Published:Updated:

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தனலட்சுமி... யார் இந்த தடகள சென்சேஷன்?!

Dhanalakshmi
News
Dhanalakshmi

நேற்று நடந்த 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்திருக்கிறார்.

Published:Updated:

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தனலட்சுமி... யார் இந்த தடகள சென்சேஷன்?!

நேற்று நடந்த 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்திருக்கிறார்.

Dhanalakshmi
News
Dhanalakshmi

தனலட்சுமி... இந்திய தடகள வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பெயர் இது. பாட்டியாலாவில் நடந்துகொண்டிருக்கும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தன் அட்டகாசமான செயல்பாட்டால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார் இந்தத் தமிழக பெண். முதலில், 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த், ஹீமா தாஸ் போன்ற முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய அவர், இப்போது 200 மீட்டர் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

Dhanalakshmi with coach Manikandan
Dhanalakshmi with coach Manikandan

24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை பாட்டியாலாவில் நடந்துவருகிறது. சில தினங்களுக்கு முன் நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து தலைப்புச் செய்தி ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி. காரணம், இறுதிப் போட்டியில் டூட்டி சந்த், ஹிமா தாஸ் என இந்தியா கொண்டாடிய இரு தடகள வீராங்கனைகளையும் அவர் வீழ்த்தியிருந்தார். False start காரணமாக ஹிமா தாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட, டூட்டி சந்தை விட 0.20 நொடிகள் முன்பாகவே பந்தயத் தூரத்தைக் கடந்து (11.39 நொடிகள்) முதலிடம் பிடித்தார் அவர். டூட்டி சந்த் இரண்டாவது இடமே பிடித்தார்.

இந்த ஆரவாரம் அடங்குவதற்குள்ளாகவே இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்திருக்கிறார் தனலட்சுமி. நேற்று நடந்த 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்திருக்கிறார். 1998 ஃபெடரேஷன் கோப்பையில் 23.3 நொடிகளில் பி.டி.உஷா முடித்ததுவே இதுவரையில் சாதனையாக இருந்தது. இந்த தகுதி சுற்றில் ஹீமா தாஸ் இரண்டாவதாகத்தான் வந்தார்.

இப்படி முன்னணி வீரர்களை வீழ்த்துவது, சாதனைகளை முறியடிப்பது என அசத்திக்கொண்டிருக்கும் தனலட்சுமி திருச்சியைச் சேர்ந்தவர். 22 வயதேயான அவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். இளம் வயதிலேயே தந்தையை இழந்த தனலட்சுமி வறுமையின் பிடியில் கடுமையாக அவதிப்பட்டார். மூன்று பெண் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்கவும் வைத்தார் அவர் அம்மா. அவர் திறமையைப் பார்த்த பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகம் அவருக்குத் தேவையான உதவிகள் செய்து விளையாட்டுத் துறையில் சாதிக்க உதவி செய்துவருகிறார்.

ஆரம்பத்தில் கோ கோ விளையாட்டில் ஆர்வம் காட்டிய தனலட்சுமியை தடகளம் பக்கம் திருப்பியது அவர்தான். 31 வயதேயான மணிகண்டனும் ஒரு தடகள வீரர்தான். மங்களூரில் உள்ள ஆல்வா கல்லூரியில் படித்த தனலட்சுமி, அந்த ஊரில் நடந்த பல்கலைக்கழக போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். அதுதான் அவரின் முதல் வெற்றி. அதன்பின் தன் கடின உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் முன்னேறினார். கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த தடகள வீராங்கனை விருது இவருக்குக் கிடைத்தது.

ஃபெடரேஷன் கோப்பை 100 மீட்டர் ஓட்டத்தில் வென்றதும் ட்ராக்கை வணங்கிய தனலட்சுமி, தன் காலணிகளைக் கழற்றி முத்தமிட்டார். அது ஏன் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, “கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, என் தந்தையை நினைத்துப் பார்த்தேன்” என்றபோது தனலட்சுமியின் கண்கள் கலங்கியிருந்தது.