Published:Updated:

AbuDhabi Grand Prix: 2021-ன் சாம்பியன் வெர்ஸ்ட்டப்பன் தானா?

அபு தாபி கிராண்ட் ப்ரீ
News
அபு தாபி கிராண்ட் ப்ரீ

இது முழுவதுமாக வெர்ஸ்ட்ப்பனின் போராட்டத்தினால் மட்டுமே கிடைத்த வெற்றி அல்ல. லட்டீஃபி தான் வெர்ஸ்ட்டப்பனை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

'வாழ்த்துக்கள் வெர்ஸ்ட்டப்பன். F1 உலகின் புதிய சாம்பியன். ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஹாமில்ட்டனை வீழ்த்தி F1 உலக சாம்பியன் என்ற அரியணையில் ஏறி அமர்கிறார் வெர்ஸ்ட்டப்பன்.'

ஒரு வேளை வெர்ஸ்ட்ப்பன் அபு தாபி கிராண்ட் ப்ரீயை (Abu Dhabi Grand Prix) வெற்றி பெரும் பட்சத்தில் இவ்வாறெல்லாம் எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். இன்று வெர்ஸ்ட்ப்பன் வென்று விட்டார். எனினும், மேற்கூறிய வரிகளை முழுமனதுடன் என்னால் எழுத முடியவில்லை. வெர்ஸ்ட்டப்பன் வெற்றி பெற்று விட்டார்தான். ஆனால், இது முழுவதுமாக வெர்ஸ்ட்ப்பனின் போராட்டத்தினால் மட்டுமே கிடைத்த வெற்றி அல்ல. லட்டீஃபி தான் வெர்ஸ்ட்டப்பனை வெற்றி பெற வைத்திருக்கிறார். இந்த வாக்கியத்திற்காக விமர்சனங்கள் எழலாம், ஆனால் உண்மை அது தான்.

புதிய F1 சாம்பியன் வெர்ஸ்ட்டப்பன்
புதிய F1 சாம்பியன் வெர்ஸ்ட்டப்பன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெர்ஸ்ட்டப்பன் சிறந்த ரேஸர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இது ஹாமில்ட்டனின் வெற்றி. கிட்டத்தட்ட 55 லேப்கள் தனியாக வெர்ஸ்ட்டப்பன் மற்றும் பெரஸை போட்டியிட்டு ஹாமில்ட்டன் பெறவேண்டிய வெற்றி. 54-வது லேப்பில் வில்லியம்ஸ் அணியின் லட்டீஃபி விபத்துக்குள்ளானது. அடுத்த லேப்பிலேயே சேஃப்டி கார் வெளியாக, அந்த கேப்பில் இலவச பிட் ஸ்டாப் எடுத்து ஹார்டு டயரில் இருந்து சாப்ட் டயருக்கு மாறினார் வெர்ஸ்ட்டப்பன். அந்த நேரத்தில் வெர்ஸ்ட்டப்பனுக்கு முன்னால் சென்ற போட்டியாளர்களை ஃப்ரீயாக ஓவர்டேக் செய்யும் வாய்ப்பை வெர்ஸ்ட்ப்பனுக்கு வழங்கியது F1 நிர்வாகம். 57 லேப்கள் வரை சேஃப்டி கார் தொடர்ந்த நிலையில் 58-வது லேப் மட்டும் போட்டியாளர்கள் போட்டியிட அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே 38 லேப்கள் ஓடிய ஹார்டு டயர்களோடு ஹாமில்ட்டன் போட்டியிட்டுக் கொண்டிருக்க, புதிய சாப்ட் டயர்களுடன் இருக்கும் வெர்ஸ்ட்டப்பன் ஹாமில்ட்டனை முந்தியதில் வியப்பேதும் இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படி வைத்துக் கொள்வோம்... 54-வது லேப்பில் லட்டீஃபி விபத்துக்குள்ளாகவில்லையெனில். அடுத்த நான்கரை நிமிடங்களில் குறைந்தபட்சம் 9 நொடிகள் வித்தியாசத்தில் வெர்ஸ்ட்டப்பனை வீழ்த்தி தனது 8-வது சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பார் ஹாமில்ட்டன். ஹாமில்ட்டனின் 2 மணி நேரப் போராட்டத்தை சட்டை செய்யாமல் கடைசி ஒரு லேப்பில் வெர்ஸ்ட்டப்ன் காட்டிய வேகத்தை மட்டும் வைத்து அவர் தான் சாம்பியன் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. வெர்ஸ்ட்டப்பன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 48-வது லேப்பில் இருக்கும் போது அவருக்கும், ஹாமில்ட்டனுக்குமான இடைவெளி 13 நொடிகள் இருந்தது. அடுத்த 10 லேப்பில் தன்னுடைய முழு வேகத்தையும் காட்டி தன்னுடைய முழுத்திறனால் ஹாமில்ட்டனை வென்றிருந்தால் இன்று அவ்வளவு மகிழ்ச்சியுடன் புதிய சாம்பியனை நாம் வரவேற்றிருக்கலாம்.

வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டன்
வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டன்

கிராண்ட் ப்ரீ:

போட்டியின் தொடக்கத்திலேயே ஹாமில்ட்டனிடம் போட்டியை கோட்டை விட்டு விட்டார் வெர்ஸ்ட்ப்பன். போட்டிய தொடங்கிய சில நொடிகளிலேயே வெர்ஸ்ட்ப்பனை ஓவர்டேக் செய்து முதலிடத்தைப் பிடித்து விட்டார் ஹாமில்ட்டன். அந்த இடத்தில் இருந்த ஹாமில்ட்டன் வெர்ஸ்ட்ப்பனை வென்றுவிட்டார், அவரால் ஹாமில்ட்டனை பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு லேப்பிலும் இருவருக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. சாப்ட் டயரிலேயே போட்டி தொடங்கியிருந்ததால் 13-வது லேப்பிலேயே பிட் எடுக்க வேண்டிய சூழ்நிலை வெர்ஸ்ட்டப்பனுக்கு. வெர்ஸ்ட்டப்பன் பிட் எடுத்த உடனே அடுத்த லேப்பிலேயே தானும் பிட் எடுத்து மீடியம் டயரில் இருந்து ஹார்டு டயருக்கு மாறினார் ஹாமில்ட்டன். இவர்கள் இருவரும் பிட் எடுத்த நேரத்தில் பெரஸ் முதலிடத்தைக் கைப்பற்றினார். பிட்டை விட்டு வெளியேறியே போது 2-ஆம் இடத்தில் இருந்த ஹாமில்ட்டனுக்கும், 3-ஆம் இடத்தில் இருந்த வெர்ஸ்ட்டபப்பனுக்கும் 7 நொடிகள் இடைவெளி இருந்து. புதிய டயர்களுக்கு மாறிய பிறகும் ஹாமில்ட்டனின் வேகத்துக்கு வெர்ஸ்ட்டபனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலிடைத்த இருக்கும் பெரஸை ஓவர்டேக் செய்ய விரைந்து கொண்டிருந்தார் ஹாமில்ட்டன். ஆனால், 18-வது லேப்பில் இருந்து 20-வது லேப் வரை ஹாமில்ட்டனை மிகச்சிறப்பாக டிஃபண்ட் செய்தார் பெரஸ். ஏற்கனவே 22 லேப்கள் ஓடிய சாப்ட் டயர்களோடு, புதிய ஹார்டு டயர்களுடன் இருந்த ஹாமில்ட்டனை பெரஸ் டிஃபண்ட் செய்த விதம் சிறப்பு. பெரஸின் டிஃபண்ஸால் ஹாமில்ட்டனுக்கும், வெர்ஸ்ட்டப்பனுக்குமான இடைவெளி 1.2 நொடிகள் என்ற அளவுக்குக் குறைந்தது. பெரஸை ஹாமில்ட்டன் ஓவர்டேக் செய்த பிறகு தான் புதிய ஹார்டு டயர்களுக்காக பிட் எடுத்தார் பெரஸ். ஆனால், அதன் பிறகும் அந்த லீடை வெர்ஸ்ட்டப்பனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கி 10 நொடிகள் வரை சென்றது. இடையே 40-வது லேப்பில் விர்ச்சுவல் சேஃப்டி கார் காட்டப்பட, அந்த லேப்பிலே பிட் எடுத்து ஏற்கனவே இருந்த ஹார்டு டயர்களில் இருந்து புதிய ஹார்டு டயர்களுக்கு மாறினார் வெர்ஸ்ட்டப்பன். விர்ச்சுவல் சேஃப்டி கார் முடிந்த பிறகு இருவருக்குமான இடைவெளி 18 நொடிகள் வரை இருந்தது.

அபு தாபி கிராண்ட் ப்ரீ | Abu Dhabi Grand Prix
அபு தாபி கிராண்ட் ப்ரீ | Abu Dhabi Grand Prix

புதிய ஹார்டு டயர்களுடன் வெர்ஸ்ட்டப்பன், கிட்டத்தட்ட 30 லேப்கள் ஓடிய ஹார்டு டயர்களுடன் ஹாமில்ட்டன் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். மேற்கூறிய படி 54-வது லேப்பில் சேஃப்டி கார் வெளியாவதற்கு முன்பு வரை இருவருக்குமான இடைவெளி 11 நொடிகள் இருந்தது. அதன்பிறகு தான், சேஃப்டி கார் வெளியேற, வெர்ஸ்ட்டப்பன் சாப்ட் டயருக்கு மாற, ஃப்ரீயாக மூன்று ஓவர்டேக்குகள் கிடைக்க தன் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்கிறார் வெர்ஸ்ட்டப்பன்.

இதில் வெர்ஸ்ட்டப்பனின் தவறு எதுவும் இல்லை. முழுவதுமாக விதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் வெர்ஸ்ட்டப்பன் ரேஸ் செய்தார். ஆனால், இது சரியான முடிவு தான் என்றால், தங்கள் விதிகளை F1 நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. ஒருவருடைய முயற்சிகளுக்கான பலன் இன்றி, ஒருவருடைய போராட்டங்களுக்கான மரியாதை இன்றி வேறு ஒருவருடைய தவறால் அல்லது அலட்சியத்தால் அவருடைய வெற்றி அவரிடமிருந்து பறிக்கப்படுமாயின் அது எவ்வாறு சரியான விதியாக இருக்க முடியும்.

இன்று வெர்ஸ்ட்டப்பன் சாம்பியானாக முடிசூட்டிக் கொள்ளலாம். ஆனால், இந்த பட்டம் யாருக்குச் சொந்தமானது என்பதை அவரவருடைய கருத்துக்கே விட்டுவிடுகிறோம்.

F1 நிர்வாகத்தின் விதிகளில் இருக்கும் ஓட்டைகளால் வெர்ஸ்ட்டப்பனின் ஒரு வருடப் போராட்டத்தையும் நம்மால் மறந்துவிட முடியாது. எனவே, வாழ்த்துக்கள் வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டன். நீங்கள் இருவருமே சாம்பியன்கள் தான்.