் கடவுள்கள்!

அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு ஜாம்பவான்கள் தங்கள் ஃபார்மை இழப்பதையும் ஓய்வு பெறப்போவதையும் பார்க்கப்போகிறோம். மெஸ்ஸி, ரொனால்டோ, நடால், ஃபெடரர், ஹாமில்டன், மிதாலி ராஜ் போன்றவர்கள் ஒரே காலகட்டத்தில் ஓய்வை நோக்கிப் போகக்கூடும். அவர்கள் விடைபெற்ற பின் அவர்களின் இடங்களை நிரப்பப்போகும் இளம் ஸ்டார்கள் யார் யார்? இதோ அந்தப் பட்டியல்...

மைதானங்களில் அவதரிக்கும் இளம் கடவுள்கள்!

கிலியன் எம்பாப்பே - கால்பந்து

உலகின் இரண்டாவது காஸ்ட்லி வீரர், பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே 180 மில்லியன் யூரோ கொடுத்து இவரை வாங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி. இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய். இத்தனைக்கும் அப்போது அவருக்கு வயது 18 தான். இதுவே இவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லும். 2018 ஃபிஃபா உலகக் கோப்பையில், பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கினார் எம்பாப்பே. பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்குப் பிறகு, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கோலடித்த டீனேஜர் என்ற சாதனையையும் படைத்தார். அந்த உலகக் கோப்பையின் சிறந்த இளம் வீரர் விருதையும் வென்றார்.

ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது முப்பது கோல்களாவது அடிக்கிறார். இப்போது மெஸ்ஸியோடு இணைந்து விளையாடிவரும் எம்பாப்பேவை வைத்துத்தான், ரொனால்டோ விட்டுச்சென்ற இடத்தை நிரப்பத் திட்டமிடுகிறது ரியல் மாட்ரிட்.

மைதானங்களில் அவதரிக்கும் இளம் கடவுள்கள்!

சென் யூஃபி - பேட்மின்டன்

ஒரு காலத்தில் பேட்மின்டன் என்றால் சீனாதான். ஆனால், சாய்னா நேவால், பி.வி.சிந்து, கரோலினா மரின், நசோமி ஒகுஹாரா போன்றவர்களின் எழுச்சிக்குப் பிறகு, பெண்கள் பிரிவில் சீனா பலவீனமடைந்தது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தச் சீன வீராங்கனையும் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லவில்லை. 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம்கூடக் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வந்திருக்கிறார் சென் யூஃபி.

5 ஆண்டுகளாகவே சீனியர் அரங்கில் பட்டையைக் கிளப்புகிறார் யூஃபி. 2019-ல் உலகின் நம்பர் 1 அரியணை ஏறியவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தன் மிஷனை நிறைவேற்றியிருக்கிறார். இப்போதுதான் இவருக்கு 23 வயது. அடுத்த ஏழெட்டு ஆண்டுகளில் பேட்மின்டன் ஜாம்பவனாக நிச்சயம் உருவெடுப்பார்.

டேனி மெத்வதேவ் - டென்னிஸ்

ஃபெடரர், நடால் ஓய்ந்துவிட்டார்கள். நடால் பிரெஞ்சு ஓப்பனிலேயே தோற்றுவிட்டார். ஜோகோவிச்சும் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவியிருக்கிறார். இந்த மும்மூர்த்திகளும் ஓய்வை நோக்கிச் சென்றாலும், அவர்களைப் போல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஓர் ஆள் வருவாரா என்ற கேள்வி ஒவ்வொரு டென்னிஸ் ரசிகருக்குள்ளும் இருந்துகொண்டேதான் இருந்தது. டொமினிக் தீம், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், டேனி மெத்வதேவ், சிட்ஸிபாஸ் என்று பல இளைஞர்கள் வந்திருந்தாலும் யாரும் பெரிய அளவில் நம்பிக்கை தரவில்லை. முன்புபோல் டென்னிஸ் இருக்காதோ என்ற ஏக்கம் இருந்தது. ஆனால், தன் சமீபகால ஃபார்ம் மூலம் அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார் மெத்வதேவ்.

2021 அமெரிக்க ஓப்பன் இறுதிப் போட்டி ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. 21-வது கிராண்ட் ஸ்லாமை நோக்கிப் பயணித்த ஜோகோவிச்சை, இறுதிப் போட்டியில் தோற்கடித்துத் தன் முதல் கிராண்ட் ஸ்லாமை வென்றிருக்கிறார் மெத்வதேவ். வெல்வது பெரிய விஷயமில்லை. ஆனால், ஜோகோவிச்சை வீழ்த்துவது? அதுவும் நேர் செட்களில் வீழ்த்துவது? யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு விஷயத்தை, நினைத்துப் பார்க்காத வகையில் செய்து முடித்திருக்கிறார் இந்த 25 வயது ரஷ்ய வீரர். 20 கிராண்ட் ஸ்லாம்கள் வென்றிருக்கும் அந்த 3 ஜாம்பவான்களும், வரலாற்றுச் சிறப்புமிக்க 21-வது பட்டத்தை வெல்லவேண்டுமெனில், மெத்வதேவைத் தாண்டித்தான் இனி போகவேண்டும்.

டேனி மெத்வதேவ் - ரிசப் பன்ட்
டேனி மெத்வதேவ் - ரிசப் பன்ட்

ரிசப் பன்ட் - இந்தியா

இன்று கோலி, ரோஹித், வில்லியம்சன் போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அடுத்த 2-3 ஆண்டுகளில் அவர்கள் ஓய்ந்துவிடுவார்கள். அப்போது அடுத்த தலைமுறையை ஈர்க்கும் ஒரு கிரிக்கெட்டர் இந்த விளையாட்டுக்குத் தேவைப்படுவார். சச்சின், தோனி, கோலி என எப்போதும் அப்படியொரு இந்தியர் உலக அரங்கில் கோலோச்சியிருக்கிறார். அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தை நிச்சயம் ரிசப் பன்ட் நிரப்புவார். 17 வயதிலேயே தன் அட்டகாசத் திறமையால், கிரிக்கெட் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார், சச்சினைப் போல்! விக்கெட் கீப்பர், பேட்டர், ஹிட்டர், மேட்ச் வின்னர், கேப்டன் என்று பல்வேறு பாக்ஸ்களை டிக் செய்கிறார், தோனியைப் போல்! இப்போதுதான் 23 வயது. ஆனால், மிகப்பெரிய மார்க்கெட்டிங் வேல்யூ கொண்டிருக்கிறார், கோலியைப் போல்! இதற்குமேல் என்ன வேண்டும்?

இன்னும் முழுமையான வீரர் இல்லை. நிறைய குறைகள் இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொன்றையும் சரிசெய்து கொண்டிருக்கிறார். பக்குவப்பட்டிருக்கிறார். இன்னும் 10 ஆண்டுகளுக்கு நிச்சயம் இந்திய கிரிக்கெட்டின், உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வருவார் ரிசப் பன்ட்.

மேக்ஸ் வெர்ஸ்டப்பன் - ஃபார்முலா ஒன்

மிகவும் ஆபத்தான ஃபார்முலா ஒன் பந்தயத்தில், 24 வயது வீரர் பங்கேற்கிறார் என்பது ஆச்சர்யமில்லை. ஆனால், அவருக்கு இந்தப் பந்தயத்தில் ஏழு ஆண்டுகள் அனுபவம் என்றால்! ஆம், 17 வயதிலிருந்து டிராக்கில் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். 18 வயதில் முதல் ரேஸை வென்று, `இளம் வயதில் கிராண்ட் ப்ரீ வென்றவர்' என்ற சாதனை படைத்தார் இந்த நெதர்லாந்து வீரர். குறைந்தபட்சம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு இவர் கொடி உயரப் பறக்கும்.

இன்னும் சில வாரங்களில், ஃபார்முலா ஒன் ரேஸின் ஆல் டைம் கிரேட் லூயிஸ் ஹாமில்டனின் பதக்க வேட்டைக்கு மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முற்றுப்புள்ளி வைக்கலாம். 2021 சீசனில் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பு சாம்பியன் ஹாமில்டனை வீழ்த்த முழு அக்ரஷனோடு சீறுகிறார் மேக்ஸ். இவரும் ஃபார்முலா ஒன் பந்தயத்தின் GOAT ஆவதற்கு அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன.

மேக்ஸ் வெர்ஸ்டப்பன் -  ஷஃபாலி வெர்மா
மேக்ஸ் வெர்ஸ்டப்பன் - ஷஃபாலி வெர்மா

ஷஃபாலி வெர்மா - கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்டில் அடுத்த 15 ஆண்டுகளுக்குக்கூட இவர் பெயரை நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 17 வயதுதான். ஆனால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் அசைக்க முடியாத ஒருவராய் மாறியிருக்கிறார், இந்த இளம் வீராங்கனை. 21-ம் நூற்றாண்டின் ஹரியான ஹரிகேன் என்றுகூட இவரைச் சொல்லலாம்.

இந்திய மகளிர் அணி சில ஆண்டுகளாக முன்னேறி வந்தாலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் போல அதிரடி பேட்டர்களுக்குப் பற்றாக்குறை இருந்தது. இப்போது அந்தப் பிரச்னை இல்லை. எந்த அணிக்கும், எந்த பௌலருக்கும், எந்த ஆடுகளத்துக்கும் அஞ்சாத பேட்டராக உருவெடுத்திருக்கிறார் ஷஃபாலி. கடந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் இவர் ஆடிய ஆட்டம் கண்டு கிரிக்கெட் உலகமே மிரண்டது. படபடவென டி-20 பேட்டர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்துக்கும் முன்னேறினார். மிதாலி ராஜ் எப்படி மகளிர் கிரிக்கெட்டின் முகமாக இருந்தாரோ, இருக்கிறாரோ, அதுபோல் இனி ஷஃபாலி இருப்பார்.

நயோமி ஒசாகா - டென்னிஸ்

டென்னிஸ் உலகில், செரீனா வில்லியம்ஸ் விட்டுச் செல்லும் இடத்துக்குச் சொந்தக்காரி. அதில் சந்தேகமே இல்லை. செரீனாவுக்குப் பிறகு எந்தவொரு வீராங்கனையும் தொடர்ந்து கிராண்ட் ஸ்லாம் தொடர்கள் ஜெயிக்கவில்லை. ஓரிரு தொடர்களில் வென்றுவிட்டு அப்படியே அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், 23 வயது ஒசாகா இப்போதே 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுவிட்டார்.

மைதானத்துக்கு வெளியேவும் செரீனாவைப் போன்ற ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார் ஒசாகா. உளவியல் காரணங்களுக்காக பிரெஞ்சு ஓப்பன் போன்ற பெரும் தொடரிலிருந்து விலகியவர், மனநலனின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். `Black Lives Matter' போராட்டம் நடந்தபோது, தயக்கமே இல்லாமல் அதற்கு டென்னிஸ் அரங்கிலேயே குரல் கொடுத்தார். ஒலிம்பிக் தீபத்தை ஏற்கும் பெரும் கௌரவத்தையும் பெற்ற ஒசாகா, இன்றைய விளையாட்டு உலகின் சிறந்த ரோல் மாடல்!

நயோமி ஒசாகா - ஃபேன் ஜென்டாங்
நயோமி ஒசாகா - ஃபேன் ஜென்டாங்

ஃபேன் ஜென்டாங் - டேபிள் டென்னிஸ்

இரண்டு ஒலிம்பிக் தங்கங்கள், 3 உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் வென்ற டேபிள் டென்னிஸ் உலகின் சர்வாதிகாரி மா லாங் இடத்துக்கு மிகச் சரியான வாரிசு, ஃபேன் ஜென்டாங். 24 வயது ஜென்டாங், டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெள்ளி வென்று அசத்தினார். ஒற்றையர் இறுதிப் போட்டியில் மா லாங் உடன் இவர் நடத்திய போராட்டம் காலத்துக்கும் பேசப்படும். ஆனால், இனி அடுத்த சில ஆண்டுகளுக்கு டேபிள் டென்னிஸ் உலகம் இவர் பெயரைத்தான் பேசும்.

17 வயதிலேயே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தன் திறமையைக் காட்டியவர் ஜென்டாங். அதிரடி கேம் மூலம் எந்த எதிராளிகளுக்கும் டஃப் கொடுக்கும் இவர், இளம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார். சீன சமூக வலைதளமான வெய்போவில் நாளுக்கு நாள் இவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை கூடுகிறது. பாரிஸ், லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் தொடர்களில் இவரைத் தோற்கடிக்க ஒருவர் பிறந்து வரவேண்டும்.

எர்லிங் ஹாலண்ட் - கால்பந்து

ஒட்டுமொத்தக் கால்பந்து உலகமும் இந்த 21 வயது நார்வே வீரரை வாங்க மோதிக்கொண்டிருக்கிறது. கோல்களாக அடித்துத் தள்ளுகிறார் ஹாலண்ட். அவர் வேகம், ஃபினிஷிங் எல்லாம் உலகத் தரம். பொருஷியா டார்ட்மண்ட் அணிக்காக ஆடிவரும் ஹாலண்ட், புண்டஸ்லிகா, சாம்பியன்ஸ் லீக் போன்ற பெரிய தொடர்களில் கோல் ரெக்கார்டுகளை உடைத்துக்கொண்டிருக்கிறார். 2020-21 சாம்பியன்ஸ் லீக் சீசனின் சிறந்த ஃபார்வேர்ட் விருதையும் வாங்கியிருக்கிறார்.

மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரியைப் போல் எம்பாப்பே - ஹாலண்ட் யுத்தம்தான் இனி கால்பந்து உலகின் பேசுபொருளாக இருக்கும். இருவரும் நட்பு பாராட்டுவதால், ஆரோக்கியமான போட்டியாகவே அது இருக்கும். இந்தியா போன்ற கால்பந்து பிரபலமாகாத நாடுகளிலும் இனி ஹாலண்டின் ஜெர்ஸி அணிந்து பையன்கள் கால்பந்து விளையாடுவார்கள்.

எர்லிங் ஹாலண்ட் - எம்மா ரடுகானு
எர்லிங் ஹாலண்ட் - எம்மா ரடுகானு

எம்மா ரடுகானு - டென்னிஸ்

3 மாதங்களுக்கு முன்பு வரை இவரைப் பெரும்பாலான விளையாட்டு ரசிகர்களுக்குத் தெரியாது. ஆனால், இன்று ஒரு கிராண்ட் ஸ்லாம் வின்னர். இந்த இளம் இங்கிலாந்து வீராங்கனை, யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க ஓப்பன் பட்டம் வென்றார். 18 வயது எம்மா. `தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர்' என்ற சாதனையும் படைத்தார்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற பின் எம்மா கொடுத்த ஆச்சர்ய ரியாக்‌ஷன் இணையத்தில் செம வைரல். இன்னும் அந்தக் குழந்தைத்தனம் ததும்புவதால், சிறுமிகளுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. இன்னும் பல ஆண்டுகள் டென்னிஸில் கோலோச்ச முடியும் என்பதால், எம்மா உலகின் முதல் பில்லியன் டாலர் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுப்பார்.