Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!

ஒலிம்பிக் 2020
பிரீமியம் ஸ்டோரி
ஒலிம்பிக் 2020

#Motivation

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!

#Motivation

Published:Updated:
ஒலிம்பிக் 2020
பிரீமியம் ஸ்டோரி
ஒலிம்பிக் 2020

1896... முதன்முதலில் மார்டன் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றபோது அதன் நிறுவனர் பியர் டெ குபெர்ட்டன், இதற்குப் பெண்கள் பொருத்தமற்றவர்கள் என்று கூறி அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. பார்வையாளர் களாகக்கூட பெண்கள் இடம்பெறவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!
David J. Phillip

2021... கோவிட்-19 சூழலால் சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பிறகு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடந்து முடிந்த ஒலிம்பிக் திருவிழா, தலையெழுத்தைத் திருத்தி எழுதியிருக்கிறது. 113 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற அமெரிக்காவில் 66 பதக்கங்களைப் பெண்கள் பெற்றுள்ளனர். ஆண்கள் பெற்றவை 41 மட்டுமே. இரண்டாம் இடம் பிடித்த சீனாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களில் 281 பேர் பெண்கள். ஆண்கள் 125. பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் மூன்று பதக்கங்களை உறுதி செய்தவர்களும் பெண்களே. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020-ல் கவனம் ஈர்த்த தேவதைகளைப் பற்றிய பெருமைமிகு தொகுப்பு இதோ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!
Luca Bruno

மீராபாய் சானு

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்து இந்தியாவின் கவுன்ட்டை தொடங்கி வைத்தவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு. வீட்டில் ஆறாவது குழந்தை யாகப் பிறந்த இவர், காட்டிலிருந்து விறகுகளை வெட்டிக்கொண்டு வரும்போது தன் அண்ணன்களைவிட அதிக விறகுகளைச் சுமந்து வருவாராம். இந்தத் திறமை தான் பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கான அடித்தளம். கடந்த ஒலிம்பிக் போட்டியில் மாபெரும் தோல்வி. ஓராண்டுப் பயிற்சிக்கு ஒரு வாரம் மட்டுமே ஓய்வு என நான்கு ஆண்டுகள் தீவிர பயிற்சி. விளைவு, சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டெழுந்து பதக்கம் பெற்று வந்திருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!
Themba Hadebe

லவ்லினா போர்கோஹெய்ன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம், அம்மாவின் சிறுநீரகச் செயலிழப்பு என மிகவும் நெருக்கடியான சூழலில் களம் கண்டார் அஸ்ஸாமைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹெய்ன். சிறுவயதில் செய்தித்தாளில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி பற்றிய செய்திகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். மைக் டைசனின் ரசிகையான லவ்லினாவின் அம்மா, முகமது அலியின் கதைகளைக் கூற, அங்கிருந்து தொடங்கியது அவரது பயிற்சியும் முயற்சியும். வால்டர் வெயிட் பிரிவில் களம்கண்ட லவ்லினா, தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். தனது மாநிலத்துக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைக் கொண்டு வந்தவரைக் கொண்டாடியது அஸ்ஸாம் மாநிலம்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!

வந்தனா கட்டாரியா

மகளிர் ஹாக்கியின் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மக்களின் மனங்களை வென்றது நமது இந்திய அணிதான். நாடே மகளிர் அணியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அதே நேரத்தில், ‘ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அதிகம் இருந்ததால்தான் ஹாக்கி அணி தோல்வியைத் தழுவியது’ என வந்தனாவின் வீட்டின் முன்பு ஒரு கும்பல் கூச்சலிட்டுத் தாக்குதல் நடத்தியது. வந்தனாவின் ஆட்டம்தான் இந்தியாவை காலிறுதிக்கே முன்னேற்றியது. வேற்றுமை, பிரிவினைவாதங்களுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு. வந்தனாக்களை வரவேற்போம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!

அதிதி அசோக்

உடன் விளையாடியவர்கள் உலக அளவில் டாப் லெவல் வீரர்கள். ஆனாலும், சிங்கங்களின் கர்ஜனைக்கு மிரளாமல் தன் பெயரை நிலைநாட்டி, இந்தியாவின் ரசனைக்கு கோல்ஃபையும் அறிமுகப்படுத்தியவர் அதிதி அசோக். போட்டியின் நடுவே சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யலாம் என வானிலை அறிவிப்பு. இதனால் அடுத்த ரவுண்டு ரத்து செய்யப்படலாம் என்ற நிலை. அப்படியானால், அப்போது இரண்டாவது இடத்திலிருந்த அதிதிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கலாம். அவரிடம் பேட்டி காண்கிறார்கள். “கோல்ஃப் என்றால் 4 ரவுண்டுகள், 72 குழிகள் விளையாட வேண்டும். ஒரு வேளை கடைசி ரவுண்டில் நான் முதலிடத்துக்கும் முன்னேறலாம். இத்தனை ரவுண்டுகள் கஷ்டப்பட்டு விளையாடிய அனைவருக்கும் நியாயமான ஸ்கோர் கிடைக்க வேண்டும்” என நேர்மையை வெளிப்படுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!
Dita Alangkara

பி.வி.சிந்து

கடந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கத் தைக் கைப்பற்றிய பி.வி.சிந்துவுக்கு இம்முறை வெண்கலம். பயிற்சியாளர் கோபிசந்துடன் பிரச்னை, புதிய கொரிய பயிற்சியாளர் எனப் பல குழப்பங்களுடன் களம் கண்டார். அரையிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வி. அடுத்த 24 மணி நேரத்துக்குள் ‘கம் பேக்’ கொடுத்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். திறமையால் மட்டுமல்ல... போட்டிக் களத்தில் அழுத்தம், எதிர்பார்ப்புகள், பதற்றம் ஆகியவற்றைக் சிறப்பாகக் கையாளும் திறனும் வெற்றியைக் கொடுக்கும் என நிரூபித்திருக்கிறார் சிந்து.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!

பவானி தேவி

வாள்வீச்சு விளையாட்டில் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவிக்கு, இரண்டாம் சுற்றிலேயே தோல்வி. ‘உங்கள் பங்களிப்பைக் கண்டு இந்த தேசம் பெருமை கொள்கிறது’ என ட்விட்டரில் பாராட்டினார் பிரதமர் மோடி. “இந்தத் தோல்வியை யாரும் ஞாபகப்படுத்தாதீங்க. அடுத்த ஒலிம்பிக்குக்குத் தயாராகப் போறேன்”! என்ற வார்த்தைகளே பவானி தேவியின் மன உறுதிக்குச் சான்று.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - தேவதைகளின் திருவிழா!

டேக் அவே!

38 வயதிலும் களம் கண்ட மேரி கோம், உடலின் அமைப்பைக் காட்டும் பிகினி உடைகளை அணிய மறுத்த ஜெர்மன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், ‘என் மனது சொல்வதை உடல் கேட்கவில்லை. மனநலத்தில் கவனம் செலுத்தப்போகிறேன்’ என இறுதிப் போட்டியி லிருந்து விலகிய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், ‘என் பதக்கத்தை நான் சார்ந்த LGBTQ சமூகத்தினருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய இந்தப் போராட்டம் எங்கள் சமூகத்தினரின் உரிமைகளுக்காகவும்தான்’ என முழங்கிய பிலிப்பைன்ஸின் நெஸ்டி பெட்டிஷியோ... என டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தேவதைகளின் முடிவுகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை.

பதக்கம் மட்டுமல்ல, ஒலிம்பிக் வரை முன்னேறியதும்கூட ஒரு சாதனையே... அந்த வகையில், பதக்கங்களை வென்றவர்கள், பதக்கத்துக்காகப் போராடியவர்கள் என இந்தியாவின் அனைத்து வீராங்கனைகளுக்கும் நம்முடைய ராயல் சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism